Published:Updated:

``அமைச்சர்களின் 'டீல்'களைத் தோண்டுங்கள்..." - நிர்வாகிகளுக்கு ஆர்டர் போட்ட எடப்பாடி

ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி
News
ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி

திமுக அரசுக்கு எதிராக, தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறது அதிமுக. சேலத்தில் கண்டன ஆர்பாட்டக் கூட்டத்தை முடித்துவிட்டு கழக நிர்வாகிகளிடம் பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, திமுக-வை நெருக்கடிக்கு உள்ளாக்கும் இரண்டு விஷயங்களைக் கூறியிருக்கிறார்.

2021 சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் உரிமைத்தொகை, நகைக் கடன், கல்விக் கடன், விவசாயக் கடன்கள் தள்ளுபடி, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் உள்ளிட்ட 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை அளித்தது தி.மு.க. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அரசின் நிதிநிலை காரணமாக அளித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தி.மு.க அரசு தடுமாறியது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே, 'உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஏப்ரல், 2022 முதல் வழங்கப்படும்' என்று அறிவித்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன். இது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இப்படி, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தி.மு.க அரசு காலம் கடத்துவதாக அரசு ஊழியர்கள் மத்தியில் கோப அலைகள் எழும்பின. இந்தச் சூழலில்தான், 'வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்' என்று கோதாவில் குதித்திருக்கிறது அ.தி.மு.க.

தேனி ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ்
தேனி ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ்

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்று, டிசம்பர் 17-ம் தேதி நடைபெற்ற அந்த ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்துகொண்டனர். சேலத்தில் எடப்பாடி பழனிசாமி, தேனியில் ஓ.பன்னீர்செல்வம், கோவையில் வேலுமணி, நாமக்கல்லில் தங்கமணி என முக்கியத் தலைவர்கள் அனைவரும் அவரவர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்றனர். கூட்டத்தை முடித்துக்கொண்டு தனக்கு நெருக்கமான இரண்டு வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களிடம் பேசியிருக்கும் எடப்பாடி பழனிசாமி, தி.மு.க தரும் அரசியல் நெருக்கடியை எதிர்கொள்ள இரண்டு விஷயங்களைக் கூறியிருக்கிறார். அது குறித்து கட்சியின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

"ரெய்டு என்கிற பெயரில் முன்னாள் அமைச்சர்களைக் குறிவைத்து தி.மு.க தாக்குவதை, ஒருவகையில் தனக்கான லாபமாகப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி. அ.தி.மு.க என்கிற இயக்கமே தி.மு.க எதிர்ப்பு என்கிற மனநிலையில்தான் உதித்தது. தொடர்ச்சியாக அ.தி.மு.க தலைவர்கள் தி.மு.க அரசால் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும்போது, அது அ.தி.மு.க தொண்டர்களை உசுப்பேற்றி ஒருங்கிணைக்க வழிவகுக்கும். கடந்த 1996, 2006-ம் ஆண்டுகளில் தி.மு.க ஆட்சிக்காலத்தில் இதுபோலத்தான் நடந்திருக்கிறது. ஜெயலலிதா மீதும், அப்போதைய முன்னாள் அமைச்சர்கள் மீதும் அன்றைய தி.மு.க அரசு வழக்குகள் போட்டது. ஆனால், கட்சித் தொண்டர்கள் ஒருங்கிணைந்ததால், 1998 நாடாளுமன்றத் தேர்தலில் 18 எம்.பி இடங்களையும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் 9 எம்.பி இடங்களையும் அ.தி.மு.க கைப்பற்றியது. இதையெல்லாம் பட்டியலிட்டு கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர்கள் இருவரிடம் பேசியிருக்கும் எடப்பாடி, 'நம்மளை அவங்க அடிக்க அடிக்கத்தான்ய்யா நமக்கு லாபம். சசிகலாங்கற ஒரு கேரக்டரே சீன்ல இல்லை பாருங்க. தொண்டன் மனசுல நாமளும், நம்ம கட்சியும்தான் முன்னாடி நிற்கும். உண்மையான தி.மு.க எதிர்ப்பு சக்தி அ.தி.மு.க-தான்கறது இந்த ரெய்டு மூலமாக வெளிச்சமாகியிருக்கு' என்றிருக்கிறார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

இரண்டாவது, தி.மு.க அமைச்சர்கள் தரப்புமீது கூறப்படும் புகார்களையெல்லாம் ஆதாரங்களாகத் திரட்டச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. 'ஆர்.டி.ஐ மூலமாக நமக்கெதிராக ஆதாரங்களைத் திரட்டி, நம்ம மேல வழக்கு போடவெச்சாங்க. இதற்காகச் சில அமைப்புகளையும் தி.மு.க-காரங்க பயன்படுத்திக்கிட்டாங்க. அதே ஃபார்முலாவை நாமளும் கையில எடுக்கணும். தி.மு.க அமைச்சர்கள் செய்யக்கூடிய டெண்டர் விவகாரங்கள் எல்லாத்தையும் ஆராய்ந்து, முறைகேடு நடந்திருந்தா அவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டணும். இன்னைக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு டெண்டர் விடப்பட்டும், 15 சதவிகித பைகள்கூட ரேஷன் குடோன்களுக்கு வந்து சேரலை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே வேகத்துல அரசாங்கம் பணிசெஞ்சா, சொன்ன நேரத்துக்கு பரிசுப் பைகளை கொடுக்க முடியாத சூழல் ஏற்படும். 'சொன்ன நேரத்துல 'பில்' க்ளியர் பண்ண மாட்டேங்குறாங்க'னு ஒப்பந்ததாரர்களெல்லாம் கொதிச்சுப்போயிருக்காங்க. ஒவ்வொரு துறையிலும் நடந்திருக்குற 'டீல்' விவகாரங்களையெல்லாம் எடுங்க. தி.மு.க நமக்குக் குடைச்சல் கொடுத்த மாதிரி, நாமளும் அவங்களுக்குக் குடைச்சல் கொடுப்போம். 'கலெக்‌ஷன், கரப்ஷன், கமிஷன்'னு நம்மளை கிண்டல் அடிச்சாங்க. இந்த வார்த்தைக்குச் சொந்தக்காரங்களே தி.மு.க-தான்னு நாம முன்னிறுத்துவோம். பிரதமர் மோடி சொல்லியிருக்குறபடி, 2024-ம் ஆண்டு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' வழிமுறை கொண்டுவரப்பட்டால், நாம ஆட்சி அமைக்கப்போறது உறுதி' என்றிருக்கிறார். இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மூலமாக அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் 'டீல்' செய்யும் டெண்டர் விவகாரங்களைத் தோண்ட உத்தரவிடப்பட்டுள்ளது" என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள்

அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, ராஜகண்ணப்பன் மீது சில தரவுகளுடன் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முன்வைத்த பிறகுதான், அவர்மீது மக்களின் பார்வை திரும்பியது. அதுபோல, தி.மு.க அமைச்சர்களைத் தாக்கினால் மட்டுமே, உண்மையான எதிர்க்கட்சியாக அ.தி.மு.க செயல்பட முடியும் என்கிற முடிவுக்கு எடப்பாடி வந்துவிட்டாராம்.