Published:Updated:

`திருவொற்றியூர், குடியாத்தத்துக்கு இடைத்தேர்தல் இல்லை!' - தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது?

இந்தியத் தேர்தல் ஆணையம்
இந்தியத் தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளுக்கு தற்போதைய சூழலில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

நாடு முழுவதும் காலியாக இருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, அஸ்ஸாம், கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் காலியாக இருக்கும் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

தேர்தல்
தேர்தல்

அந்த மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள்/தேர்தல் ஆணையர்கள், தேர்தல் நடத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்னைகள் தொடர்பாக கருத்து கூறியிருந்ததாகவும், அதன் அடிப்படையில் தற்போதைய சூழலில் தேர்தல் நடத்த வேண்டாம் என முடிவெடுத்திருப்பதாகவும் கூறியிருக்கிறது.

அரசியல் அலையடிக்கும் குமரி! - இடைத்தேர்தல் பரபரப்பு

தமிழகத்தின் திருவொற்றியூர், குடியாத்தம், அஸ்ஸாமின் ரங்கபாரா, சிப்சாகர், கேரளாவின் குட்டநாடு மற்றும் சாவாரா, மேற்குவங்கத்தின் ஃபலகாட்டா ஆகிய தொகுதிகளில் தற்போதைய சூழலில் இடைத்தேர்தல் நடத்தப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேநேரம், பீகாரில் காலியாக இருக்கும் ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் மணிப்பூரின் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 7-ல் வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மேலும், சத்தீஸ்கர், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், நாகலாந்து, ஒடிசா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 54 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 7-ம் தேதி நடைபெறும் எனவும், தேர்தல் முடிவுகள் நவம்பர் 10-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.

`இருதய பாதிப்பால் திடீர் மரணம்!’ -குடியாத்தம் எம்.எல்.ஏ காத்தவராயன் கடந்துவந்த பாதை

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தலைமைச் செயலாளர் சண்முகம், தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்தநிலையில், இடைத்தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாகக் கருத்து தெரிவித்திருக்கிறது. திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு இன்றோடு ஆறு மாதகால அவகாசம் முடிந்த நிலையில், அவை குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.

தேர்தல்
தேர்தல்

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டு ஆறு மாதங்கள் முடிவடையவில்லை. திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய இரண்டு தொகுதிகளுமே தி.மு.க வசமிருந்தவை. திருவொற்றியூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான கே.பி.பி.சாமி மற்றும் குடியாத்தம் தொகுதி காத்தவராயன் ஆகியோர் உடல்நலக் குறைவால் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தனர்.

அடுத்த கட்டுரைக்கு