Published:Updated:

இனியும் உள்ளடி வேலைகளைப் பார்த்தால்..? -தலைமைக் கழகத்தில் கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க ஆலோசனைக்கூட்டம்
அ.தி.மு.க ஆலோசனைக்கூட்டம்

சசிகலா, என்.எம்.நடராஜனின் சொந்த ஊர். அது சமுதாய பின்புலத்தையும் கொண்ட மாவட்டம் என்று சொல்லியிருக்கிறார். அதற்குக் குறுக்கிட்ட முதல்வர், நீங்களும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தானே என்று கேட்க ஒன்றும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிருக்கிறார்கள்.

``ஊரக உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் தவறு செய்தீர்கள் என்று விசாரிப்பதற்காக வரச்சொல்லவில்லை. தவறு செய்தவர்கள் திருத்திக்கொள்ளுங்கள். உள்ளடி வேலை பார்த்தவர்கள் நிறுத்திக்கொள்ளுங்கள். ஏப்ரல் மாதத்திலிருந்து அடுத்தடுத்து தேர்தல் வரப்போகிறது. அதற்காக நாம் தயாராக வேண்டும்" என்று அ.தி.மு.க நிர்வாகிகளிடம் கறாராகப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி. அத்தோடு தஞ்சை மாவட்டத்தைக் கோட்டைவிட்டதற்கு என்ன காரணம் என்று வைத்திலிங்கம் உட்படக் கட்சி நிர்வாகிகளிடம் மாத்தி மாத்தி கேள்விகளைக் கேட்டு குடைந்ததோடு வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து அனுப்பியிருக்கிறார் முதல்வர்.

அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்
அ.தி.மு.க ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க-வில் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 56 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து இன்று முதல் வரும் 13-ம் தேதி வரை மாவட்ட வாரியாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதன்படி சென்னை ராயப்பேட்டையிலுள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சியில் சரியாக வேலை செய்யாத நபர்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க தொண்டர்கள் ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில்தான் பிப்ரவரி 5-ம் தேதியன்று அ.தி.மு.க தலைமைக் கழகத்தின் அறிவிப்பில், ``கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும் தேர்தல் பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள், மா.செக்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளும் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நடைபெற இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே அறிவிப்பிலேயே 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையிலான மாவட்டங்களின் பட்டியலும் வெளியிடப்பட்டது.

அதிமுகவினர்
அதிமுகவினர்

அதன்படி இன்று காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கரூர், தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு, நாகை, திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அ.தி.மு.க-வில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதுவரை எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்படவில்லை. பல மாவட்டங்களில் அமைச்சர்கள் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அவர்கள் செய்த உள்ளடி வேலை, அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி தலைமையிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதற்காகப் பல நிர்வாகிகளும் காத்திருந்தனர்.

 வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்
யார் யார் தவறு செய்தீர்கள் என்று விசாரிப்பதற்காக வரச்சொல்லவில்லை. தவறு செய்தவர்கள் திருத்திக்கொள்ளுங்கள். உள்ளடி வேலை பார்த்தவர்கள் நிறுத்துங்கள்.
முதல்வர் எடப்பாடி

யார் யாரைப்பற்றிப் போட்டுக்கொடுக்கப் போகிறார்கள் என்று முக்கிய நிர்வாகிகள் படபடத்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறிப்பிட்ட நேரங்கள் ஒதுக்கப்பட்டு கட்சி அலுவலகத்தின் பின்புறத்தில் அமர வைத்திருந்தார்கள். இன்று காலை 12 மணியளவில் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் முதல்வரைச் சந்திக்க உள்ளே செல்ல, அப்போது முதல்வர் முக்கிய நிர்வாகியான வைத்திலிங்கம் இருந்தும் எப்படி உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சையில் அ.தி.மு.க கோட்டை விட்டது என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு முன்னாள் மாநகராட்சி மேயர் சாவித்திரி கோபால் ஏதேதோ காரணங்களை அடுக்கியிருக்கிறார். அடுத்ததாக முக்கிய நிர்வாகிகள் சிலர், `அம்மா இல்லாமல் இந்த தேர்தலைச் சந்தித்திருக்கிறோம். அதுவே முதல் மைனஸ். அத்தோடு சசிகலா, என்.எம்.நடராஜனின் சொந்த ஊர். அது சமுதாய பின்புலத்தையும் கொண்ட மாவட்டம்' என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்குக் குறுக்கிட்ட எடப்பாடி, `நீங்களும் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தானே' என்று கேட்க ஒன்றும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடியிருக்கிறார்கள்.

அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்
அ.தி.மு.க ஆலோசனைக் கூட்டம்

பிறகு, `உங்களது மாவட்டத்தில் கோஷ்டிப் பூசல்களும் முக்கிய நிர்வாகிகள் சிலர் கீழ் மட்டத்தில் உள்ள தொண்டர்களைச் சரியாக மதிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் வருகிறதே. அது உண்மையா' என்று கேட்டிருக்கிறார். அதற்கும் பதில் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு எடப்பாடி, ``யார் யார் தவறு செய்தீர்கள் என்று விசாரிப்பதற்காக வரச்சொல்லவில்லை. தவறு செய்தவர்கள் திருத்திக்கொள்ளுங்கள். உள்ளடி வேலை பார்த்தவர்கள் நிறுத்துங்கள். வருகின்ற ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வர இருக்கிறது.

இப்போதிலிருந்தே கட்சி வேலையைச் செய்யத்தொடங்குங்கள். அத்தோடு கட்சி பலவீனமாக உள்ள பகுதிகளைக் கணக்கெடுங்கள். அங்கு என்னனென்ன தேவைகள் இருக்கிறது என்பதை பட்டியல் எடுத்துக்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறைவேற்றுங்கள். உள்ளாட்சித்தேர்தலில் நடந்ததுபோல் நகராட்சித்தேர்தலில் நடந்துவிடக் கூடாது. இதை மனதில் வைத்துச் செயல்படுங்கள்" என்று வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களுக்கு எடப்பாடி எச்சரிக்கை விடுத்து அனுப்பியிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு