Published:Updated:

`ஹரியானாவின் `கிங்’கா.. `கிங் மேக்கரா'! - யார் இந்த துஷ்யந்த் சவுதலா?

ஹரியானா தேர்தலில் 31 வயதான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த சவுதலா அதிகம் கவனம் பெறுகிறார்.

துஷ்யந்த் சவுதலா
துஷ்யந்த் சவுதலா

ஹரியானா அரசியலில் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார் துஷ்யந்த சவுதலா. ஹரியானாவில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 45 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்கலாம். காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரு கட்சிகளுக்கும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கவில்லை. மாநில கட்சியான ஜனநாயக ஜனதா கட்சி யாருக்கு ஆதரவு கொடுக்கிறதோ அந்தக் கட்சியே ஆட்சியில் அமரமுடியும். இதன்காரணமாக 31 வயதான ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதலா அதிகம் கவனம் பெறுகிறார். இந்தக் கட்சி தொடங்கி இன்னும் ஓராண்டு நிறைவடையவில்லை என்பது கூடுதல் தகவல்.

துஷ்யந்த் சவுதலா.
துஷ்யந்த் சவுதலா.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள சவுதாலா, ``ஹரியானாவின் கிங் மேக்கராக என் கட்சி இருக்கும் என நான் நம்புகிறேன். மக்கள் மாற்றத்தை நோக்கி வாக்களித்துள்ளனர். ஹரியானா சட்டசபை ஜே.ஜே.பி-யின் சாவியால் திறக்கப்படும். எந்தக் கட்சிக்கும் போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க- காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது இடத்தில் ஜனநாயக ஜனதா கட்சி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜனநாயக ஜனதா கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே அங்கு ஆட்சி அமைக்கமுடியும் என்ற சூழல் உள்ளது” என்றார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் எனக்கு யார் முதல்வர் பதவி தருகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு என அறிவித்துவிட்டார் துஷ்யந்த் சவுதலா. ஜனநாயக ஜனதா கட்சி தொடங்கியே இன்னும் ஓராண்டு ஆகவில்லை அதற்குள் முதல்வர் கனவா எனக் கேட்கலாம்.

யார் இந்த துஷ்யந்த் சவுதலா!

ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மகன் வழிப்பேரன்தான் துஷ்யந்த் சவுதாலா. அமெரிக்காவில் சட்டம் பயின்றவர். இவரின் தந்தை முன்னாள் எம்.பி அஜய் சிங் சவுதாலா. துஷ்யந்த் இந்திய தேசிய லோக் ஜனதள கட்சியில் இளம்வயதிலே பொறுப்புக்கு வந்தார். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டு 31,847 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 26 வயதில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்வான இளம் எம்.பி என்ற பெருமையுடன் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார். ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டதாகக் கூறி 2018-ம் ஆண்டு கட்சியில் இருந்து ஓம் பிரகாஷ் சவுதாலா நீக்கப்பட்டார்.

துஷ்யந்த் சவுதலா.
துஷ்யந்த் சவுதலா.

இந்திய தேசிய லோக் தள் கட்சியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அஜய் சிங் சவுதாலா மற்றும் துஷ்யந்த் சவுதாலா ஆகியோர் ஜனநாயக ஜனதா என்ற புதிய கட்சியை உருவாக்கினர். கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்த இடைத்தேர்தலில் இவரது கட்சி போட்டியிட்டது. துஷ்யந்த் கட்சி இந்தத் தேர்தலில் 37,000 ஓட்டுகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தது. கட்சி தொடங்கியதும் நடத்தப்பட்ட முதல் பொதுக்கூட்டத்துக்கு 6 லட்சம் பேரை திரட்டி மாஸ் காட்டினார் துஷ்யந்த். இப்போது ஹரியானா மாநிலத்தில் ஆட்சியில் யார் அமர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளது இவரது ஜனநாயக ஜனதா கட்சி.