Published:Updated:

வேலூர்: `சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறை!’ -துரைமுருகன் ஆதரவாளர்கள் கலக்கம்

துரைமுருகன்
துரைமுருகன்

`சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் விசாரணை மேற்கொள்ளலாம்’ என்று தகவல் வெளியாகியிருப்பதால், துரைமுருகனின் ஆதரவாளர் வட்டாரம் கலக்கமடைந்திருக்கிறது.

நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூரில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுன்தொடர்பாக, தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஆதரவாளர்களான பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன், கனரா வங்கியின் முன்னாள் சீனியர் மேனேஜர் தயாநிதி ஆகிய மூன்று பேர் மீது இந்த மாதம் 22-ம் தேதி சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து, சி.பி.ஐ (சென்னை ஊழல் தடுப்புப் பிரிவு) எஸ்.பி சரவணன் தலைமையில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது.

பூஞ்சோலை சீனிவாசன்
பூஞ்சோலை சீனிவாசன்

இந்தநிலையில், காட்பாடியை அடுத்த பள்ளிக்குப்பம் கீழ்மோட்டூரிலுள்ள பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். ``வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காக ரூ.11.48 கோடி மதிப்பிலான 500, 2,000 ரூபாய் நோட்டுகளை கனரா வங்கியில் 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றியது எப்படி... அந்தப் பணம் எம்.பி கதிர் ஆனந்த் பெயரில் பரிவர்த்தனை செய்யப்பட்டிருப்பதன் பின்னணி என்ன’’ ஆகியவை குறித்து பூஞ்சோலை சீனிவாசனிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.

வேலூர்: துரைமுருகன் ஆதரவாளர் வீட்டில் திடீர் ரெய்டு! - அதிரடிகாட்டிய சி.பி.ஐ

அடுத்தகட்டமாக கனரா வங்கியின் முன்னாள் மேனேஜர் உட்பட இரண்டு பேரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர சி.பி.ஐ முடிவுசெய்திருக்கிறது.

சி.பி.ஐ பதிவுசெய்திருக்கும் எஃப்.ஐ.ஆரில், ``வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்வதற்காகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 11.48 கோடி ரூபாய் பணத்தை தாமோதரன் மற்றும் சீனிவாசனிடமிருந்து பறிமுதல் செய்திருப்பதாக வருமான வரித்துறை நம்பகமான தகவலைக் கொடுத்திருக்கிறது. அந்தச் சமயத்தில், வேலூர் தேர்தல் ரத்துசெய்யப்பட்டதுடன் காட்பாடி காவல் நிலையத்தில் கதிர் ஆனந்த் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

துரைமுருகன் - கதிர் ஆனந்த்
துரைமுருகன் - கதிர் ஆனந்த்

இந்தச் சம்பவத்தில், 500, 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து 200 ரூபாய் நோட்டுகளாக மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதனால், வங்கி மேனேஜராக இருந்த தயாநிதி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். பூஞ்சோலை சீனிவாசன் இரண்டாவது குற்றவாளியாகவும், தாமோதரன் மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தயாநிதி மேனேஜராக இருந்தபோது அவர்மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்தும் கனரா வங்கியின் உதவி பொதுமேலாளர் விஜயலட்சுமி என்பவர் சி.பி.ஐ-க்கு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறார்.

சி.பி.ஐ-யைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் இந்த வழக்கில் விசாரணை மேற்கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. விசாரணையின் அடுத்தடுத்தகட்ட நகர்வுகளால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்கள்மீது சி.பி.ஐ கைது நடவடிக்கை எடுப்பதற்கும் வாய்ப்பிருப்பதால், துரைமுருகனின் ஆதரவாளர் வட்டாரம் கலக்கமடைந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு