Published:Updated:

`நாவில் ஒன்று நினைவில் ஒன்று!’ - பாடல் மூலம் ஸ்டாலினை விமர்சித்த முதல்வர்

``தோல்வி பயத்தால், கொல்லைப்புறத்தின் வழியாகச் சென்று உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தப்பார்க்கிறார். போலியாகப் பேசி மக்கள் தலைவராக நடிக்கிறார்’’ என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினை கடுமையாகச் சாடியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

புதிய மாவட்ட தொடக்க விழா
புதிய மாவட்ட தொடக்க விழா

வேலூர் மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் நிர்வாக ரீதியாக நேற்று உதயமாகின. அதன் தொடக்க விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் கலந்துகொண்டனர். புதிய மாவட்டங்களைத் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தலைவர் ஸ்டாலினை கடுமையாகத் தாக்கிப் பேசினார். 

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

அவர் பேசுகையில், ``எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் பல்வேறு கூட்டங்களிலும் ஊடகங்களிலும் `அ.தி.மு.க ஆட்சியில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மக்களுக்கு இந்த ஆட்சியின் மூலம் எந்த நன்மையும் கிடைக்கவில்லை’ என்று வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியைப் பரப்பிவருகிறார். மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதைப்போல் நடித்துக்கொண்டிருக்கும் சுயநல எண்ணம் கொண்ட ஸ்டாலின் போன்றோர் எங்களின் சாதனைகளைக் கண்டு அஞ்சி நடுங்குகிறார்கள். 

அவர்கள்தாம் உண்மையான மக்கள் தலைவர்கள் என்று போலியாகப் பேசி மக்களை நம்பவைத்துக்கொண்டிருக்கிறார்கள். `நாளொரு மேடை; பொழுதொரு நடிப்பு; அவன் பேர் மனிதனல்ல; நாவில் ஒன்று நினைவில் ஒன்று; அதன் பேர் உள்ளமல்ல’ என்ற பாடலை இங்கே நினைவுகூர விரும்புகிறேன். மக்கள் ஓர் நாள் அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவார்கள். இதுதான் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகளும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகள் தி.மு.க, காங்கிரஸிடம்தான் இருந்தன. 

ஸ்டாலின்
ஸ்டாலின்

நாடாளுமன்றத் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை வாரி இரைத்தும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளைக் கொடுத்தும் தி.மு.க கூட்டணி வெற்றிபெற்றது. அவர்களின் ஏமாற்று வேலையை மக்கள் தெரிந்துகொண்டதால் சட்டமன்ற இடைத்தேர்தலில் தோற்றனர். இனி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாழ்வில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணிதான் மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ‘உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது’ என்று ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து மக்களை குழப்பிக்கொண்டிருக்கிறார். 

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றபோதே உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தொடங்கிவிட்டதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சென்னையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. மாநிலத் தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் என்று நம்புகிறோம். தோல்வி பயத்தால் கொல்லைப்புறத்தின் வழியாக உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தப் பார்க்கிறார் ஸ்டாலின். நேரடி தேர்தலை மறைமுகத் தேர்தலாக நாங்கள் மாற்றியதாக அவர் சொல்கிறார். 1996-ல் ஸ்டாலினுக்காகத்தான் நேரடி தேர்தல் கொண்டுவரப்பட்டது.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மீண்டும் 2006-ல் ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, நேரடித் தேர்தலை மறைமுகத் தேர்தலாகக் கொண்டுவந்து நடத்தியதும் தி.மு.க-தான். அவர்கள் செய்தால் சரி, நாங்கள் செய்தால் தவறு. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் கவுன்சிலர்கள்தான் பேரூராட்சி, நகராட்சித் தலைவர்களையும் மாநகராட்சி மேயர்களையும் தேர்வுசெய்யப்போகிறார்கள். அதற்கு, நீங்கள் ஏன் அஞ்சுகிறீர்கள்? நாங்கள் தயாராக இருக்கிறோம். மக்கள் பணி செய்வதுதான் எங்களின் கடமை. வரலாற்றுச் சாதனை படைத்த அரசு அம்மாவினுடைய அரசு’’ என்றார்.