சமூகம்
Published:Updated:

எதிர்கால சிக்கல்கள்... என்ன செய்யப்போகிறார் எடப்பாடி?

எடப்பாடி பழனிசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி

கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றுவது குறித்து, முதல்வர் ஆரம்பத்திலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால், வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

‘மக்களை ஈர்க்கும் வகையிலான திட்டங்களை வரிசையாக அறிவித்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் கலகலப்புடன் களத்தில் இறங்கலாம் என எதிர்பார்த்த எடப்பாடிக்கு, கொரோனா ரூபத்தில் சிக்கல் வந்துவிட்டது.

‘இதை எதிர்த்து எடப்பாடி என்ன செய்யப்போகிறார்?’ என்கிற கேள்வி, அ.தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கொரோனா பரவலின் வேகம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்றுள்ளது. சென்னையில் இந்தத் தொற்று பரவலைத் தடுக்க, ராதாகிருஷ்ணனை சிறப்பு அதிகாரியாக தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில் மே 5-ம் தேதி அன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களிடையே காணொலிமூலம் உரையாற்றினார்.

அதில், ‘‘தமிழகத்தில் தினமும் 12,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதனால் தமிழகத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’’ என்றவர், ‘‘மே மற்றும் ஜூன் மாதமும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை இலவசமாக வழங்கப்படும்’’ என்றார். இதனால் ஜூன் மாதமும் தமிழகத்தில் ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படும் வாய்ப்பு குறைவு என்றே தெரிகிறது.

கோட்டை தரப்பில் இதுகுறித்துப் பேசியவர்கள், “இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக அளவில் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. எந்தளவுக்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதோ, அதே அளவுக்கு குணமடைந்தவர் களின் எண்ணிக்கையும் உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்றால் இறந்தவர்கள் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவே.

கோயம்பேடு மார்க்கெட்டை மாற்றுவது குறித்து, முதல்வர் ஆரம்பத்திலேயே அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆனால், வியாபாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. சில நாள்களுக்கு முன்பாக, சுகாதாரத் துறை அமைச்சரும் துறைச் செயலாளரும் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்கள். அப்போது, `கொரோனா தொற்று பரிசோதனையை அதிகரிக்கலாமா, குறைக்கலாமா?’ என்று கேட்டுள்ளனர். டென்ஷனான முதல்வர், `இதென்ன கேள்வி... உண்மையான எண்ணிக்கையைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை அளியுங்கள்’ என்று கறார் காட்டியிருக்கிறார். அதற்குப் பிறகுதான் சோதனை மையங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தனர்’’ என்கிறார்கள்.

நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழக அரசின் நிதிநிலை மோசமாக உள்ளது. அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதிலேயே பல்வேறு சிக்கல்கள். மத்திய அரசு தமிழக அரசுக்குக் கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரித்தொகையையும் கொடுக்க வில்லை. இதைச் சமாளிக்கவே இப்போது மதுபான கடைகளைத் திறக்க வேண்டிய நெருக்கடியும் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்னும் இரண்டு மாதங்களில் தமிழக அரசு ஏற்கெனவே தாக்கல் செய்த பட்ஜெட்டை, திரும்பவும் மறு ஆய்வு செய்யவும் ஒரு திட்டம் இருக்கிறது. கட்டடங்கள் மற்றும் நெடுஞ்சாலைப் பணிகள் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகளில் கணிசமான அளவு திரும்பப் பெறப்படும்’’ என்றார்.

அதேபோல் அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எதிர்க்கட்சிகளால் கிளப்பப் படுவது எடப்பாடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆளுங்கட்சி தரப்பில் பேசியவர்கள், ‘‘ரேபிட் கிட் விவகாரத்தில் மத்திய அரசு சொன்ன விலைக்குத்தான் தமிழக அரசு வாங்கியிருந்தது. அப்படியே அதில் ஊழல் எனக் குறிப்பிட்டாலும், 24,000 கிட்டுகள் மட்டுமே வாங்கப்பட்டன. ஒரு கிட்டுக்கு 100 ரூபாய் கமிஷனாக வைத்துக்கொண்டாலும், இதில் பெரிய தொகையெல்லாம் கைமாற வாய்ப்பே இல்லை. வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர்தான் இதைப் பெரிதாக்குகிறார்கள். நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தத்திலும் வழக்கமான நடைமுறைகளைத்தான் பின்பற்றியுள்ளது அரசு. அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடுவார்கள். அதேபோலத்தான் பன்னீர்செல்வம் மகன் விவகாரத்தையும் தேவையில்லாமல் கிளப்பியுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அமைச்சரின் மகன் தொழில் செய்யவே கூடாது என சட்டம் இல்லை. அந்தத் தொழிலுக்காக அரசு இயந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் மட்டுமே தவறு. இதுகுறித்து விளக்கம் விரைவில் வெளியாகும்” என்றார்கள்.

குறிப்பாக, அடுத்த ஆறு மாதங்கள் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்படும். அதை எதிர்க்கட்சிகள் ஊதிப் பெரிதாக்குவார்கள் என்ற அச்சம், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உள்ளது. அதை முறியடிக்கவே இப்போது ஊரடங்கில் சில தளர்வுகளைக் கொண்டுவந்து பணப்புழக்கத்தை அதிகரிக்க நினைக்கிறது. கொரோனா தாக்கம் அதிகம் இருந்தாலும் தமிழகத்தைப் பொறுத்தவரை இறப்புகள் குறைவாக இருப்பது முதல்வருக்கு சாதகம். இவற்றையெல்லாம் கணக்குப்போட்டுத்தான் இப்போது காய் நகர்த்த ஆரம்பித்துள்ளார் எடப்பாடி. இனிவரும் காலத்தில் என்ன செய்யப்போகிறார் எடப்பாடி என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்!