Published:Updated:

தூத்துக்குடி: ``ஸ்டாலின், உதயநிதியை முதல்வராக்க நினைக்கிறார்!” - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா தொற்று காலத்திலும் நாட்டிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்தான். கொரோனா காலத்திலும் ரூ.60,000 கோடி அளவுக்குத் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் இன்று நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொள்கிறார். இதற்காக, சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ``வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு நிதி உதவி வழங்க ரெங்கராஜன் கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில், தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாட அரசு ரூ.2,500 வழங்க அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதற்கு மக்களிடத்தில் கிடைத்திருக்கும் வரவேற்பைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க தலைவர் ஸ்டாலின் எங்கள்மீது பொய்யான குற்றச்சாட்டைச் சுமத்திவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அவர் எங்கள்மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் அனைத்தும் அரசியல் ஆதாயத்துக்காகத் தொடுக்கப்பட்டவை என நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பொன்முடி, தயாநிதி, ஐ.பெரியசாமி, ரகுபதி, துரைமுருகன், ராஜ கண்ணப்பன் மற்றும் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பல எம்.எல்.ஏ-க்களின் பெயர்களிலும் ஊழல் குற்றச்சாட்டு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இத்தனை பேர் மீதுள்ள ஊழல் வழக்குகளை மறைப்பதற்காகத்தான் எங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டை ஸ்டாலின் சுமத்திவருகிறார்.

கொரோனா தொற்று காலத்திலும் நாட்டிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்தான். கொரோனா காலத்திலும் ரூ.60,000 கோடி அளவுக்கு தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைப்பதற்கு மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். தற்போது அனைத்து அரசுப் பணிகளுக்கான ஒப்பந்தங்களும் இ-டெண்டர் மூலமாக மேற்கொள்ளப்படுவதால், ஊழல் என்ற பேச்சுக்கே இடமில்லை. அரசுப் பணி டெண்டர் உலக வங்கியின் வழிகாட்டுதல்படி இணையவழியாக நடைபெறுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எனவே, தமிழகத்தில் டெண்டர்‌ முறைகேடு நடந்திருப்பதாகக் கூறுவது பொய்யானது. டெண்டர் எடுத்தது எனது உறவினர் என்பது எனக்குத் தெரியாது. நேரடியாக டெண்டரை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி அதன் மூலம் டெண்டர் எடுத்திருக்கிறார். எனவே, உறவினர் டெண்டர் எடுத்ததற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.

தி.மு.க ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட சாலைத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களிலும் முறைகேடு நடந்திருக்கிறது. டெண்டரில் குறிப்பிடப்பட்ட தொகையைக் காட்டிலும் கூடுதலாக டெண்டர் பணிக்கு நிதி ஒதுக்கியதாகக் கணக்கு காண்பித்து, ஊழல் செய்திருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ரூ.200 கோடிக்கு டெண்டர் விடப்பட்டுப் பணி முடிக்கும்போது ரூ.470 கோடிக்குப் பணம் வழங்கப்பட்டிருப்பதாகக் கணக்கு காண்பித்திருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தேர்தலில் 200 தொகுதி என்ன, 300 தொகுதியைக்கூட ஸ்டாலின் இலக்காக வைத்துக்கொள்ளலாம். ஆனால், மக்கள் வாக்களிக்க வேண்டுமே... நாட்டு மக்களுக்காக அவர்கள் உழைக்கவில்லை; அவருடைய வீட்டு மக்களுக்காகவே உழைக்கிறார். கருணாநிதி அவருடைய மகன் ஸ்டாலினை முதல்வராக்க நினைத்தார். ஸ்டாலின், தற்போது உதயநிதியை முதல்வராக்க நினைக்கிறார். தி.மு.க கூட்டணியில் உள்ளவர்களுக்கே சுதந்திரம் இல்லை. ஸ்டாலின் இருக்கும்போது அவரை எதிர்த்து கருத்துச் சொல்லவே பயப்படுகின்றனர். எங்கள் கூட்டணியில் இருப்பவர்கள் சுயமாக, சுதந்திரமாகப் பேசக்கூடியவர்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு