Published:Updated:

துர்கா ஸ்டாலின் எனும் நான்... குடும்பம் முதல் அரசியல் வரை - மனம் திறக்கும் முதல்வரின் மனைவி

துர்கா ஸ்டாலின்

- மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான ஆர்.லோகநாயகி

துர்கா ஸ்டாலின் எனும் நான்... குடும்பம் முதல் அரசியல் வரை - மனம் திறக்கும் முதல்வரின் மனைவி

- மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் பத்திரிகை ஆசிரியருமான ஆர்.லோகநாயகி

Published:Updated:
துர்கா ஸ்டாலின்
`முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்...' - இப்படிச் சொல்லி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற அந்த கம்பீர நொடி... நெகிழ்ச்சித் தருணமாகவும் மாறியது. காரணம், முதல் வரிசையில் அமர்ந்தபடி அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் நெகிழ்ந்து வடித்த ஆனந்தக்கண்ணீர்.

வலிகள், போராட்டங்கள், தோல்விகள், அவ மானங்கள், கிண்டல்கள், கேலிகள் என எண்ணற்ற வற்றைக் கடந்து கணவர் அடைந்திருக்கும் இந்த வெற்றி, நிச்சயம் துர்கா ஸ்டாலினின் மனதை நெகிழ வைத்து, கண்ணீர்த்துளிகளைப் பூக்கத்தானே வைக்கும். கணவரின் வெற்றி, மகனின் அரசியல் பிரவேசம், மருமகனின் ஆதரவு, மாமனாருடனான கடைசி நிமிடங்கள் என பல விஷயங்களையும் பற்றி இங்கே மனம்திறக்கிறார் துர்கா ஸ்டாலின்.
 கணவருடன்...
கணவருடன்...

கொரோனா சூழலில் குடும்பத்தையே தேர்தல் களத்துக்கு அனுப்பி வெச்ச அனுபவம் எப்படி இருந்தது... நீங்க அவர்களுக்கு அறிவுறுத்தின தற்காப்பு நடவடிக்கைகள்...

உண்மையில் கொரோனாவை நினைச்சு கொஞ்சம் பயமாத்தான் இருந்தது. ஆனா, தவிர்க்கவும் முடியல. போற இடங்களில் எல்லாம் மக்கள் இவங்களை பக்கத்தில் பார்க் கணும் பேசணும்னுதான் வருவாங்க. மாஸ்க் இல்லாமலும் இருப்பாங்க. பிரசாரத்தோட ஆரம்ப கட்டங்களில், இவங்களும் மாஸ்க்கை கழட்டினபடியே பேசிட்டு இருப்பாங்க. நான் அந்த சமயங்களில் இவங்ககூட போகலேன்னா, நியூஸ்ல அதைப் பார்த்துட்டு, உடனே, `மாஸ்க் போடச் சொல்லுங்க தினேஷ்'னு இவங்க பி.ஏ-வுக்கு போன் பண்ணுவேன். மாஸ்க் போட்டா, இவங்க முகம் தெரியலன்னு நிறைய இடத்தில் மக்கள் கேட்டுகிட்டதாலும், இவங்க மாஸ்கை கழட்டிட்டுப் பேசியிருக்காங்க. ஆனா, அப்புறம் கடைசி சில நாள்களில், கொரோனா பாதிப்புகள் அதிகமாகிறதைப் பார்த்து, மேடை யிலேயே இவங்களே, `எல்லாரும் கட்டாயமா மாஸ்க் போட்டுக்கங்க. தடுப்பூசி போட்டுக் கங்க'ன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.

நானும் கொளத்தூர் தொகுதிக்கு ஓட்டு கேட்கப் போனப்போவும், `எல்லாரும் மாஸ்க் போட்டுட்டு வாங்க, கை கொடுக்காதீங்க, பாதுகாப்பா இருப்போம்'னு சொல்லிட்டே இருந்தேன். ஆனா பாருங்க, கிளம்புறப்போ எல்லோருமே ஒரு போட்டோ எடுக்கணும்னு சொல்லிட்டு மாஸ்க் எல்லாம் கழட்டிட்டு நிப்பாங்க. நாமளும் கழட்டித்தான் ஆகணும், வேற வழியில்ல. நாம மக்களை சொல்றோம், ஆனா, அது மாதிரி நேரத்தில் நாம மறுக்க முடியாது. என்ன... கொரோனா தற்காப்பு நடவடிக்கையா மூலிகை கஷாயம் எடுத்துப் பேன். இவங்களுக்கும் தருவேன். பத்து மூலிகை களைப் போட்டு அரைச்சு வச்சிருக்கேன். அதோடு ஆடாதொடை, கற்பூரவள்ளி, துளசி யைப் போட்டு காய்ச்சிக் குடிப்பேன். பொது வாகவே, நான் சின்ன வயசுல இருந்தே வெந்நீர் தான் குடிப்பேன். உதயாவை நினைச்சுதான் எனக்கு ரொம்ப பயம். அது சில நேரத்தில் மாஸ்க் போடாது. ஏதாவது கஷாயம் கொடுத் தாலும் குடிக்காது. எங்க வீட்டுக்காரங்களுக்கு மருந்துன்னு எதை வேணும்னாலும் கொடுக்க லாம். குடிச்சுடுவாங்க. ஆனா, உதயா மறுத்துடும்.

போன வருஷம்கூட, இவங்க மக்கள் மத்தியில்தான் இருந்தாங்க. மக்களுக்குத் தேவையான பொருள்களைக் கொண்டுபோய் சேர்க்கிறதுக்காக, `ஒன்றிணைவோம் வா’ நிகழ்ச்சிக்காக இவங்க நிறைய இடங்களுக்குப் போவாங்க. அப்பல்லாம் தடுப்பூசிகூட வராத காலகட்டம். கொரோனா பத்தி ஆளாளுக்கு ரொம்ப பயமுறுத்திட்டும் இருந்தாங்க. என்ன பண்றது, அரசியல் வாழ்க்கையில் நாம் அதெல்லாம் பார்க்க முடியாதே.

 சபரீசன், உதயநிதி
சபரீசன், உதயநிதி

கணவருடைய வெற்றிக்கு உங்களுடைய பக்தியும் பிரார்த்தனைகளும்தான் காரணம்னு சமூக ஊடகங் களில் பேசுறாங்களே...

என்னோட பிரார்த்தனையைவிட, இவங் களுக்காக பிரார்த்தனை பண்ணின கோடானு கோடி ஜனங்களோட பிரார்த்தனை ரொம்ப பெருசு. எத்தனையோ பேர் என்னைப் பார்க் கிறப்போ எல்லாம், ‘இவங்கதான் கண்டிப்பா ஜெயிப்பாங்க. சார் ஜெயிக்கணும்னு கோயில் கோயிலா வேண்டிட்டேன்'பாங்க. சிலரோட வேண்டுதல்களும், முரட்டுத்தனமான பக்தியும் என்னைப் பதற அடிச்சுடுச்சு. ஒருத்தர் அவரோட விரலையே துண்டிச்சுகிட்டார், இன்னொரு பெண்மணி, தன்னுடைய நாக் கையே துண்டிச்சுகிட்டாங்கன்னு கேள்விப் பட்டப்போ மனசு பதறுச்சு.

46 ஆண்டுக்கால திருமண வாழ்க்கையில் கணவரின் கடவுள் மறுப்புக் கொள்கையும் நாத்திக சிந்தனையும் உங்களைத் துளியும் அசைக்காமல் எப்படிப் பார்த்துக்கிட்டீங்க?

நான் கோயிலுக்குப் போவதைப் பற்றியோ, பக்தியோடு இருக்கிறது பற்றியோ என்னிக்குமே இவங்க தலையிட்டது கிடையாது. இவங்க கிட்ட சொல்லிட்டுத்தான் நான் கோயில்களுக்கு கிளம்புவேன். இவங்க என்னிக்குமே மறுத்த தில்லை. தன் கருத்தை வலியுறுத்தினதும் இல்லை. நான் கோயிலுக்குப் போயிட்டு வந்து தர்ற பிரசாதங்களையும் இவங்க வாங்கிப்பாங்க.நான் சின்ன வயசிலிருந்து கோயில்களுக்குப் போயிட்டு, பூஜை பண்ணிட்டு இருக்கேன். இவங்க கொள்கையில் இவங்க இருக்காங்க. என் பக்தியில் நான் இருக்கேன்.

கருணாநிதியின் இறப்பிலிருந்து ஸ்டாலின் எப்படி மீண்டார், மீட்டெடுத்ததில் உங்க பங்கு என்ன?

தன்னோட அப்பாவை, அப்பான்னு கூப் பிடாமல், தான் சார்ந்து இருக்கக்கூடிய இயக்கத்தோட தலைவராவே பார்த்து, மதிச்சு ‘தலைவர்’னு குறிப்பிடுறவங்க இவங்க. அதனால அப்பாவுடைய உடம்பு சரியில்லாத அந்தக் கடைசி நாள்களில், அவர் அந்த விஷயத்தைத் தாங்க முடியாமல் பயங்கர டென்ஷனுக்கும் மன அழுத்தத்துக்கும் உள்ளாயிட்டார். அந்த பிரஷரில் அவங்க கண்ணுகூட அப்படியே சிவப்பு நிறத்தில் மாறிப் போச்சு. டென்ஷன்தான் காரணம்னு டாக்டரும் சொல்லிட்டாங்க. அந்த நிலையில் அப்பாவோட இழப்பு, ஒரு மகனா இவங்களால் உண்மையில் தாங்கிக்கவே முடியல. மாமா உடல் ராஜாஜி ஹால்ல இருந்தப்போ, அங்கிருந்த உள் அறைக்கு வந்த இவங்க அப்படியே கதறி அழுதுட்டாங்க.

அதிலயும் ஒரு மகனா அவருக்கான மரியாதையைச் செய்ய முடியாம போயிடுமோங் கிற தவிப்பு இவங்களுக்கு. மெரினாவில் இவங்க எவ்வளவோ முயற்சி பண்ணியும் இடம் கிடைக்காத நிலை. தீர்ப்பு வந்ததுக்கு அப்புறம்தான் நிம்மதி ஆனாங்க. அப்பா இழப்பு அவரை ரொம்பவே பாதிச்சது. இவங்க முகத்தைப் பார்த்தே இவங்க மனசு புரியும் எனக்கு. இவங்க அந்த இழப்பில் வேதனையோடு இருக்கிறப்போ, இவங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் ஏதாவது பேசுவேன். வீட்ல, பேரக் குழந்தைகள் உட்பட எல்லோருமே இவங்க கிட்டே பேசிட்டு இருப்போம். தவிர, அந்த சமயங்களில் கட்சியில் இவரது பொறுப்பு கூடுதலாக இருந்ததால் அதற்கான பணிகளில் இவர் உழைப்பும் கூடுதலா தேவைப்பட்டது. அந்தப் பணிகளின் மூலமும் இவங்க தன்னை கொஞ்சம் மறந்தாங்க.

முதல்வராக இருப்பதற்கு இணையானது முதல் வரின் மனைவியாக இருப்பது. நீங்க இதை எப்படி எதிர்கொள்ளப் போறீங்க?

நான் அரசியல்வாதியோட மனைவியா, அரசியல் குடும்பத்தில்தான் 45 வருஷமா வாழ்ந்துகிட்டிருக்கேன். அதனால எனக்கு இது புதுசு இல்ல. இந்தச் சூழலில் நமக்கு பொறுப்பு எப்பவுமே அதிகமாயிருக்கும். எங்க வீட்டுக் காரங்களுக்கு எப்பவுமே நான் எல்லா விஷயத் துலயும் உறுதுணையாய் இருக்கேன். நிறைய பேர் வந்து பேசுவாங்க, அவங்க குறைகளைச் சொல்வாங்க. சிலர் விமர்சனம் செய்வாங்க. எல்லாத்தையும் விருப்பு வெறுப்பு இல்லாம கவனிச்சு குறிப்பெடுத்துக்கணும். இந்த மாதிரி அவங்களுக்கு உதவுற ஒரு மனைவியா இருப்பேனே தவிர, அவங்களுக்கு அரசியல் விஷயங்களில் ஆலோசனை சொல்லக்கூடிய ஒருத்தரா நான் இருக்க மாட்டேன். அது போல இருக்கிறது எனக்கும் பிடிக்காது. நான் அப்படி இருக்கிறதை இவங்களும் விரும்பவே மாட்டாங்க. அரசியல் விஷயங்கள் என்று வந்தால், `நான் பார்த்துக்கிறேன்'னு சொல்லிடு வாங்க. நிறைய பேரு அது தெரியாம, அரசியல்ல நான் தலையிடுறேன்னு சொல்றப்போ, எனக்கு வேடிக்கையாத் தான் இருக்கும்.

துர்கா ஸ்டாலின் எனும் நான்... குடும்பம் முதல் அரசியல் வரை
- மனம் திறக்கும் முதல்வரின் மனைவி

ஸ்டாலினுக்கு விருப்பமான உணவு... விருப்பமான இடம், விருப்பமான பாடல்...?

அவங்களுக்கு வெஜிடேரியன் உணவு ரொம்ப பிடிக்கும். நிறைய காய்கறிகள் போட்டு அல்லது கீரை சமைச்சுக் கொடுத்தா, நல்லா சாப்பிடுவாங்க. சாம் பாரைவிட, வத்தக்குழம்பு ரொம்ப பிடிக் கும். சாப்பாட்டில் இதுதான் வேணும், இப்படித்தான் வேணும்னு எல்லாம் கிடையாது. எது கொடுத்தாலும் விருப்பமா சாப்பிடுவாங்க. ஆனா, கொஞ்சம்தான் சாப்பிடுவாங்க. நான்-வெஜ்ஜில் நான் செய்ற மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும்.

இவங்களுக்கு தமிழகம் முழுக்கவே பிடிக்கும். பயணிச்சுட்டே இருப்பாங்க. இவங்க கால்படாத ஊர் எது? அதிலேயும் இயற்கை எழிலோட இருக்கிற கிராமங் கள்னா இன்னும் ரொம்ப பிடிக்கும்.

வெளிநாடுன்னு சொன்னா, இவங்களுக்கு விருப்பமான இடம், லண்டன். காரணம், அங்கே இயற்கையான பார்க்குகள் நிறைய இருக்கும். வாக்கிங் போவாங்க. இவங்களால் நம்ம ஊர்ல ரோடுகளில் ஃப்ரீயா நடந்து போக முடியாது. லண்டங்கிறதால், இவங்க பாட்டுக்கு வாக்கிங், ஷாப்பிங்னு என்கூட வருவாங்க. பழைய சினிமா பாடல்கள்தான் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். குறிப்பா, எம்.ஜி.ஆர் பாடல்கள்.

பிசியான ஆண்களின் மனைவிகள் எல்லோருக்கும் ‘கணவருடன் ஒரே ஒருநாள்’ என்ற ஆசை இருக்கும். உங்களுக்கு?

எங்க வீட்டுக்காரங்க ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லைன்னாலும் சரி, இவங்க எப்பவுமே ஏதாவது செஞ்சுட்டேதான் இருப்பாங்க. கட்சி நடவடிக்கைகள்ல ஈடுபட்டுட்டே தான் இருப்பாங்க. அதனால டைமே இருக்காது. அவங்க, என்னோட உட்கார்ந்து நிம்மதியா பேசிட்டு இருக்கணும், குடும்பத்தினரோடு நேரம் எடுத்து நல்லா சந்தோஷமா இருக்கணுங்கிறதுதான் எனக்கு ஒரு மனைவியா எப்பவுமே ஆசை. தவிர, எப்பவுமே எங்களுக்கு எங்கேயாவது தூரமா கார் ஓட்டிட்டு பயணம் போறது ரொம்ப பிடிச்ச விஷயம். முன்பெல்லாம் எப்போதாவது நேரம் கிடைச்சா கார்ல எங்களை ஏத்திட்டு தூரமா ஓட்டிட்டுப் போவாங்க. ஆனா, என் ஆசை இப்போ முக்கிய மில்லை. இப்போ இவங்க ஆட்சி ஆரம்பிச்சிருக்கு. ஜனங்க ஆசைக்குத் தான் முக்கியத்துவம். அதுக்கு என் கணவர் என்னல்லாம் பண்ணணும், இதில் மனைவியா நான் இவங்களுக்கு என்ன உதவி பண்ண முடியும் அப்படிங்கறதுதான் இப்போதைக்கு என் ஆசை

உழைப்புக்காகப் பெயர் பெற்றவங்க கருணாநிதியும் ஸ்டாலினும். உதயநிதியைப் பார்த்தா ஜாலிபாயாக இருக்கார். அரசியல் களத்துக்காக உழைப்பைக் கொடுக்க அவரால் முடியுமா... அம்மாவா நீங்க என்ன சொல்வீங்க...

உதயா, அவங்க அப்பாவைப் போலத்தான் ஒரு வேலைன்னு இறங்கிட்டா, ரொம்ப சின்சியரா உற்சாகமா செஞ்சு முடிக்கப் பார்க்குது. நேரம் காலம் பார்க்கிறதில்லே. அதேபோல், தேவைப்படுற நேரங்களில் உழைப்புக்கோ, பயணத்துக்கோ தயங் கறதில்லை. ஜனங்களை சந்திக்கிறதிலும் ரொம்ப ஆர்வமா இருக்கு. அதனால் தன் தாத்தா போல, அப்பா போல உழைப்பைத் தரத் தயங்காது.

 ஆர்.லோகநாயகி
ஆர்.லோகநாயகி

வெற்றியில் உங்கள் மருமகன் சபரீசனின் பங்கு எப்படிப்பட்டது?

நிச்சயம் எங்க மாப்பிள்ளையோட பங்கு இதில் நிறைய இருக்கு. எங்க பையன் உதயா இந்தத் தேர்தலில் களத்தில் முன்னால் நின்னு உழைச்சிருக் குன்னா, எங்க மாப்பிள்ளை, பின்னணியில் இருந்து நிறைய ஹார்ட் வொர்க் பண்ணியிருக்காங்க. இவங்க ஜெயிச்சதில் மாப்பிள்ளை சப்போர்ட் நிறையவே இருக்கு.