Published:Updated:

“திமுக அமைச்சர்கள் மேலயும் வழக்கு இருக்கு; மறந்துடாதீங்க!”- சேலம் ஆர்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தேர்தல் நேரத்தில் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்கள் கொதித்தெழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததைக் கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் என அனைவரும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தவகையில் அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவருடைய வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி
வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி

தி.மு.க. வுக்கு எதிரான கண்டன முழக்கங்களுக்குப் பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “2021 சட்டமன்றத் தேர்தலின் போது தி.மு.க., சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், சொல்லப்பட்ட அறிவிப்புகளை நிறைவேற்றாததைச் சுட்டிக்காட்டி இன்றைய தினம் அ.தி.மு.க., சார்பாக தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம். தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சுமார் 505 அறிவிப்புகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதில் முக்கியமான அறிவிப்புகள்கூட நிறைவேற்றப்படும் என்று இதுவரை செய்தி வெளியிடப்படவில்லை. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை மக்களிடத்திலே சொல்லி இன்றைக்குத் தி.மு.க. ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஸ்டாலின் அவர்கள் தேர்தல் சுற்றுப்பயணத்தின் போது, ‘தி.மு.க. பெரும்பான்மை இடங்களிலே வெற்றி பெற்று நான் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், முதல் வேலை நீட் தேர்வு ரத்து செய்யப்படும்’ என்று சொல்லியிருந்தார். அதனை தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால், தேர்தல் முடிந்து இதுவரை அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு கண் துடைப்பிற்காக ஒரு கமிஷனை நியமித்து அந்த கமிஷன் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலே நீட் தேர்வினை ரத்து செய்ய முயற்சி செய்வோம் என்று சொல்கிறார்கள். அதோடு மாணவர்கள் வாங்கிய கல்விக்கடன் ரத்து செய்யப்படும்; இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும்; பெட்ரோல் - டீசல் விலை குறைக்கப்படும்; 5 சவரனுக்கு குறைவாக வங்கியில் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்ன அறிவிப்புகள் எதையுமே இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை”.

அ.தி.மு.க., ஆட்சியில் இல்லாவிட்டாலும்கூட மக்களுடைய பிரச்னைகளை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எடுத்து வைக்கிறோம். மக்களுடைய பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கிறோம்

“அம்மா அரசு இருந்தவரை மின்வெட்டு இல்லாத, மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், இன்றைக்கு அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அதேபோல, மின் கணக்கீட்டில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனையெல்லாம் அரசு உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை மக்கள் கொதித்தெழுந்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியான சூழ்நிலையில் மக்களைத் திசை திருப்புவதற்காக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்களிடம் ரெய்டு நடத்துவதும், அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது பொய் வழக்கையும் போட்டு வருகிறார்கள். திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடைபெறும் இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சியில் இல்லாவிட்டாலும்கூட மக்களுடைய பிரச்னைகளை மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எடுத்து வைக்கிறோம். மக்களுடைய பிரச்னைகளுக்காக குரல் கொடுக்கிறோம்” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதனையடுத்து அ.தி.மு.க., ஆட்சியின் கடன், நீட் விவகாரம், அமைச்சர் மீதான ரெய்டு குறித்த பத்திரிகையாளர்களின் கேள்வியெழுப்ப, “தி.மு.க., ஆட்சியில் இருந்து இறங்குறப்ப இருப்பு ஒன்னும் வச்சிட்டுப் போகலை. அவங்களும் ஒரு லட்சம் கோடி கடன் வச்சிட்டுத்தான் போனாங்க. அரசாங்கத்தினுடைய திட்டம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்காகத்தான் நாங்க கடன் வாங்கியிருந்தோம். இன்றைக்கு அது முழுக்க கடனாக இல்லை. முதலீடாக இருக்கிறது. எங்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் லாட்டரி சீட்டு சம்பந்தமாக நான் அறிக்கை விட்டிருந்தேன். எப்போதும் அது தமிழகத்திற்கு வராது என அரசு உறுதியாக இருக்க வேண்டும். சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது, மாணவர்களும் பெற்றோர்களும் அச்சத்தில் இருக்கிறார்கள் நீட் தேர்வு நடக்குமா! நடக்காதா! என்று ஸ்டாலின் அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு மழுப்பலான பதிலைச் சொன்னார்கள். இன்றைக்கு மத்திய அரசு நீட் தேர்வை அறிவித்துவிட்டது. முன்பே நீட் விவகாரம் குறித்து தி.மு.க., தன்னுடைய தெளிவான நிலைப்பாட்டைச் சொல்லியிருந்தால் மாணவர்கள் தேர்விற்கு தயாராகியிருப்பார்கள்” என்றவரிடம் ‘ஊழல் அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறார்களே!’ என பத்திரிகையாளர் ஒருவர் கேள்வியெழுப்ப, “இப்போ அவங்க ஊழல் அமைச்சரைத் தானே வச்சிருக்காங்க. நீங்க அமைச்சரா இருந்தாலும் நீதிமன்றத்துல ஆஜராகணும்னு இன்னைக்கு நீதிமன்றமே சொல்லியிருக்கே. அதுமட்டுமில்ல, அம்மா இருந்தபோது பல அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதுசம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதை மறந்துவிட்டு அவர்கள் பேசக்கூடாது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு