Election bannerElection banner
Published:Updated:

மே 2-ம் தேதி வெற்றிக் கொண்டாட்டங்களுக்குத் தடை! - நீதிமன்றம் வைத்த குட்டுதான் காரணமா?

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினத்தன்று வெற்றி பெற்ற கட்சியினர் கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6-ம் தேதி முடிந்தது. சுமார் ஒரு மாதம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பெட்டிகள், மே 2-ம் தேதி சீல் பிரிக்கப்பட்டு எண்ணப்படவுள்ளன. 234 தொகுதிகளில் பதிவான மொத்த வாக்குகளும், 75 வாக்கு எண்ணும் மையங்களில் எண்ணப்பட இருக்கிறது. இந்த நிலையில், வெற்றி பெறும் கட்சியின் நிர்வாகிகள் எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

எதற்காக இந்த தடை?

அரசியல் பார்வையாளர்கள் தரப்பில் பேசினோம். “எல்லாம் நீதிமன்றம் வைத்த குட்டுதான் காரணம். `வாக்கு எண்ணிக்கையின் போது கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், ‘தேர்தல் ஆணையம் மீது கொலைக்குற்றம் சுமத்தினாலும் தகும். கொரோனா இந்தளவு பரவியதற்கு தேர்தல் ஆணையம்தான் காரணம். சரியான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் வாக்கு எண்ணிக்கைக்குத் தடை விதிக்க நேரிடும்’ என கண்டித்தது. மேலும், மே 1, 2 ஆகிய இரு நாட்களிலும் முழு ஊரடங்கினை அமல்படுத்த தமிழக அரசுக்கு பரிந்துரையும் செய்தது நீதிமன்றம்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமையை முழு ஊரடங்காக தமிழக அரசு அறிவித்தது. எனினும் மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என்பதால், அன்றைய தினம் மட்டும் ஊரடங்கினை தளர்வுபடுத்தியது தேர்தல் ஆணையம். தற்போது நீதிமன்றமே முழு ஊரடங்கிற்கு பரிந்துரை செய்திருப்பதால் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் திணருகிறது தேர்தல் ஆணையம். ஏனெனில், வாக்கு எண்ணும் மையங்களுக்கு அரசு அதிகாரிகள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் ஏஜென்டுகள், கட்சி நிர்வாகிகள் என பலரும் செல்ல வேண்டிய தேவையிருப்பதால் அன்றைய தினம் முழு ஊரடங்கு சாத்தியமில்லை.

கட்சித் தலைவர்களின் வாக்குச் சேகரிப்பு, பிரசாரம், வாக்குப்பதிவு நடந்தபோது என எதையுமே தேர்தல் ஆணையம் விழிப்புணர்வுடன் கண்காணிக்கவில்லை. வெறும் வியாபாரிகளை மறித்து சோதனை என்கிற பெயரில் பணத்தை பறிமுதல் செய்வதில்தான் தேர்தல் ஆணையம் குறியாக இருந்தது. மாநில அரசு என்று இருந்தாலும், போலீஸ் உள்ளிட்ட அத்தனை துறைகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிடுகிறது. இப்படியான சூழலில் தேர்தல் ஆணையம்தான் நடக்கும் நிகழ்வுகளுக்குப் பொறுப்பு. பொறுப்பை சரியாக கையாளததே ஒவ்வொரு பிரசாரத்திலும் கூட்டம் அலைமோதியதற்குக் காரணம். இதையெல்லாம் வைத்துதான் நீதிமன்றமும் தேர்தல் ஆணையத்துக்கு குட்டுவைத்தது.

கொரோனா: `தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை!’ - உயர் நீதிமன்றம் கண்டனம்

வாக்கு எண்ணிக்கை நாளன்று முழு ஊரடங்கையும் அமல்படுத்த வாய்ப்பில்லை, முழுமையாக திறந்துவிட்டால் மீண்டும் நீதிமன்றத்தில் குட்டு வாங்க நேரிடும். இதனை ஆராய்ந்துதான், வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். ஏன் இந்தத் தடை? அப்படி என்ன கொண்டாட்டங்கள் இருக்கும்? என்று நினைக்கலாம். இரு கட்சிகளின் நிர்வாகிகளும், ஏஜென்டுகளும் வாக்கு எண்ணும் மையங்களில் குவிந்திருப்பார்கள். ஒரு கட்சி வேட்பாளர் வெற்றி என அறிவிப்பு வந்துவிட்டால் அக்கட்சியினர் வாக்கு எண்ணும் மையங்களுக்குள்ளேயே பட்டாசு வெடித்துக் கொண்டாடுவர்.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

இனிப்புகளை வாங்கிக்கொண்டு பேருந்துகள், வாகனங்களில் செல்பவர்களுக்கு கொடுத்து ஆட்டம் போடுவார்கள். வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற வருகை தரும் வேட்பாளருடன் 50-க்கும் மேற்பட்ட கட்சியினர் புடைசூழ வலம்வருவார்கள். வெற்றியைக் கொண்டாடும் வகையில் பேரணிகள், நன்றி அறிவிப்புக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள் என அடுத்த ஒருவாரத்துக்கு ஆளும் கட்சியாக மாறும் தரப்பில் குஷிக்குக் குறைவிருக்காது. ஏற்கனவே, மே மாதம் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் என மருத்துவர்கள் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வெற்றிக் கொண்டாட்டங்களின் மூலம் மேலும் கொரோனா தாக்கமும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என்பதால்தான் தேர்தல் ஆணையம் கொண்டாட்டங்களுக்குத் தடை விதித்துள்ளது. இது நல்ல வரவேற்கத்தக்க முடிவுதான்!” என்பதோடு முடித்துக்கொண்டனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு