Published:Updated:

`அடேயப்பா... எப்படிப் பேசுகிறார்!' - முதல்வரை வெட்கப்பட வைத்த தி.மு.க பொருளாளர்

அ.சையது அபுதாஹிர்

முதல்வர் இதற்கு பதில் அளிப்பார் என துரைமுருகன் எதிர்பார்த்தார்.ஆனால், துணை முதல்வரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து பதிலளித்தார்.

துரைமுருகன்
துரைமுருகன்

சட்டப்பேரவையில் பட்ஜெட்க்கு பின்பு நடைபெறும் துறைரீதியான மானிய கோரிக்கைகள் நடைபெற்று வருகிறது. மானிய கோரிக்கைள் துவங்கும் முன்பு கேள்வி நேரத்திற்கு சபாநாயகர் அனுமதித்துள்ளார். பல சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகள் குறித்து கொடுக்கபட்ட கேள்விகளுக்கு சம்பந்தபட்ட துறை அமைச்சர் அந்த நேரத்தில் பதில் அளிப்பது வழக்கம்.

துரைமுருகன் -எடப்பாடி பழனிசாமி
துரைமுருகன் -எடப்பாடி பழனிசாமி

அதேபோல்,பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிவுறுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். உடனே குறுக்கிட்டு எழுந்து பேசிய எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன், “கேள்வி நேரத்தை குறைத்து கொள்ளலாமா என நேற்று கேட்டேன்.ஆனால் குறைத்துக்கொள்ள முடியாது என சொன்னீர்கள், நானும் ஒற்றுக்கொண்டேன்.

காமராஜர் , அண்ணா காலம் முதல் கருணாநிதி ஜெயலலிதா காலம் வரை இதுபோன்ற கேள்வி நேரத்தில் காவல்துறை, பொதுப்பணித்துறை , நெடுஞ்சாலை துறை தொடர்பான கேள்விகள் கட்டாயம் இடம் பெறும். குறிப்பாக இந்த மூன்று துறைகளும் முக்கியதுவம் வாய்ந்த துறைகள் என்பதால் இதுகுறித்த சட்டமன்ற உறுப்பினர்கள் நிறைய கேள்விகளை கேட்பார்கள். ஆனால் நீண்ட காலமாக இந்த துறைகளில் கேள்விகள் வருவதில்லை. இந்த மூன்று துறைகளுமே முதல்வரின் வசம் உள்ளது

தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்
தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள்

முதல்வர் ஒன்றும் பதில் சொல்ல முடியாதவர் அல்ல, அவர் நன்கு தேரிவிட்டார்.அடேயப்பா! அவர் பதிலளிப்பதை பார்த்து நானே பலமுறை அசந்து போய் இருக்கிறேன், அந்த அளவுக்கு சிறப்பாக பதிலளிக்கிறார். எனவே, நாளை முதல், பொதுப்பணி நெடுஞ்சாலை மற்று காவல்துறை தொடர்பான கேள்விகள் இடம் பெறும் என எதிர்பார்க்கிறேன்” என்றார். அப்போது முதல்வர் உட்பட சபையலிருந்த அனைத்து உறுப்பினர்களும் சிரித்துவிட்டனர்.

முதல்வர் இதற்கு பதில் அளிப்பார் என துரைமுருகன் எதிர்பார்த்தார்.ஆனால், துணை முதல்வரும் அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் எழுந்து “முதல்வர் வகித்து வரும் அனைத்து துறைகளிலும் நீங்கள் எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிக்க முதல்வர் தயாராகவே இருக்கிறார், இனி முதல்வரின் துறைகளிலும் கேள்விகள் இடம் பெறும்” என்று பதில் அளிக்க சுவையுடன் முடிந்தது இந்த விவாதம்.