அலசல்
Published:Updated:

சூழல் போர் 2020: பத்மப்ரியா பற்றவைத்த வைரல் தீ!

பத்மப்ரியா
பிரீமியம் ஸ்டோரி
News
பத்மப்ரியா

டாபிக் நான் இல்லை. இ.ஐ.ஏ தான் டாபிக். இ.ஐ.ஏ-வின் பாதிப்புகள் குறித்து மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.

மத்திய அரசின் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு 2020’ வரைவு அறிக்கையைக் கடுமையாக விமர்சித்து ‘சென்னை தமிழச்சி’ என்கிற பத்மப்ரியா மூட்டிய நெருப்பு, தமிழகம் முழுவதும் வைரலாகப் பற்றி எரிகிறது. அவர் வெளியிட்ட வீடியோ ‘இ.ஐ.ஏ 2020’, சூழல் போராக மாறி மிகப்பெரிய விவாதத்தை உருவாக்கியிருக் கிறது. இவருடைய பேச்சால் ஆத்திரமடைந்த சிலர், இந்தப் பெண்ணுக்கு எதிராகக் கருத்துகளைப் பரப்பி வருகிறார்கள். ‘ஜூனியர் விகடன்’ சார்பாக பத்மப்ரியாவிடம் பேசினோம்.

“இந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று உங்களுக்கு ஏன் தோன்றியது?”

“பெண்கள், குழந்தைகள், வாயில்லா ஜீவன்கள் தொடர்பான பிரச்னைகளை வீடியோவில் பேசி, என் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடுவது வழக்கம். அரசியல்ரீதியான வீடியோ எதையும் நான் வெளியிட்டது கிடையாது. இ.ஐ.ஏ 2020 பற்றி சில விஷயங்களைப் படித்தபோது, அது மிகப் பெரிய பிரச்னையாக எனக்குத் தோன்றியது. எனவே, அதுபற்றி வெளியாகி யிருந்த நிறைய கட்டுரை களைப் படித்தேன். வீடியோக் களைப் பார்த்தேன். அதன் மூலம் நான் அறிந்துகொண்ட பல விஷயங்கள் பெரும் அச்சத்தைக் கொடுத்தன. சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு வரைவு அறிக்கை மார்ச் மாதமே வெளியாகியும், இத்தனை நாள்களாக அது பற்றி எந்த விவாதமும் நடக்கவில்லை என்ற கவலை எனக்கு ஏற்பட்டது. என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 70,000 ஃபாலோயர்ஸ் இருந்தனர். `அவர்களில் 10,000 பேருக்காவது இந்தச் செய்தி போய்ச் சேரட்டுமே...’ என்றுதான் அந்த வீடியோவை வெளியிட்டேன். அது இந்த அளவுக்கு வைரலாகும் என்று நான் நினைக்கவில்லை.”

“அந்த வீடியோ வைரல் ஆன விஷயம் உங்களுக்கு எப்படித் தெரியவந்தது?”

“மாலை 6:00 மணியளவில் வீடியோவை அப்லோடு செய்தேன். இரவு 10 மணி வரை எதுவும் தெரியவில்லை. 10 மணிக்கு மேல் நிறைய பேர் என் வீடியோவை ஸ்டேட்டஸாகவைக்க ஆரம்பித்தனர். ‘உன் வீடியோவை என் ஃபேமிலி குரூப்பில் பார்த்தேன்’ என்று என் நண்பர்கள் மெசேஜ் செய்தார்கள். காலையில் எழுந்து பார்த்தால், என் மெசேஜ் பாக்ஸ் முழுவதும் நிரம்பிவிட்டது.”

“அரசு ஒரு வரைவு அறிக்கை வெளியிடுகிறதென்றால், ஒட்டுமொத்தமாக அது நிராகரிக்கப்பட வேண்டியது என்று சொல்லிவிட முடியாது. நல்ல அம்சங்களும் அதில் இருக்கலாம். அப்படியிருக்கும்போது, நீங்கள் இவ்வளவு கடுமையாக அதை ஏன் எதிர்க்க வேண்டும்... நீங்கள் அதன் 83 பக்கங்களையும் முழுமையாகப் படித்தீர்களா?”

‘‘வரைவு அறிக்கையை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் அந்த வீடியோவை வெளியிட்டேன். நான் ஓர் அறிவியல் மாணவி. அந்த வரைவு அறிக்கையைப் படித்தபோது, அதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது எனக்குத் தெரிந்தது. அரசு என்ன செய்யப்போகிறது என்பதைக் கொஞ்சம் தெளிவுபடுத்திவிட்டு, பிறகு தொழிற்சாலைகளைக் கொண்டுவந்தால் நல்லது. இதை அந்த வீடியோவிலேயே சொல்லியிருக்கிறேன். தொழில் வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளும் நமக்கு முக்கியம். அதே நேரத்தில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டியதும் முக்கியம்தானே... நான் வீடியோ வெளியிட்ட பிறகுதான் அது குறித்து மக்களுக்குத் தெரியவருகிறது. அப்படியெனில், ஏன் வரைவு அறிக்கையை மாநில மொழிகளில் வெளியிடவில்லை?’’

‘‘ `தொழிற்சாலையை ஆரம்பித்த பிறகும் சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யலாம்’ என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறதுதானே?’’

“ஒரு தொழிற்சாலை ஆரம்பிக்க வேண்டுமென்றால், நிறைய விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் நம் நாட்டில் இருக்கின்றன. அப்படி இருக்கும்போதே இங்கு எவ்வளவு விதிமீறல்கள் நடக்கின்றன. அதனால், சுற்றுச்சூழல் எந்த அளவுக்கு பாதிக்கப்படுகிறது என்பதை நாம் பார்த்துவருகிறோம். ஆனால், ‘முதலில் தொழிற்சாலையை ஆரம்பித்துக்கொள்... மற்றவற்றைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என்று வரைவு அறிக்கை சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? அதன் விளைவுகள் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதுதான் என் அச்சம். எந்தக் கேள்வி கேட்பாரும் இல்லாமல் நீர்நிலைகளையும் காடுகளையும் துவம்சம் செய்துவிடுவார்கள். இதனால் ஒரு கிராமமோ, ஒரு நகரமோ மட்டும் பாதிக்கப்படாது. ஒட்டுமொத்த தேசத்தையும் இது அழித்துவிடும்.”

“உங்களைப் பற்றி ‘அழகுக் குறிப்புகள் பற்றிய வீடியோக்கள் வெளியிடுபவர்’, ‘அவரை யாரோ இயக்குகிறார்கள்’ என்றும் செய்திகள் சமூக வலைதளங்களில் வருகின்றனவே?”

‘‘அந்த ஒரு வீடியோவை வெளியிட்டதற்காக என் அடையாளங்களையே மாற்றிவிட்டார்கள். நான் பியூட்டீஷியன் கிடையாது. மூலிகைகளைப் பயன்படுத்தி அழகுசாதனப் பொருள்களைத் தயாரிப்பது குறித்து சில வீடியோக்களைப் போட்டிருக்கிறேன். தூங்குவதற்கு முன்னர் ஏன் செல்போனை பயன்படுத்தக் கூடாது, நின்றுகொண்டே ஏன் தண்ணீர் குடிக்கக் கூடாது என்பதுபோன்ற டிப்ஸ் வீடியோக்களை வெளியிட்டிருக்கிறேன்.

ஒரு கொடுமை நடக்கிறதென்றால், ஒன்றிரண்டு நாள்கள் அது பற்றிப் பேசிவிட்டு, பிறகு அதை மக்கள் மறந்துவிடுகிறார்கள். இது பற்றிய ஆதங்கம் எனக்கு உண்டு. எனவேதான் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகிறேனென்றால், அதில் பாதிக்கப்பட்டவளாகவே நான் பேசிவிடுகிறேன். அப்படித்தான் ஆசிட் வீச்சு பற்றிய நான் பேசிய ஒரு வீடியோ அமைந்தது. பெங்களூரில் ஒரு பள்ளி மாணவியும் ஒரு கல்லூரி மாணவியும் அடுத்தடுத்த நாள்களில் ஆசிட் வீச்சுக்கு ஆளானார்கள். அது என்னைக் கடுமையாக பாதித்தது. அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டேன். அது பயங்கர வைரல் ஆகிவிட்டது. அதைப் பார்த்தவர்கள், நான் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவள் என்று நினைத்துவிட்டார்கள். ‘இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமையைப் பார்த்தீர்களா?’ என்று சில பிரபலங்கள்கூட என் புகைப்படத்தை வெளியிட்டு ட்வீட் செய்தார்கள்.”

“நீங்கள் யாரிடமோ பணம் வாங்கிக்கொண்டு இப்படிப் பேசுகிறீர்கள் என்றுகூட சமூக வலைதளத்தில் சிலர் எழுதுகிறார்களே?”

“என்னைப் பற்றி கல்யாண் என்ற ஒருவர் வரிசையாக ட்வீட் போட்டுவந்தார். அவர் என்னவெல்லாம் ட்வீட் போடுகிறாரோ, அவற்றையெல்லாம் கமென்ட்களாக மாற்ற ஆரம்பித்தனர். அப்படித்தான், ‘இந்தப் பெண் சீனாவின் கைக்கூலியா?’, ‘பணம் வாங்கிக்கொண்டு இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்’, ‘போனால் போகட்டும், நான்கு லட்சம் செட்டில் பண்ணிவிடுங்கள் பாஸ்’ என்றெல்லாம் அவர் ட்வீட் போட்டார். ‘நான் தி.மு.க-வின் கைக்கூலி’ என்றுகூட எழுதினார்கள். யாரோ ஒருவர் என்ன எழுதினாலும், அதை அப்படியே கண்ணை மூடிக்கொண்டு சிலர் நம்புவது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இத்தகைய கொடுமைகளை நானும் என் குடும்பத்தினரும் இப்போதுதான் முதன்முறையாக அனுபவிக்கிறோம்.”

“உங்கள் குடும்பத்தினர் என்ன நினைக்கிறார்கள்.?”

“ `ஏன் இந்த வேண்டாத வேலை...’ என்று முதலில் சொன்னார்கள். பிறகு, அந்த வீடியோவுக்கு வந்த எதிர்வினைகளைப் பார்த்துவிட்டு, ‘நீ மறுப்பு வீடியோ ஒன்று போடு’ என்று சொன்னார்கள். அதனால்தான் இரண்டாவதாக ஒரு வீடியோ வெளியிட்டேன். இல்லையென்றால், முதல் வீடியோவைச் சர்ச்சையாக மாற்றி, ‘அந்த வீடியோ தவறானது, இவள் பணம் வாங்கிக்கொண்டுதான் இப்படிப் பேசினாள்’ என்றெல்லாம் பிரசாரம் செய்திருப்பார்கள்.”

“அந்த வீடியோ சர்ச்சையான பிறகு அதை நீக்கிவிட்டீர்கள். என்ன மாதிரியான அச்சுறுத்தல்கள் வந்தன?”

“தொலைபேசியிலோ, நேரிலோ என்னை யாரும் அச்சுறுத்தவில்லை. ஆனால், கமென்ட் பாக்ஸில் வந்து சிலர் தவறாக கமென்ட் பதிவிடுகிறார்கள். அது எனக்குப் பிடிக்கவிலலை. என்னால் ஒவ்வொரு கமென்ட்டையும் நீக்கிக்கொண்டிருக்க முடியாது. எனவே, அந்த வீடியோவை நீக்கிவிட்டேன். இதை ஒரு பிரச்னையாக மாற்றுவதே சில கட்சிக்காரர்களும், அதன் ஐ.டி பிரிவுகளும்தான். மத்திய அரசு நாட்டின் பாதுகாப்புத்துறையில் சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை வெளியேயிருந்து பார்க்கும்போது தெரிகிறது. நாட்டைப் பாதுகாக்க பல விஷயங்களைச் செய்துவிட்டு, நாட்டுக்குள் ஓர் ஓட்டையைக் கொண்டுவந்தால், வெளியே அவர்கள் எவ்வளவு சிறப்பான நடவடிக்கைகள் எடுத்தாலும் அவற்றுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.”

“இ.ஐ.ஏ 2020 குறித்து விவாதத்துக்கு வருமாறு உங்களைப் பலரும் அழைக்கிறார்களே... நீங்கள் தயாரா?”

“டாபிக் நான் இல்லை. இ.ஐ.ஏதான் டாபிக். இ.ஐ.ஏ-வின் பாதிப்புகள் குறித்து மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அதைச் சொல்லிவிட்டேன். இப்போது என்னைத் தற்காத்துக்கொள்வதுதான் எனக்கு முக்கியம். அவர்கள் விவாதம் நடத்த வேண்டுமென்றால், சமூகச் செயற்பாட்டாளர்களிடம் நடத்திக் கொள்ளட்டும். ஒரு வீடியோவுக்காக ஒரே நாளில் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டார்கள்.”

“ஒரு போராளியாக உங்களை மாற்றிவிட்டார்கள் என்று நினைக்கிறீர்களா?”

“மக்கள் நலன்களுக்காகக் குரல் கொடுக்கிறேன் என்பதற்காக என்னைப் போராளி என்று சொல்வார்களேயானால், நான் போராளியாக இருந்துவிட்டுப்போகிறேன்.”