Published:Updated:

தஞ்சை: `எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க தலைமையிலேயே கூட்டணி!' - முதல்வர் பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி ( ம.அரவிந்த் )

காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்களோடு முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டம் நல்லபடியாக நிறைவேறும்.

`எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் எப்படி அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்து வந்தோமோ அதேபோல் இப்போது மட்டுமல்ல, எப்போதும் அ.தி.மு.க தலைமையில்தான் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்போம்' என தஞ்சாவூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூரில், மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனாநோய்த் தடுப்புப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு மேடை அமைக்கப்பட்டிருந்தது. பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் அடிக்கடி மேடையைச் சுத்தம் செய்துகொண்டே இருந்தார். மேடையில் பெண் ஒருவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா படத்துக்கு மலர் தூவுவதற்கு பூக்களைக் கொடுப்பதற்காக ஜெயலலிதா போட்டோ அருகிலேயே இரண்டு மணி நேரத்துக்கு மேலாக நின்றுகொண்டிருந்தார்.

விழா மேடையில்
விழா மேடையில்

நலத்திட்டங்கள் பெறும் பயனாளிகளின் பெயர் அழைக்கப்பட்டதும், எப்படி வந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை முன்பே பயனாளிகளிடம் அதிகாரிகள் ரிகர்சல் செய்து காண்பித்தனர். பின்னர் சரியாக 2:40 மணிக்கு முதல்வர் மேடைக்கு வந்தார். அப்போது செவிலியர் ஒருவர் உடல் வெப்பநிலைக் கருவியைக் கொண்டு முதல்வருக்கு வெப்பநிலை சரியாக இருக்கிறதா எனப் பார்த்தார். அவரிடம் முதல்வர், `வெப்பநிலை சரியாக இருக்கிறதா...’ எனப் புன்னகைத்தபடியே கேட்டார்.

அதன் பிறகு தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.71.27 கோடி மதிப்பீட்டிலான 11 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 39.59 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 36 பணிகளுக்கான, திறப்புவிழாவுக்கான கல்வெட்டையும், 8,357 பேருக்கு ரூ.46.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில்
கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில்

பின்னர் கலெக்டர் அலுவலக அரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளிடமும், மாவட்டத்தின் வளர்ச்சிப் பணி தொடர்பாக அரசு உயரதிகாரிகளிடமும், தொழில்முனைவோர், விவசாயப் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என தனித்தனியாக ஆலோசனைகள் நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம், ``தஞ்சாவூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்திவருகிறது. பொதுப்பணித்துறை, வேளாண்மைத்துறை, மருத்துவத்துறையில் பல கோடி ரூபாய் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்திவருகிறது. அதேபோல் கல்வித்துறையிலும் உயர்கல்வி பயில பல கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில்
கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பது அரசின் கவனத்துக்கு தெரியவந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்துக்கு ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்களோடு முதற்கட்ட பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டம் சிறப்பாக நிறைவேறும்.

மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைந்துவருகிறது, காவிரி மேலாண்மை ஆணையம் நமக்குரிய நீரை, கர்நாடகத்திடமிருந்து பெற்றுத்தரும். எனவே, சம்பா சாகுபடிக்கு நீர்ப் பற்றாக்குறை இருக்காது. தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் தேர்தலைச் சந்தித்தபோதும் அ.தி.மு.க தலைமையிலேயே கூட்டணி அமைக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்துவந்தோம்.

கூட்டணி குறித்து முதல்வர்
கூட்டணி குறித்து முதல்வர்

அவர்களில்லாமல் சந்தித்த கடந்த எம்.பி தேர்தலிலும் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியுடன்தான் சந்தித்தோம். இப்போது மட்டுமல்ல, இனி தமிழகத்தில் எந்தத் தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க தலைமையிலேயே கூட்டணி அமைக்கப்படும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு