Published:Updated:

` த.மா.கா ஓ.கே... தே.மு.தி.க...?!' - ராஜ்யசபாவை முன்வைத்து அ.தி.மு.க ஆடும் கபடி

ஜி.கே.வாசன், பிரேமலதா
ஜி.கே.வாசன், பிரேமலதா

அ.தி.மு.க சார்பில் ராஜ்ய சபா எம்.பிக்குப் போட்டியிடவுள்ள வேட்பாளர் பட்டியலில் ஜி.கே.வாசன் பெயர் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்.பி-க்களில் தி.மு.க கூட்டணி சார்பில் 3 பேரும் அ.தி.மு.க கூட்டணி சார்பில் 3 பேரும் போட்டியிடவுள்ளனர். மார்ச் 26-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகிய 3 பேரை வேட்பாளராக தி.மு.க தலைமை அறிவித்துள்ளது. ஆனால், அ.தி.மு.க கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடுவதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க தங்களுக்கு இந்தத் தடவை ராஜ்ய சபா சீட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திவருகிறது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தே.மு.தி.கவைச் சேர்ந்த பிரேமலதா, சுதீஷ் ஆகியோர் சந்தித்துப் பேசியுள்ளனர். இதற்கிடையில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் சீனியர்கள், முன்னாள் எம்.பிக்கள் என ஒரு பட்டாளமே ராஜ்ய சபா எம்.பி சீட் கேட்டு வருகிறது. அதனால், இரட்டை தலைமையான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்தப் பரபரப்பான சூழலில் டெல்லியிலிருந்து அ.தி.மு.க தலைமைக்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில், ஜி.கே.வாசனுக்கு ஒரு ராஜ்ய சபா எம்.பி.சீட்டைக் கொடுக்கும்படி சொல்லப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து வந்த உத்தரவை மீற முடியாத சூழலுக்கு அ.தி.மு.க தலைமை தள்ளப்பட்டுள்ளது. அதனால் 3 சீட்களில் ஜி.கே.வாசனுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படவுள்ளது. மற்ற 2 சீட்கள் கட்சியினருக்குக் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி.கே.வாசனுக்கு ராஜ்ய சபா சீட் உறுதி என்ற தகவல் தமிழ் மாநில கட்சியினருக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan
ஞானதேசிகன்
ஞானதேசிகன்

இதுகுறித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ஞானதேசிகனிடம் கேட்டதற்கு, ``இதுவரை எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. தகவல் வந்ததும் உங்களிடம் கூறுகிறேன்" என்றார் சுருக்கமாக.

தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில மூத்த நிர்வாகிகள், டெல்லியில் முகாமிட்டு ஆலோசனை நடத்திவருகின்றனர். அ.தி.மு.க தலைமையிடம் பேசியவர்களைச் அந்த டீம் சந்தித்து நன்றிகளையும் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவரிடம் கேட்டதற்கு, ``அ.தி.மு.க சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை விரைவில் கட்சித் தலைமை அறிவிக்கும். போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் பரிசீலனைக்குப்பிறகு 10 பேரைத் தேர்வு செய்துள்ளோம். கூட்டணி தர்மத்தின்படி தே.மு.தி.கவுக்கு ராஜ்ய சபா சீட் வேண்டும் என அந்தக் கட்சி கேட்டது. ஆனால், தே.மு.தி.கவுக்கு இந்தத் தேர்தலில் சீட் வழங்க முடியாத சூழல் உள்ளது. கூட்டணி தர்மத்தின்படி தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்ய ஆலோசனை நடந்துவருகிறது. விரைவில் அதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

ஜிகே.வாசன்
ஜிகே.வாசன்
`ரவுடிகள் சி.டி.மணி, காக்கா தோப்பு பாலாஜிக்கு ஸ்கெட்ச்!' 
- அண்ணா சாலையில் வெடிகுண்டு வீசிய மாணவர்

கட்சியின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு ராஜ்ய சபா எம்.பி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கட்சியின் இந்த முடிவுக்குக் கட்சியினர் அனைவரும் கட்டுப்படுவார்கள்" என்றார்.

அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் தே.மு.தி.கவுக்கு சீட் கொடுக்கக் கூடாது என்பதில் கூட்டணியிலிருக்கும் ஒரு கட்சி தீவிரமாக உள்ளது. தே.மு.தி.க சார்பில் பா.ஜ.க மேலிடத்தில் ராஜ்ய சபா சீட் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதற்கு பா.ஜ.க மேலிடம், அ.தி.மு.க தலைமையிடம் பேசிப் பார்க்கிறோம் என்ற பதிலைச் சொல்லியுள்ளது. சீட் கிடைக்கவில்லையெனில் கூட்டணியை விட்டு விலகுவது தொடர்பாகவும் தே.மு.தி.கவில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடந்துவருகிறது.

அ.தி.மு.க ராஜ்ய சபா வேட்பாளர் அறிவிப்பு வெளியாகும்போது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு