Published:Updated:

``கட்சிக்கு நான் தலைவரா... சசிகலா தலைவரா?" - கொந்தளித்த தினகரன்; குழப்பத்தில் நிர்வாகிகள்

சசிகலா, தினகரன்
News
சசிகலா, தினகரன்

சசிகலாவுக்கும் டி.டி.வி.தினகரனுக்கும் இடையே நடக்கும் பனிப்போரில், அ.ம.மு.க நிர்வாகிகள் சிக்கிச் சின்னா பின்னமாகிவருவது அக்கட்சிக்குள் ஏக குழப்பங்களை உருவாக்கியுள்ளது

அ.ம.மு.க என்கிற இயக்கத்தை தினகரன் தொடங்கியபோது, கட்சியின் தலைவராக முன்னிறுத்தப்பட்டவர் சசிகலா. 2019 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், அ.ம.மு.க-வைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்யும் பணிகள் மும்முரமாகின. அந்தச் சமயத்தில், அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளராக தினகரன் தன்னைப் பதிவு செய்துகொண்டார். 'அ.தி.மு.க பொதுச்செயலாளரின் அதிகாரம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், மற்றொரு கட்சிக்கு சசிகலா தலைவராக முடியாது. ஆகவே, வரும் காலத்தில் அ.தி.மு.க., அ.ம.மு.க ஒன்றிணையும்போது, இரண்டு இயக்கங்களுக்கும் தலைவராக சசிகலா இருப்பார்' என்று விளக்கமளித்தது தினகரன் வட்டாரம். சசிகலாவின் படத்தைப் போட்டுத்தான் அந்தத் தேர்தலில் வாக்குகளும் சேகரித்தனர். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, அ.ம.மு.க-வினர் விநியோகித்த துண்டுப்பிரசுரங்கள், பேனர்களில் சசிகலாவின் படம் சிறியதாகவும், தினகரனின் படம் பெரியதாகவும் மாறியது. இது அப்போது சர்ச்சையாகவும் வெடித்தது. தற்போது, 'சசிகலாவுக்கும் அ.ம.மு.க-வுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. கட்சிக்கு நான்தான் தலைவர்' என்று தினகரன் பேசிவருவதாக அ.ம.மு.க நிர்வாகிகள் கூறுவது அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கிறது.

சசிகலா , தினகரன்
சசிகலா , தினகரன்

சசிகலா - தினகரன் இடையிலான 'ஈகோ' மோதல் குறித்து நம்மிடம் பேசிய அ.ம.மு.க-வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலர், ``2021 சட்டமன்றத் தேர்தலில், தனக்கு ஆதரவு தரச் சொல்லி சசிகலாவிடம் கேட்டுப் பார்த்தார் தினகரன். 'அ.ம.மு.க அதிக வாக்கு சதவிகிதத்தைப் பெற்றால் மட்டுமே சசிகலாவுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கும்' என்றும் அவர் சொல்லிப் பார்த்தார். இது எதையும் சசிகலா கண்டுகொள்ளவில்லை. அப்போதே இருவருக்கும் இடையே முட்டிக்கொண்டது. போதாதகுறைக்கு, தினகரனுக்கு எதிர்ப்பான மன்னார்குடி குடும்ப உறவுகள் சிலர், தினகரன் குறித்து அவ்வப்போது சசிகலாவிடம் தவறான தகவல்களைச் சொல்வதில் குறியாக இருந்தனர். இந்தச் சூழலில்தான், அக்டோபர் 16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார் சசிகலா. இதைத் தொடர்ந்து, தென்மாவட்டங்களில் அவர் சுற்றுப்பயணம் செய்யவும் ஏற்பாடானது. அப்போது அறிக்கை வெளியிட்ட தினகரன், 'சசிகலா செல்லுமிடமெல்லாம் அ.ம.மு.க தொண்டர்கள் வரவேற்பளிப்பார்கள். கழக நிர்வாகிகள் அவரைச் சந்தித்துப் பேசுவார்கள்' என்றார். ஆனால், இதைச் செய்ததாலேயே பலரையும் கட்சியிலிருந்து ஓரங்கட்டிவிட்டார் தினகரன். இதற்கு சமீபத்திய உதாரணம் பூந்தமல்லி நகரச் செயலாளர் கந்தன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

பூந்தமல்லியில் மழை வெள்ள நிவாரண உதவிகளை சசிகலா வழங்கியபோது, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் கந்தன். டிசம்பர் 23-ம் தேதி கீழ்ப்பாக்கத்திலுள்ள முதியோர் இல்லத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவிலும் சசிகலாவுடன் கந்தன் கலந்துகொண்டார். இதெல்லாம் தினகரன் காதுக்குச் செல்லவும் அவர் உஷ்ணமாகிவிட்டார். டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆரின் நினைவுநாளையொட்டி, அ.ம.மு.க தலைமையகத்தில் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை முடித்துவிட்டுக் கிளம்பிய தினகரன், கட்சி அலுவலக வாசலில் நின்றிருந்த கந்தனை அழைத்து, 'உன் நடவடிக்கையே சரியில்லை. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்படுறே' என்று ஏகத்துக்கும் எகிறிவிட்டார். அன்றே நகரச் செயலாளர் பொறுப்பிலிருந்து கந்தனை நீக்கியும்விட்டார் தினகரன். 'சசிகலாவுக்கு ஆதரவாக கந்தன் செயல்பட்டார் என்கிற காரணத்தால்தான் அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்' என்பது பிற்பாடுதான் எங்களுக்குத் தெரியவந்தது. கட்சிப் பதவியிலிருந்து கந்தன் நீக்கப்பட்டதால், அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், பூந்தமல்லி நகர அ.ம.மு.க நிர்வாகிகள் அனைவரும் தங்கள் கட்சிப் பதவியைக் கூண்டோடு ராஜினாமா செய்திருக்கிறார்கள். தங்கள் ராஜினாமா கடிதங்களை டிசம்பர் 25-ம் தேதி தினகரன் வீட்டுக்கே சென்று அளித்திருக்கிறார்கள்.

ராஜினாமா செய்த நிர்வாகிகள்
ராஜினாமா செய்த நிர்வாகிகள்

இந்தச் சர்ச்சை பெரிதாகக் கட்சிக்குள் வெடித்ததால், இரண்டாம்கட்டத் தலைவர்கள் சிலர் தினகரனிடம் பேசினோம். அப்போது தினகரன், 'கட்சிக்கு நான் தலைவரா, சசிகலா தலைவரா? தென்மாவட்டங்கள்ல அவங்க சுற்றுப்பயணம் செய்யும்போது, உறுதுணையாக இருக்கச் சொன்னேன். அதற்காக, எந்நேரமும் அவங்ககூடவே சுத்திகிட்டுத் திரிஞ்சா கட்சியை எப்படி வளர்க்குறது? சசிகலாதான் தலைவர்னு முடிவு பண்றவங்க, அவங்ககூடயே போய்விடலாம். எனக்குத் தேவையில்லை' என்று வெடித்துத் தீர்த்துவிட்டார். சமாதானம் பேசச் சென்ற தலைவர்களுக்கு என்ன சொல்வதெனத் தெரியவில்லை. ஆளுங்கட்சியான தி.மு.க-வே உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்துகிறது. ஆனால், அ.ம.மு.க-வை அரசியல் கட்சியாகப் பதிவு செய்ததிலிருந்து இதுவரை உறுப்பினர் அடையாள அட்டையைக்கூட உருப்படியாக வழங்கவில்லை. உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இதுவரை பூத் கமிட்டிக் கூட்டங்களை நடத்தவில்லை. கட்சியிலிருந்து வெளியேறுபவர்கள் பற்றி தினகரன் கவலைப்படுவதே இல்லை. 'சசிகலாவுக்கு வரவேற்பு அளியுங்கள்' என்று அவர் சொன்னதால்தான், கழக நிர்வாகிகள் சசிக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். இதையே காரணமாக வைத்து, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைக் கட்சியிலிருந்து ஓரங்கட்டுகிறார் தினகரன். இவர்கள் இருவருக்கும் இடையிலான 'ஈகோ' யுத்தத்தில் அ.ம.மு.க-வினர்தான் பலியாகிறார்கள்" என்று புலம்பித் தீர்த்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த 'ஈகோ' மோதல் தொடர்பாக தினகரன் தரப்பிலும் பேசினோம். ``சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை. அவரவர் வழியில் அவரவர் பயணிக்கிறார்கள். எம்.ஜி.ஆரின் நினைவு நாளையொட்டி, அவரின் சமாதியில் அஞ்சலி செலுத்த போலீஸார் அனுமதி மறுத்தனர். அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்ட கோவை விழாவுக்கு போலீஸ் அனுமதி கிடைத்திருக்கிறது. இதைச் சுட்டிக்காட்டி, சசிகலா - தினகரன் இருவரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக சசிகலா தன்னை முன்னிறுத்துகிறார். அ.ம.மு.க-வின் பொதுச்செயலாளராக தினகரன் செயல்படுகிறார். இரண்டும் தனித்தனி இயக்கங்கள். இதில் குழப்பமடைவதற்கு என்ன இருக்கிறது?" என்றனர்.

தினகரன் - சசிகலா
தினகரன் - சசிகலா

பக்தி படமான `திருவிளையாடலி’ல் வருவதுபோல, 'என் நாடு, என் மக்கள்' என்று தனியாகச் சென்றுவிட்டார் தினகரன். தன்னுடைய இமேஜைக் குறைக்கும் வகையில், தன் கட்சிக்குள்ளேயே 'சசி அணி' என்று ஓர் அணி உருவாகிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார் அவர். ஆவின் வைத்தியநாதன், தூத்துக்குடி ஹென்றி தாமஸ் என சசிகலாவுக்கு விசுவாசமான பலரும் அ.ம.மு.க பொறுப்புகளிலிருந்து ஓரங்கட்டப்பட்டது இந்த வகையில்தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். 'ஒரே இடத்துக்கு சசிகலாவும் தானும் வர நேர்ந்தால், அந்த இடத்திலிருந்து தான் கிளம்பும்போது, அ.ம.மு.க முக்கிய நிர்வாகிகள் அனைவரும் கிளம்பிவிட வேண்டும். சசிகலாவுக்காகக் காத்திருக்கக் கூடாது' என்று வாய்மொழியாக தினகரன் உத்தரவிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அதேசமயம், 'சித்தியை முழுவதுமாக புறம்தள்ளுகிறார்' என்று சர்ச்சை எழுந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான், அ.ம.மு.க-வைச் சேர்ந்த செந்தமிழன், சி.ஆர்.சரஸ்வதி ஆகியோரை மட்டும் சசிகலாவுடன் நிற்பதற்கு அனுமதி அளித்திருக்கிறாராம் தினகரன். இந்த விவகாரமெல்லாம் சசிகலாவுக்குத் தெரிந்தாலும், இதையெல்லாம் அவர் பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்கிறது தி.நகர் வட்டாரம். 'இந்த இரு தலைவர்களுக்கும் இடையிலான 'ஈகோ' மோதல் தீர்ந்தால் மட்டுமே, அ.ம.மு.க-வில் குழப்பங்கள் தீரும்' என்பதே அ.ம.மு.க நிர்வாகிகள் தரும் தகவல்.