Published:Updated:

“இந்த ஜிகினா வேலையெல்லாம் நமக்கும் தெரியும்...” - சசிகலா ஆடியோ; கமென்ட் அடித்த எடப்பாடி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நேற்று, ஜூன் 4-ம் தேதி தலைமைக் கழகத்தில் நடைபெற்ற உயர்மட்ட நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டமே தன்னுடைய ஆதரவாளர்களை வெளியுலகுக்குக் காட்ட எடப்பாடி அடித்த ஸ்டண்ட் தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

தேர்தல் முடிந்த கையோடு அ.தி.மு.க-வில் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்துவிட்டன. தென்மாவட்டங்களில் கட்சி படுதோல்வியைச் சந்தித்ததற்கு வன்னியர் உள் இடஒதுக்கீடு, தேவேந்திர குல வேளாளர் பெயர் விவகாரம் ஆகியவைதான் காரணமென பன்னீர்செல்வம் தரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியது. அதையெல்லாம் கண்டுகொள்ளாத எடப்பாடி பழனிசாமி, எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் எதிர்கட்சித் தலைவர் பதவியை கைப்பற்றிக் கொண்டார். பொருமலில் இருந்த பன்னீர், தனி ஆவர்த்தனமாக தன் பெயரில் மட்டும் தனி அறிக்கைகளை வெளியிட்டு பரபரப்பூட்டுகிறார். இந்த நிலையில், நேற்று ஜூன் 4-ம் தேதி அ.தி.மு.க தலைமைக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னை மற்றும் சென்னை புறநகரைச் சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் சீனியர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால், கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், அவருடைய ஆதரவாளர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

அ.தி.மு.க அலுவலகம்
அ.தி.மு.க அலுவலகம்

‘எதற்காக இந்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது? கூட்டத்தில் என்ன பேசினார்கள்?’ என்பது குறித்து கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர்கள் சிலரிடம் பேசினோம். “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், தலைநகரிலுள்ள ஒரு தொகுதியில் கூட கட்சி வெற்றி பெறவில்லை. இதுகுறித்து ஆலோசிக்கத்தான் எடப்பாடி எங்களை அழைத்திருந்தார். கட்சி நிர்வாகிகளே உள்ளடி வேலை செய்து வேட்பாளர்களை தோற்கடித்ததை அவருக்கு விளக்கினோம். தி.நகர், மயிலாப்பூர், ஆர்.கே.நகர், வில்லிவாக்கம், வேளச்சேரி, ராயபுரம் ஆகிய தொகுதிகள் அ.தி.மு.க-வுக்கு சாதகமாகத்தான் கடைசிக் கட்டம் வரையில் இருந்தன. ஆனால், கட்சியின் வட்ட மற்றும் பகுதி செயலாளர்கள் சிலரும், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் சிலரும் கூட்டணி போட்டுக் கொண்டு அ.தி.மு.கழக வேட்பாளருக்கு எதிராக வேலைப் பார்த்துவிட்டனர்.

ஓ.பி.எஸ் பங்கேற்காத கூட்டம்.. `குழப்பத்தை ஏற்படுத்த சசிகலா ஆடியோ!’ - எடப்பாடி பழனிசாமி சொல்வதென்ன?

தி.நகர் தொகுதியில் வெறும் 137 வாக்குகள் வித்தியாசத்தில்தான் சத்யா வெற்றியைப் பறிகொடுத்திருக்கிறார். ராயபுரத்தில், ஜெயக்குமாருடன் சுற்றிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் கடைசி நேரத்தில் தேர்தல் வேலை பார்க்காமல் பதுங்கிவிட்டார்கள். கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்களும் வாக்காளர்கள் வரை சென்று சேரவில்லை. இதையெல்லாம் எடப்பாடியாரிடம் எடுத்துச் சொன்னோம். தவறிழைத்தவர்கள் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தி.நகர் சத்யா, வேளச்சேரி அசோக், வளர்மதி உள்ளிட்டோர் கேட்டனர். ‘கொரோனா கொஞ்சம் கட்டுக்குள் வரட்டும். விரைவிலேயே நடவடிக்கை எடுப்போம்’ என எடப்பாடி உறுதியளித்திருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்பதால், அதற்கேற்ப பணிகளை தொடங்கச் சொல்லியிருக்கிறார். ‘மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில், குறைந்தபட்சம் ஏழு மாநகராட்சிகளைக் கைப்பற்றினால்தான், தி.மு.க-வை எதிர்த்து அரசியல் செய்ய முடியும். குறிப்பாக, சென்னை மாநகராட்சியிலுள்ள 200 கவுன்சிலர் இடங்களில், சரிபாதி எண்ணிக்கையை அ.தி.மு.க பிடித்தாக வேண்டும். இல்லையென்றால், தலைநகரிலேயே கட்சியை கரைத்துவிடுவார்கள்’ என்றிருக்கிறார் எடப்பாடி. தேர்தல் தோல்வியால் துவண்டுவிடாமல், உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகச் சொல்லத்தான், இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் ” என்றனர்.

ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை யுத்தம்... ஸ்கெட்ச் ஸ்டாலினுக்கா இல்லை எடப்பாடி பழனிசாமிக்கா?

தேர்தல் தோல்வி, உள்ளாட்சித் தேர்தல் என்பதையெல்லாம் தாண்டி, சசிகலாவின் ஆடியோ குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசப்பட்டிருக்கிறது. சில முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் ஆடியோ குறித்துப் பேசவும், “அதெல்லாம் ஒன்னும் நடக்காதுப்பா. அந்தம்மா சும்மா சீன் க்ரியேட் பண்ணப் பார்க்குறாங்க. தேர்தல் ரிசல்ட் வந்து ஒருமாதம் ஆகிடுச்சு. இதுவரைக்கும் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் யாரும் அந்தம்மாகிட்ட பேசின ஆடியோ எதுவும் வெளியே வரலையே. ஏன்னா, யாரும் அவங்ககூட பேசுறது இல்லை. அ.ம.மு.க தொண்டர்கள் சிலரைப் பேசவிட்டு, அவங்ககூட பேசின ஆடியோவை டேப் பண்ணி ரிலீஸ் பண்ணுறாங்க. 30 வருஷத்துக்கு மேல அரசியல்ல இருக்குறோம். இந்த ஜிகினா வேலையெல்லாம் நமக்கும் தெரியும். அவ்வளவு கீழ இறங்கி அரசியல் பண்ண நான் விரும்பல. சசிகலா முடிந்துபோன அத்தியாயம். நம்ம கட்சியில மறுபடியும் அவங்களுக்கு இடமில்ல” என்று ஆணித்தரமாக கூறியிருக்கிறார் எடப்பாடி. இதை அருகிலிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், வளர்மதியும் ஆமோதித்திருக்கிறார்கள். வெளியே நின்றிருந்த மீடியாக்களிடமும், இதே கருத்தை கூறி, ‘சசிகலாவுக்கு மட்டுமல்ல, அவர் குடும்பத்தை சேர்ந்த எவருக்கும் அ.தி.மு.க-வில் எப்போதும் இடமில்லை’ என்றிருக்கிறார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மற்றொருபுறம், இந்த ஆலோசனைக் கூட்டத்தால் பன்னீர் தரப்பு உஷ்ணத்தில் இருக்கிறது. “இன்று பன்னீர் தி.நகர் கிருஷ்ணா சாலையிலுள்ள புதுவீட்டுக்கு குடிபெயர்கிறார் என்பது எடப்பாடிக்கு ஏற்கெனவே தெரியும். திட்டமிட்டுத்தான், அவர் வரமுடியாத சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டத்தை தன் ஆதரவாளர்களை மட்டும் வைத்து நடத்தியிருக்கிறார். சேலத்தில் இருந்தபோது ஆதரவாளர்களை தன் வீட்டுக்கு வரச் சொல்லி ஆலோசனை நடத்தினார். ஆனால், மீடியாக்களின் வெளிச்சம் பாயாததால், இப்போது தலைமைக் கழகத்தில் கூட்டத்தை நடத்தி பரபரப்பை ஏற்படுத்தப் பார்க்கிறார். இனி பன்னீர் தன் பங்கிற்கு தனி ஆலோசனைக் கூட்டத்தை நடத்துவார். கட்சி ஒற்றுமையுடன் செயல்படாமல் போவதற்கு எடப்பாடி தான் காரணம்” என்று கொதிக்கிறார்கள்.

நடப்பதை எல்லாம் பார்த்தால், அ.தி.மு.க பஞ்சாயத்து இப்போது ஓயாது என்பதுமட்டும் தெரிகிறது.

”நானும் முன்னாள் முதலமைச்சர்தான்” - அறிக்கை ஈகோ யுத்தத்தில் பன்னீர் - எடப்பாடி!
அடுத்த கட்டுரைக்கு