Published:Updated:

‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ - வலைவிரிக்கும் எடப்பாடி; திணறும் அ.ம.மு.க

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அ.ம.மு.க-விலிருந்து ஆட்களை இழுத்து, தன் தலைமையின் கீழ் அவர்களைக் கட்சியில் சேர்ப்பதன் மூலமாக, தன் ஆளுமையை அ.தி.மு.க-வுக்குள் பன்னீருக்குப் போட்டியாக நிலைநாட்ட முடியுமென எடப்பாடி திட்டமிடுகிறார். சசிகலா தரப்பை ‘வீக்’காக்கவும் இந்தத் திட்டம் பயன்படும் என்பது அவரின் மனக்கணக்கு.

எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, கட்சிக்குள் தன் ஆளுமையை நிலைநாட்டும் அடுத்த காய்நகர்த்தலைத் தொடங்கிவிட்டார் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். கழகத்தின் வேட்பாளர்கள் தோல்வியடைந்த மாவட்டங்களில், தோல்விக்குப் பொறுப்பேற்கவைத்து அந்தந்த மாவட்டச் செயலாளர்களை நீக்க வேண்டுமென்ற கோரிக்கை அ.தி.மு.க-வில் வலுத்துள்ளது. அப்படி நிர்வாகிகளை நீக்கினால் அவர்கள் சசிகலா பக்கம், அல்லது தி.மு.க., பா.ஜ.க ரூட் எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்கிற பதற்றாத்தில் இருக்கிறார் எடப்பாடி. இந்தச் சிக்கலான முடிச்சை அவிழ்ப்பதற்காக, அ.ம.மு.க-விலிருந்து மூத்த நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க-வுக்கு அழைத்து வர ‘அசைன்மென்ட்’ அளித்திருக்கிறாராம் எடப்பாடி. இந்த ‘அசைன்மென்ட்’ கணக்கைத்தான் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இது குறித்து எடப்பாடிக்கு நெருக்கமானவரும், முன்னாள் அமைச்சருமான ஒருவரிடம் பேசினோம். ``நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு பகுதியைத் தவிர்த்து, ஏனைய பகுதிகளில் கட்சியின் வேட்பாளர்கள் பெரிதாக வெற்றிபெறவில்லை. தருமபுரி, சேலத்தில் ஜெயித்த அ.தி.மு.க-வால், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வெற்றியை நாட்ட முடியவில்லை. தென்மாவட்டங்களில் நிலைமை இன்னும் மோசம். விளக்கம் கேட்டால், ‘வன்னியர்கள் வாக்களித்திருந்தாலும், பட்டியலின மக்கள் வாக்களிக்கவில்லை’ என்று சில நிர்வாகிகள் காரணம் சொல்கிறார்கள். அது உண்மையாகக்கூட இருக்கலாம். ஆனால், கட்சி நிர்வாகிகள் சரியாகக் களப்பணியாற்றியிருந்தால், பட்டியலின மக்களின் வாக்குகளைக்கூட கவர்ந்திருக்க முடியும்.

ஆன்மிகப் பயணமா... அரசியல் பயணமா? - சஸ்பென்ஸ் சசிகலா!

தென் மாவட்டங்களில் தொடக்கத்திலேயே அ.ம.மு.க பற்றிய பயத்தால், கட்சி நிர்வாகிகள் பணியாற்றாமல் ஒதுங்கிவிட்டனர். தேர்தல் செலவுக்காக கட்சி அனுப்பிய தொகையைவைத்து கொடைக்கானலில் குத்தாட்டம் போட்ட ஒட்டன்சத்திரம் நிர்வாகிகள் பற்றியும், மீன் வறுவலைச் சுவைத்தபடி ஓய்வெடுத்த விளாத்திக்குளம் நிர்வாகிகளைப் பற்றியும் கட்சி மேலிடத்துக்கு நன்றாகத் தெரியும். இதெல்லாம் ஒரு பருக்கைதான். இதேபோல பல தொகுதிகளில் கட்சி நிர்வாகிகள் சரியாக பணியாற்றாததாலேயே தோல்வி கிடைத்திருக்கிறது. அதைவிடுத்து, வன்னியர் இட ஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரம் என்று காரணம் சொல்வது வெறும் சப்பைக்கட்டு.

சரியாகத் தேர்தல் பணியாற்றாத நிர்வாகிகளைக் களையெடுக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்களிடமிருந்து தினமும் கடிதங்கள் வருகின்றன. இதன் அடிப்படையில், தேர்தலில் கட்சி தோல்வியடைந்ததற்கான காரணங்களை ஆராய ஒரு குழுவை அமைக்க முதற்கட்டமாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அந்தக் குழுவிலும் தனக்கு உரிய பங்கு வேண்டுமென பன்னீர் கொடிபிடிப்பார் என்பதால், விசாரணையைத் தன்னளவிலேயே எடப்பாடி செய்துவருகிறார்.

எடப்பாடி பழனிசாமி, சசிகலா
எடப்பாடி பழனிசாமி, சசிகலா

பல மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கட்சி அனுப்பிய நிதியைச் செலவழிக்காமல் கையாடல் செய்திருக்கும் விஷயம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், நேராக அவர்கள் சசிகலா பக்கம் அல்லது தி.மு.க., பா.ஜ.க பக்கம் சென்றுவிடுவார்கள். இதனால், கட்சியில் எடப்பாடி பழனிசாமி மீதான மதிப்பு குறைந்துவிடும். தேவையற்ற குழப்பங்களுக்கு அது வித்திடும் வாய்ப்பிருக்கிறது. அதனால், முதலில் அ.ம.மு.க-விலிருந்து முக்கிய நிர்வாகிகள் சிலரை அ.தி.மு.க பக்கம் கொண்டுவருவதற்கு முடிவெடுத்திருக்கிறார் எடப்பாடி. இந்த வேலையைச் செய்வதற்கு முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கே.சி.கருப்பணன், செல்லூர் ராஜூ, ஆர்.காமராஜ், எம்.எல்.ஏ-க்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இசக்கி சுப்பைய்யா, சிவகங்கை செந்தில்நாதன், ராஜன் செல்லப்பா, முன்னாள் எம்.எல்.ஏ ஸ்ரீவைகுண்டம் சண்முகநாதன் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார். இந்த ‘அசைன்மென்ட்டில்’ எடப்பாடிக்கு இரண்டு லாபங்கள் இருக்கின்றன.

``எப்போதுமே நம்பர் டூ தானா?” - பன்னீர் கோட்டைவிட்ட தருணங்கள்!

ஒன்று, தேர்தல் தோல்விக்குக் காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், அவர்கள் கோபித்துக்கொண்டு அ.ம.மு.க பக்கம் செல்வதைத் தடுக்க முடியும். ‘அந்தக் கட்சியிலிருந்தே அ.தி.மு.க பக்கம்தான் வர்றாங்க. பேசாம இங்கேயே இருந்துடுவோம்’ என்று அவர்களின் மனதை மாற்றிவிட முடியும். தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைப்புரீதியாக கட்சியை பலப்படுத்தவும் செய்யலாம். இரண்டாவது, கட்சிக்குள் எடப்பாடியின் கரம் ஓங்குவதற்கு இது வழிவகுக்கும். பன்னீருக்கு எதிராகக் களமாடித்தான் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எடப்பாடி பெற்றிருக்கிறார். இந்தச் சூழலில், எடப்பாடியின் தலைமையை ஏற்பதாக அ.ம.மு.க-விலிருந்து பலர் அ.தி.மு.க-வுக்கு வந்தால், அவரின் இமேஜ் உயரும். நாடாளுமன்றத் தேர்தலில் ஐந்தரை சதவிகிதத்துக்கு மேல் எடுத்த அ.ம.மு.க., சட்டமன்றத் தேர்தலில் இரண்டரை சதவிகிதத்தைக்கூட தாண்டவில்லை. இந்தச் சரிவை தனக்கான வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி” என்றார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

எடப்பாடியின் வலைப்பின்னல் குறித்து, அ.ம.மு.க-வின் மாநில நிர்வாகியும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான ஒருவரிடம் பேசினோம். ``அ.தி.மு.க தரப்பிலிருந்து அ.ம.மு.க நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு பேசிவருவது உண்மைதான். எனக்கும் அழைப்புகள் வந்தன. தாய்க்கழகத்தில் இணைந்துவிட வேண்டுமென்ற ஆசை ஒருபக்கம் இருந்தாலும், சசிகலாவின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம். அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் மகள் திருமணம் விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்தத் திருமணத்தையொட்டி சில அரசியல் நிகழ்வுகள் அ.தி.மு.க-வுக்குள் நடக்கலாம் என்று தெரிகிறது. நிச்சயமாக, சசிகலா ஏதோவொரு காய்நகர்த்தலைச் செய்யவிருக்கிறார் என்று நம்புகிறோம். ஒருவேளை, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், அடுத்த மூன்று மாதங்களில் நான் உட்பட பல அ.ம.மு.க நிர்வாகிகள் அ.தி.மு.க பக்கம் அணி தாவப்போவது நிச்சயம். அ.ம.மு.க திணறிப்போயிருப்பது என்னவோ நிஜம்” என்றார்.

சசிகலாவும் பன்னீரும் தன்னை அடிப்பதற்கு முன்னதாக, அவர்களுக்கு ‘ஷாக்’ கொடுக்க தீர்மானித்திருக்கிறார் எடப்பாடி. அ.ம.மு.க-விலிருந்து ஆட்களை இழுத்து, தன் தலைமையின் கீழ் அவர்களைக் கட்சியில் சேர்ப்பதன் மூலமாக, தன் ஆளுமையை அ.தி.மு.க-வுக்குள் பன்னீருக்குப் போட்டியாக நிலைநாட்ட முடியுமென அவர் திட்டமிடுகிறார். மேலும், சசிகலா தரப்பை ‘வீக்’காக்கவும் இந்தத் திட்டம் பயன்படும் என்பது அவர் மனக்கணக்கு. கணக்கு எடுபடுகிறதா என்பதைப் பார்ப்போம்.

அ.தி.மு.க: எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி... பன்னீர் செல்வத்தின் அடுத்த அஸ்திரம் என்ன?
அடுத்த கட்டுரைக்கு