ஜெயலலிதா வழிபட்ட கோயில்... நிகும்பலா யாக பூஜையில் முதல்வர் பழனிசாமி மனைவி!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவியான ராதா நிகும்பலா யாக பூஜையில் கலந்துகொண்டதுடன் சிறப்பு தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.
கும்பகோணம் அருகேயுள்ள கோயில் ஒன்றில் அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற நிகும்பலா யாக பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மனைவியான ராதா கலந்துகொண்டார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வழிபட்ட இக்கோயிலில் முதல்வரின் மனைவி வழிபட்டிருப்பது அரசியலில் கவனிக்கும் விஷயமாகியிருக்கிறது.

கும்பகோணம் அருகேயுள்ள அய்யாவாடியில் பிரசித்தி பெற்ற பிரத்யங்கிராதேவி கோயில் அமைந்துள்ளது. தனியார் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோயிலில் ஒவ்வோர் அமாவாசை தோறும் நிகும்பலா என்கிற சிறப்பு யாக பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த யாகத்துக்கு முக்கியப் பொருளாக மிளகாய் பயன்படுத்தப்படுவது வழக்கம்.
இந்த யாக பூஜையில் கலந்துகொண்டால் எதிரிகள் வீழ்வார்கள், வெற்றி கிடைக்கும், இழந்த செல்வத்தை மீண்டும் அடையலாம் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை தினத்தில் நடைபெறும் யாக பூஜையில் பல்வேறு அரசியல் பிரபலங்கள், தொழிலதிபர்கள், ஆன்மீகத்தில் நாட்டம்கொண்ட பலர் கலந்துகொண்டுவருகின்றனர்.

கடந்த அமாவாசையின்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இங்கு வந்து நிகும்பலா யாக பூஜையில் கலந்துகொண்டார். சசிகலா நினைத்தது நடக்கவே, அவர் இந்த பூஜையில் கலந்துகொண்டதாக அ.தி.மு.க-வினர் மத்தியில் பேசப்பட்டது அப்போது விவாதத்துக்கும் உள்ளானது.
இந்நிலையில் மாசி அமாவாசையான இன்று நடைபெற்ற நிகும்பலா யாக பூஜையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவி ராதா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 6 -ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் தனது கணவர் தலைமையிலான ஆட்சி அமையவும், எதிரிகள் படுதோல்வி அடையவும் ராதா, நிகும்பலா பூஜையில் கலந்துகொண்டதுடன், சிறப்பு தரிசனமும் செய்துவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து விவரம் அறிந்தவர்கள் தரப்பில் பேசினோம், `பிரத்யங்கரா தேவி கோயிலில் நடைபெறும் நிகும்பலா யாக பூஜை ரொம்பவே பிரசித்திபெற்றது. இந்த யாக பூஜையில் முக்கியப் பொருளாக மிளகாயைப் பயன்படுத்துவர். யாக குண்டத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயில் மிளகாயைப் போடுவர்.
இந்த பூஜையில் கலந்துகொண்டால் எதிரிகள் வீழ்ந்துவிடுவார்கள், வெற்றி என்பது எளிதாகக் கிடைத்துவிடும், இழந்த செல்வங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். இங்கு வந்து செல்லும் பலருக்கு இதுபோல் நடந்திருப்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேயிருக்கிறது.

குறிப்பாக பிரத்யங்கரா தேவி கோயிலுக்கு ஒரு முறை மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் வந்து நிகும்பலா யாக பூஜையில் கலந்துகொண்டனர். அதன் பிறகே இந்தக் கோயில் மிகவும் பிரபலமானது. அத்துடன் கோயிலுக்கு வந்து சென்ற பிறகு மீண்டும் ஜெயலலிதாவின் தலைமையிலான ஆட்சி அமைவதற்கும் வாய்ப்பு உண்டானது.
இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி மனைவியான ராதா, நிகும்பலா யாக பூஜையில் கலந்துகொண்டதுடன், சிறப்பு தரிசனமும் செய்துவிட்டுச் சென்றார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல் என்பது ரொம்பவே முக்கியத்துவமானது.

இதில் வெற்றி பெற்று தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய பெரும் கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சியான தி.மு.க., எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் எனக் கூறி தேர்தல் பணிகளை மேற்கொண்டுவருகிறது.
சசிகலா அரசியலிருந்து ஒதுங்கியிருப்பதாக அறிவித்துவிட்டு என்னதான் நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்துவருகிறார். டி.டி.வி.தினகரன் தன் பங்குக்கு அ.ம.மு.க சார்பில் வேட்பாளர்களை அறிவித்திருப்பதுடன், பிரசார பணிகளிலும் வேகம் காட்டத் தொடங்கியுள்ளார்.

அ.தி.மு.க-விலும் பலர் தனக்கு எதிராகச் செயல்படகூடும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இத்தனை எதிர்ப்புகளையும் சமாளித்து, வெற்றிபெற்று மீண்டும் தன் தலைமையிலான ஆட்சி அமைப்பதற்காக பழனிசாமி பம்பரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறார். தன்னுடைய கணவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நினைத்தது நடக்க வேண்டும்; மீண்டும் ஆட்சி பொறுப்பில் அவர் அமர வேண்டும் என்பதற்காக அவருடைய மனைவி ராதா பிரத்யங்கரா தேவி கோயிலுக்கு வந்து நிகும்பலா பூஜையில் கலந்துகொண்டு மனமுருகி வேண்டிக்கொண்டார்.

தேர்தல் நேரத்தில் இக்கோயிலுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்தால் பெரும் பரபரப்பு உண்டாகும் என்பதால், தான் மட்டும் தனியாக வந்து யாக பூஜையில் கலந்துகொண்டார். அரசியல் எதிரிகள் வீழ்ந்து விடுவார்கள், தன் கணவர் நிச்சயம் வெற்றியடைவார் என்ற பெரும் நம்பிக்கையுடன் ராதா வந்து சென்றிருக்கிறார். அவரின் வேண்டுதல் பலிக்குமா என்பது வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகே தெரிய வரும்’ என்றனர். இதேபோல் பி.ஜே.பி-யின் மாநிலத் துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தனக்கு சீட் கிடைக்க வேண்டும் என தனது குடும்பத்துடன் சென்று யாக பூஜையில் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.