Published:Updated:

தி.மு.க:`பொதுச் செயலாளர் பதவி; திடீர் கோபம் ஏன்?’ - கொதித்த துரைமுருகன்

துரைமுருகன்
துரைமுருகன்

துரைமுருகனுக்குப் பொதுச் செயலாளர் பதவி கொடுப்பதில், தி.மு.க தலைமை தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் உலாவுகின்றன.

நையாண்டி, கலகலப்பு, கண்ணீர் என நவரசத்தால் அரசியல் களத்தில் கலக்குபவர் தி.மு.க பொருளாளர் துரைமுருகன். ஊரடங்கு காரணமாக, ஏலகிரி சொகுசு பங்களாவில் ஓய்வெடுக்கும் துரைமுருகன், `கழகத்துக்குள் கலகம்’ என்று வெளியாகியிருந்த ஓர் பத்திரிகையின் தலைப்புச் செய்திக்கு அறிக்கையின் மூலம் கோபத்தைக் கொட்டியிருந்தார்.

``பொதுச் செயலாளர் பதவி கிடைக்காத ஏக்கத்தில் கழகத்துக்குள் நான் கலகத்தை உருவாக்க முனைவதுபோன்ற செய்தியை வெளியிட்டு என்மீது களங்கம் கற்பிக்கிறார்கள். என் வரலாறு தெரியுமா? போராளியாக இந்தக் கழகத்துக்குள் வந்தவன். பதவிக்காக வந்தவன் இல்லை. நான் ஓர் லட்சியவாதி’’ என்று அடுக்குமொழி வசனத்தால் தெறிக்கவிட்டிருந்தார் துரைமுருகன்.

துரைமுருகன்
துரைமுருகன்

பொதுவாகவே, எந்தவொரு விமர்சனச் செய்திக்கும் முக்கியத்துவம் கொடுக்காத துரைமுருகன் திடீரென்று பொங்கியதுதான் தமிழக அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தக் காரணம். கறுப்பர் கூட்டம் ஏற்படுத்திய சர்ச்சை, மாரிதாஸ் சர்ச்சை போன்றவற்றில் சிக்கியிருக்கும் தி.மு.க-வில் உட்கட்சி விவகாரமும் நீறுபூத்த நெருப்புப் போன்று புகைந்து கொண்டிருக்குகிறது. இந்நிலையில், வி.பி.துரைசாமி, கு.க.செல்வத்தைத் தொடர்ந்து அடுத்த விக்கெட் துரைமுருகன்தான் என்று கொளுத்திப்போட்டார் அமைச்சர் ஜெயக்குமார்.

``திராவிட இயக்கத்தின் பாசம் துரைமுருகன் மீது இருக்கிறது. அவர் அ.தி.மு.க-வுக்கு வந்தால் சிவப்பு கம்பளம்போட்டு வரவேற்க எங்களது இயக்கம் தயாராக இருக்கிறது’’ என்றும் அழைப்புவிடுப்பது போல் துரைமுருகனை கோத்துவிட்டார் ஜெயக்குமார். அறிவாலயம் வந்திருந்த துரைமுருகன், மனக் குழப்பத்தில் மீண்டும் ஏலகிரி பங்களாவுக்கே திரும்பிவிட்டார்.

துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி கிடைப்பதில் உள்ள சிக்கல்களுக்கான காரணம் குறித்து தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவிக்கு இதுவரை முதலியார் சமூகத்தினர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

துரைமுருகன்
துரைமுருகன்

பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் அன்பழகன் எனக் கடந்தகால பொதுச் செயலாளர்கள் அனைவருமே முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அப்படியிருக்கும்போது, வன்னியரான துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பொறுப்பு கொடுப்பதில் தலைமைத் தயக்கம் காட்டுவதாகத் தகவல்கள் உலாவிக்கொண்டிருக்கின்றன. இதற்கான பதில்களைப் பெற துரைமுருகனை போனில் தொடர்புகொண்டு பேசினோம்.

``கழகத்துக்குள் கலகம் என்ற செய்திக்கு திடீரென்று கோபத்தை வெளிப்படுத்தியது ஏன்?’’ என்று கேள்வி எழுப்பினோம்.

``அதுக்கு என்ன இப்போ... அறிக்கையிலேயே பதில் சொல்லிட்டேன். வேற ஏதாவது கேள்வி இருந்தா கேளுங்க?’’ என்றவரிடம், பொதுச் செயலாளர் பதவி கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து கேள்வி எழுப்பியபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார் துரைமுருகன்.

அடுத்த கட்டுரைக்கு