Election bannerElection banner
Published:Updated:

அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு சீட்... தினகரன் எதிர்ப்பைச் சரிக்கட்ட முதல்வரின் புதிய அஸ்திரம்?

தினகரன்
தினகரன் ( ம.அரவிந்த் )

சசிகலா ஒதுங்குவதாக அறிவித்ததுபோல் தினகரன் ஒதுங்கிக்கொள்ள மாட்டார். அவர் மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டார். அதேநேரத்தில், தேர்தலில் போட்டியிட்டால் அது அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதல்வர் நினைக்கிறார்.

சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்த நிலையில், தினகரன் பக்கம் வலுவாக இருக்கும் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலருக்கு, வரும் தேர்தலில் போட்டியிட சீட் தருவதாகக் கூறி தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இறங்கியிருப்பதாகப் பேசப்படுகிறது. இந்தநிலையில், அ.ம.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான ரெங்கசாமி, தஞ்சாவூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அரசியல் வட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி.
அ.ம.மு.க துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக இருப்பவர் ரெங்கசாமி. இவர் அ.தி.மு.க-வில், தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க-வில் ஏற்பட்ட மாற்றத்தால் டி.டி.வி.தினகரன் அணிக்குச் சென்றார். இதனால் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, எம்.எல்.ஏ பதவியை இழந்தவர்களில் இவரும் ஒருவர்.

அ.ம.மு.க தொடங்கப்பட்ட பிறகு அதன் மாநிலப் பொருளாளராக பதவிவகித்தவர், தற்போது, அதன் துணைப் பொதுச்செயலாளரக இருந்துவருகிறார். இந்தநிலையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் ரெங்கசாமியைப் போட்டியிடவைப்பதற்கு அ.தி.மு.க தலைமை முயன்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதேபோல் தினகரன் பக்கமுள்ள முக்கிய நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு `அ.ம.மு.க-விலிருந்து, அ.தி.மு.க-வுக்கு வந்தால் உங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட், அத்துடன் தேர்தல் செலவுக்கான பணத்தையும் தருகிறோம்’ என முதலவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.

அ.ம.மு.க-வால் அ.தி.மு.க-வின் வெற்றி எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது. அதற்கு தினகரன் பக்கமுள்ள நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுத்து, தினகரனை பலவீனமடைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதைச் செய்வதாகவும் தஞ்சாவூர் அரசியல் வட்டத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

சசிகலா
சசிகலா

இது குறித்து விவரம் அறிந்த வட்டாரத்தில் பேசினோம். சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகி வெளியே வந்த பிறகு அ.தி.மு.க-வில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அ.தி.மு.க., அ.ம.மு.க இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இவை எதுவுமே நடக்காத நிலையில், யாருமே எதிர்பார்க்காத வகையில் அரசியலைவிட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார்.

சசிகலாவின் இந்த அறிவிப்பு, தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாகவும் மாறியது. டி.டி.வி.தினகரனும் இது போன்ற முடிவை எடுக்க வேண்டும் என பி.ஜே.பி தரப்பில் வெளிப்படையாகப் பேசப்பட்டது. ஆனால் தினகரன், அ.ம.மு.க-வை தலைமையாக ஏற்கக்கூடிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என தெரிவித்துவருகிறார்.

தினகரனுடன் ரெங்கசாமி
தினகரனுடன் ரெங்கசாமி

தினகரன் பக்கம் சென்றதால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களில் தங்க தமிழ்செல்வன்,செந்தில் பாலாஜி ஆகியோர் தி.மு.க-வுக்குத் தாவிவிட்டனர். ஒரு சிலர் அடுத்து சென்ன செய்வது எனப் புரியாமல் தவித்ததுடன், சசிகலா வருகைக்கு பிறகு தங்களுக்கான முக்கியத்துவம் கிடைக்கும் எனவும் காத்திருந்தனர். சசிகலாவின் விலகல் அறிவிப்பு அவர்களைச் சோர்வடைய செய்திருக்கிறது. அ.ம.மு.க தேர்தலில் போட்டியிட்டாலும், அ.தி.மு.க-வின் வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்துமே தவிர தாங்கள் ஜெயிப்பதற்கு வாய்ப்பில்லை; அதேநேரத்தில் தேர்தலில் செலவு செய்ய கையில் காசும் இல்லை எனத் தவிக்கின்றனர்.

சசிகலா ஒதுங்குவதாக அறிவித்ததுபோல் தினகரன் ஒதுங்கிக்கொள்ள மாட்டார். அவர் மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டார். அதேநேரத்தில், தேர்தலில் போட்டியிட்டால் அது அ.தி.மு.க-வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதல்வர் நினைக்கிறார். உளவுத்துறை ரிப்போர்ட்டும் அப்படித்தான் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசும்போது, `அ.ம.மு.க-வை சாதாரணமாக நினைக்காதீர்கள். அவர்கள் கொங்கு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால், தென் மண்டலம் மற்றும் டெல்டாவில் நமக்கு பாதிப்பை உண்டாக்குவார்கள். எனவே, யோசித்துச் செயல்படுங்கண்ணே’ எனக் கூறியிருக்கிறார்.

வைத்திலிங்கம்
வைத்திலிங்கம்

இது முதல்வர் தரப்பை யோசிக்கவைத்திருக்கிறது. அதேநேரத்தில், அ.தி.மு.க கூட்டணியில் பி.ஜே.பி சீட் கேட்டபோது அ.ம.மு.க-வுக்கும் சேர்த்து தொகுதிகள் கேட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், அப்படி எதுவும் நடைபெறவில்லை. இதையும் முதல்வர் கவனத்தில் எடுத்துக்கொண்டார். இந்தநிலையில்தான், தினகரன் பக்கமுள்ள பல மிக முக்கிய நிர்வாகிகள் சிலருக்கு சீட் கொடுத்து, தங்கள் பக்கம் இழுத்துவிட்டால் தினகரன் கூடாரம் காலியாகிவிடும். தினகரன் தனிமரமாகிவிடுவார். தேர்தலிலும் முழு வேகத்துடன் அவரால் செயல்பட முடியாது. அ.தி.மு.க-வின் வெற்றிக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என முதல்வர் நினைக்கிறார்.

இதன் முதற்கட்டமாக வைத்திலிங்கம் மூலம் ரெங்கசாமியிடம் பேசியதாகத் தவல்கள் வெளியாகியுள்ளன. ரெங்கசாமி தினகரன் பக்கம் சென்றபோது தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்ததுடன், அ.தி.மு.க-வில் தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். அவர் அ.ம.மு.க-வுக்குச் சென்ற பிறகே மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவுக்கு அப்போது அந்தப் பதவி கொடுக்கப்பட்டது.

ரெங்கசாமி
ரெங்கசாமி

அந்தச் சமயத்தில் வைத்திலிங்கம் தரப்பு ரெங்கசாமியிடம், `நீங்க தினகரன் பக்கம் போகாதீங்க... உங்களை அமைச்சர் ஆக்குகிறேன்’ எனக் கூறியும் கேட்காமல் சென்றுவிட்டார். அதை இப்போது நினைவுபடுத்தி, `என் பேச்சைக் கேட்டிருந்தால் நீங்கள் அமைச்சராக இருந்திருப்பீங்க. இப்பவாச்சும் எங்ககூட வந்துருங்க. உங்களுக்குத் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட சீட் தருகிறோம்’ எனப் பேசியிருக்கின்றனர்.

இதைப் பொறுமையாகக் கேட்ட ரெங்கசாமி எதுவும் பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ரெங்கசாமி அ.ம.மு.க-வில் சீட் வாங்கிப் போட்டியிட்டு, செலவும் செஞ்சும் புண்ணியமில்லை என நினைப்பதாகவும் தெரிகிறது. இதனால் அவர் அ.தி.மு.க-வுக்கு வருவதற்குத் தயாராகிவிட்டார் எனவும், தஞ்சாவூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராகவும் அறிவிப்பதற்கு வாய்ப்பிருப்பதாகவும் பலமான பேச்சு அடிபடுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் தினகரன் பக்கமிருக்கும் மக்கள் செல்வாக்குள்ள நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியும் நடக்கிறது. தினகரன் எதிர்ப்பைச் சரிக்கட்ட முதல்வர் தரப்பு எடுத்திருக்கும் அஸ்திரமே இது எனவும் பேசப்படுகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க தரப்பைச் சேர்ந்தவர்களிடம் பேசினோம். அ.தி.முக தலைமையில் பலமான கூட்டணி அமைந்திருப்பதால் தங்களின் வெற்றி உறுதியாகியிருக்கிறது. தினகரனால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களுக்குத்தான் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட தலைமை சீட் கொடுக்கும் என நம்புவதாகவும், கூட்டணியில் பி.ஜே.பி-க்கு தஞ்சைத் தொகுதியைக் கேட்டு அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவித்தனர்.

Edappadi-க்கு தெரியாமல் நடக்கும் அதிமுக-அமமுக இணைப்பு?Journalist SP Lakshmanan Interview

ரெங்கசாமி தரப்பில் விசாரித்தோம். ``ரெங்கசாமி சசிகலாவுக்கு உறவுக்காரர். தினகரன் மீது மிகுந்த நம்பிக்கைகொண்டவர். எவ்வளவோ ஆசைகாட்டியும் அவர் அ.தி.மு.க-வுக்குச் செல்லாமல் விசுவாசமாக இருந்தவர். கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாகவே அவர் அ.தி.மு.க-வுக்கு செல்லப்போவதாக வதந்தி பரவியது. ஆனால், அவர் செல்லவில்லை. தற்போது அ,ம.மு.க-வின் தேர்தல் பணியில் ரெங்கசாமி மும்முரமாக இருப்பதுடன், பாபநாசம் தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பாகப் போட்டியிடவும் தயாராகிவருகிறார்’’ என்று கூறுகின்றனர். விரைவில் கட்சிகள் தங்களின் முழுமையான வேட்பாளர் பட்டியலை வெளியிடும் சூழல் நிலவுகிறது. அனைத்துக் குழப்பங்களுக்கும் அப்போது விடை கிடைத்துவிடும்.

கட்டுரை, படங்கள், தொகுதி பிரச்னை குறித்த வீடியோக்களை அனுப்ப க்ளிக் செய்க.... https://bit.ly/39BnZAJ

அ.ம.மு.க நிர்வாகிகளுக்கு சீட்...  தினகரன் எதிர்ப்பைச்  சரிக்கட்ட முதல்வரின் புதிய அஸ்திரம்?

தமிழகத் தேர்தல் களம் அனல் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகமெங்கும் சுழன்று செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது விகடனின் நிருபர் படை. இந்தப் பணியில் நீங்களும் இணையத் தயாரா?

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதுதான்;

தேர்தல் தொடர்பான உங்கள் ஏரியா சுவாரஸ்யங்களோ, கள நிலவரங்களோ... அரசியல் கட்சி மீதான விமர்சனங்களோ அல்லது பார்வைகளோ... தொகுதிப் பிரச்னை, தலைவர்கள் பற்றிய நினைவுகள், தேர்தல் குறித்த நாஸ்டால்ஜியா நினைவுகள் ஆகியவையோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கட்டுரை, படங்கள், வீடியோ என எதிலும் கலக்கலாம். அனுப்ப வேண்டிய லிங்க்: https://bit.ly/39BnZAJ

உங்கள் பங்களிப்புகளுக்கு இங்கே களம் அமைத்துத் தருகிறது விகடன்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://ugc.vikatan.com/election/createarticle

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு