Election bannerElection banner
Published:Updated:

`ஸ்டாலினுக்கு பெருமாள் மேல் பக்தி உண்டா? - துர்கா ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய மூதாட்டி!

பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின்
பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின்

தென் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுவரும் ஸ்டாலினுடன் வந்திருக்கும் துர்கா ஸ்டாலின் நாங்குநேரி வானுமாமலை பெருமாள் கோயிலில் வழிபாடு நடத்தினார். அவரிடம் மூதாட்டி ஒருவர், ஸ்டாலினுக்கு பெருமாள் மீது பக்தி இருக்கிறதா எனக் கேள்வி எழுப்பினார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் `உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் வந்துள்ளார்.

நாங்குநேரி பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின்
நாங்குநேரி பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின்

துர்கா ஸ்டாலின் நேற்று நெல்லை மாவட்டம், நாங்குநேரியிலுள்ள வானுமாமலை பெருமாள் கோயிலுக்குச் சென்றார். கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகளில் அவர் பங்கேற்றார். பின்னர் நாங்குநேரி ஜீயரான வானுமாமலை மதுரகவி ராமானுஜ ஜீயரிடம் சிறப்பு ஆசி பெற்றார்.

துர்கா ஸ்டாலின் வானுமாமலை கோயில் வளாகத்தைச் சுற்றிப் பார்த்தபோது, அங்கு 88 வயது மூதாட்டி ஒருவர் வந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் அருகில் சென்று வாஞ்சையுடன் மூதாட்டியின் கைகளைப் பற்றிய துர்கா ஸ்டாலின், அவரிடம் பேசினார்.

ஜீயரிடம் ஆசீர்வாதம் பெறும் துர்கா ஸ்டாலின்
ஜீயரிடம் ஆசீர்வாதம் பெறும் துர்கா ஸ்டாலின்

கேள்வித்திறன் சற்று குறைவாக இருந்த அந்த மூதாட்டியிடம் அங்கிருந்த கோயில் பணியாளர்கள், `கோயிலுக்கு வந்திருப்பது ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின்’ எனச் சொன்னார்கள். அதைப் புரிந்து கொண்ட அந்த மூதாட்டி, ``கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டது சந்தோஷமா இருக்கு” என்று சொன்னார்.

அந்த மூதாட்டியிடம் துர்கா ஸ்டாலின், வயது என்ன எனக் கேட்டார். அவர் 88 வயதாகிறது எனச் சொன்னார். பின்னர் அந்த மூதாட்டி, ``நீங்க பெருமாளைச் சேவிக்க வந்திருக்கீங்க. உங்க வீட்டுக்காரருக்கு பெருமாள் மேல் பக்தி இருக்கா... அவர் பெருமாள் கோயிலுக்கு வருவாரா?’’ எனக் கேட்டார்.

துர்கா ஸ்டாலினிடம் பேசிய மூதாட்டி
துர்கா ஸ்டாலினிடம் பேசிய மூதாட்டி

மூதாட்டியின் கேள்வியால் துர்கா ஸ்டாலினும் அவருடன் வந்திருந்தவர்களும் சற்று அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட துர்கா ஸ்டாலின், ``அவரும் கோயிலுக்கு வருவார்’’ எனச் சொல்லி சமாளித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு