Published:Updated:

`என் மகனை அவன்தான் ஜெயிக்க வைச்சான்.. தளபதிகிட்ட சொல்லிட்டேன்!’ -துரைமுருகனின் சர்ச்சை வீடியோ

துரைமுருகன்
துரைமுருகன்

``என்னைப் பொறுத்தவரை, சாரதி குமார் எனக்கு வேண்டும் என்று நான் தளபதிகிட்ட சொல்லிட்டேன். அவன்தான் என் பையனை ஜெயிக்க வைச்சான்’’ என்று பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவருக்கு ஆதரவாக துரைமுருகன் பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகர தி.மு.க பொறுப்பாளர் சாரதி குமார் மீது அவரின் மனைவி ரம்யா, கடந்த 21-ம் தேதி, சென்னை பெருநகரக் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்தார். ``தன்னுடைய சொத்துகளை அபகரித்துக்கொண்ட கணவன் சாரதி குமார், தன் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்துவருகிறார்’’ என்று புகார் மனுவில் கூறியிருந்தார் ரம்யா. இந்த விவகாரம் தொடர்பாக அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் பஞ்சாயத்து நடந்ததாகக் கூறப்பட்டது. அதையடுத்து, வாணியம்பாடி நகரப் பொறுப்பிலிருந்து சாரதி குமார் பதவியை ராஜினாமா செய்தார்.

சாரதி குமார்
சாரதி குமார்

அதேபோல், சாரதி குமார் விவகாரத்தைக் காவல்துறை மற்றும் ஊடகங்கள் வாயிலாகப் பெரிதுபடுத்தியதாகக் கூறி வேலூர் மேற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஏ.சி.தேவகுமாரையும் அப்பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கியது, தி.மு.க தலைமை. இந்த நிலையில், சாரதி குமாரின் ஆதரவாளர்கள், தி.மு.க பொருளாளர் துரைமுருகனை காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து, ``சாரதி குமாருக்கு மீண்டும் நகரப் பொறுப்பு வழங்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, துரைமுருகன் பேசியதை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகப் பரப்பினர். அந்த வீடியோவில், ``என்னைப் பொறுத்தவரை, சாரதி குமார் எனக்கு வேண்டும் என்று நான் தளபதிகிட்ட சொல்லிட்டேன். அவன்தான் என் பையனை ஜெயிக்க வைச்சான். கட்சியைக் காப்பாற்றியிருக்கிறான். வாணியம்பாடிக்கு சாரதி மீண்டும் வேண்டும். நீங்க பேசாமல் போங்க, அமைதியாகப் போங்க. பழைய படி பதவியைத் தந்துவிடுகிறேனு ஸ்டாலின் சொல்லிட்டார்’’ என்று துரைமுருகன் கூறுகிறார்.

ரம்யா
ரம்யா

அவரைச் சுற்றி நின்றிருந்த சாரதி குமாரின் ஆதரவாளர்கள், ‘‘இந்த வார்த்தை போதும் தலைவரே... கூடிய சீக்கிரம் சாரதியைப் பதவியில் சேக்குறதுக்கான வழியைப் பாருங்க’’ என்று கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். துரைமுருகனும் `சரி’ என்று கூறி அவர்களை அனுப்பிவைக்கிறார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து துரைமுருகன் மீதும் சர்ச்சை கிளம்பியது. ‘பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவருக்கு ஆதரவாகப் பொருளாளரே இப்படி சாதகமாகப் பேசலாமா...?’ என்று தி.மு.க-வினர் சிலர் பேச சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகளும் வலம்வந்தன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதுதொடர்பாக, சாரதி குமாரிடம் பேசினோம். ‘‘எனக்குக் கழகம் தான் எல்லாமே. சொந்தமாகத் தொழில் செய்றேன். மற்றவர்கள் மாதிரி கட்சிப் பொறுப்பிலிருந்து கான்டிராக்ட் போன்ற எந்தத் தொழிலையும் எடுத்துச் செய்வதில்லை. அது, என் குடும்ப விவகாரம். சிலர் வேண்டுமென்றே என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள். என் மீதான புகாரில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கத்தான் பொறுப்பிலிருந்து விலகினேன். என் மனைவி ஒரு கோடி ரூபாய் கேட்கிறார். அவ்வளவு பெரியத் தொகையை என்னால் கொடுக்க முடியாது என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளேன்.

துரைமுருகன்
துரைமுருகன்

என் ஆதரவாளர்கள், பெரியவர் துரைமுருகனைப் பார்த்து வலியுறுத்தினார்கள். வேண்டாதவர்கள் யாரோ, வீடியோ எடுத்து பொருளாளர் குறித்து அவதூறு பரப்பியுள்ளனர். அவ்வளவு பெரிய தலைவர், என் ஆதரவாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாகவும் திருப்திப்படுத்தவும் பேசியிருக்கிறார். அது, எங்களுக்கு மகிழ்ச்சிதான். என்னைப் பொறுத்தவரை கட்சித் தலைமைக்கும் தளபதிக்கும், பொருளாளருக்கும் கட்டுப்பட்டு அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்வேன்’’ என்றார் விளக்கமாக.

அடுத்த கட்டுரைக்கு