Published:Updated:

தேர்தல் தோல்வி; திடீரென காணாமல்போன அண்ணா; திரும்ப வந்து சொன்ன அந்த வார்த்தை!- அரசியல் அப்போ அப்படி-7

அண்ணா
News
அண்ணா

அரசியல்... அப்போ அப்படி - 7 : ``நான் வந்தேன்... ஓட்டுக் கேட்டேன்... என்னைச் சாப்பிடச் சொன்னீர்கள்... நானும் உங்கள் வீட்டில் சாப்பிட்டேன். நாளை காங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் உங்கள் வீட்டில் சாப்பிடச் சொல்லுங்கள்."

Published:Updated:

தேர்தல் தோல்வி; திடீரென காணாமல்போன அண்ணா; திரும்ப வந்து சொன்ன அந்த வார்த்தை!- அரசியல் அப்போ அப்படி-7

அரசியல்... அப்போ அப்படி - 7 : ``நான் வந்தேன்... ஓட்டுக் கேட்டேன்... என்னைச் சாப்பிடச் சொன்னீர்கள்... நானும் உங்கள் வீட்டில் சாப்பிட்டேன். நாளை காங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் உங்கள் வீட்டில் சாப்பிடச் சொல்லுங்கள்."

அண்ணா
News
அண்ணா

இன்று காங்கிரஸும் திமுக-வும் கூட்டணிக் கட்சிகளாக இருக்கலாம். இரு கட்சித் தலைவர்களும் தோளாடு தோள் உரசி ஒட்டி உறவாடலாம். ஆனால், நீதிக்கட்சி காலம் தொட்டு, 1967 தேர்தல் வரையிலான காலகட்டம் வரை, காங்கிரஸ் கட்சியை திராவிட இயக்கத் தலைவர்கள் தங்களது பிரசாரம் மூலம் திணறடித்ததும், பதிலுக்கு திமுக மீது காங்கிரஸ் காட்டிய ஆவேசமும் காலத்துக்கும் மறக்க முடியாத நிகழ்வுகள். இருதரப்புமே பரம வைரிபோலவே தேர்தல் களத்தில் மோதிக்கொண்டன.

அதேசமயம், தேர்தல் தோல்வியை அந்தத் தலைவர்கள் மிகச் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார்கள். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முடிவுகட்டிய 1967 தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட சீனிவாசன் என்ற மிகச் சாதாரண திமுக தொண்டரிடம் தோல்வியுற்ற காமராஜர், அந்தத் தோல்வியை மிக எளிதாவே எடுத்துக்கொண்டார்.

காமராஜர்
காமராஜர்

அதேபோல, தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டு முறை தேர்தல் தோல்வியைச் சந்தித்த திமுக-வின் நிறுவனத் தலைவரான அண்ணாவும், அதை மிக எளிதாக எடுத்துக்கொண்டு, அடுத்தகட்டத்துக்கு நகர்ந்ததுதான், அவரைத் தமிழக அரசியலில் இன்றளவும் ஓர் அசைக்க முடியாத அரசியல் சக்தியாகவும், பண்பாட்டு அடையாளமாகவும் உயரத்துக்குக் கொண்டு சென்றது.

முதல் தேர்தலிலேயே காங்கிரஸைக் கடுப்பேற்றிய அண்ணா

திராவிட இயக்கத்துக்கு முன்னோடியாகப் பார்க்கப்படும் நீதிக்கட்சி, முதலில் 'பிராமணரல்லாதோர் இயக்கம்’ என்ற பெயரில்தான் உருவானது. அதுவே 1916-ல் தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாக மாறியது. இந்தச் சங்கம் நடத்திய பத்திரிகையின் பெயர்தான் ‘ஜஸ்டிஸ்.’ இதுவே பின்னாளில் அந்தக் கட்சிக்குப் பெயரானது. அதாவது நீதிக்கட்சி, காங்கிரஸுக்கு எதிரான கட்சி என்பதால் இதை `பிரிட்டிஷாருக்கு ஆதரவான கட்சி’ என்று காங்கிரஸ்காரர்கள் அப்போது விமர்சனம் செய்தனர்.

அண்ணா
அண்ணா

1920 தேர்தலில் நீதிக்கட்சி சென்னை மாகாண ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் தொடர்ச்சியாக 1936-ம் ஆண்டில். சென்னை நகரசபைத் தேர்தல் நடந்தது. அப்போது பெத்துநாயக்கன் பேட்டைத் தொகுதியில் நீதிக்கட்சி சார்பில் வேட்பாளராக நின்றார் அண்ணா. அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பாலசுப்பிரமணிய முதலியார் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஓர் அதிசயத்தை நிகழ்த்திக் காட்டினார் அண்ணா. சேரிப்பகுதிக்கு ஓட்டுக் கேட்கச் சென்ற அவர், அவர்களின் வீட்டில் சாப்பிட்டார்.

அப்போது அவர், அம்மக்களிடம், ``நான் வந்தேன்... ஓட்டுக் கேட்டேன்... என்னைச் சாப்பிடச் சொன்னீர்கள்... நானும் உங்கள் வீட்டில் சாப்பிட்டேன். நாளை காங்கிரஸ்காரர்கள் வருவார்கள். அவர்களையும் உங்கள் வீட்டில் சாப்பிடச் சொல்லுங்கள்" என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

நடந்த விஷயம் தெரியாமல், மறுதினம், பாலசுப்பிரமணிய முதலியாருக்கு ஆதரவாக சீனிவாச அய்யர் என்பவர் உட்பட காங்கிரஸ் பிரமுகர்கள் சேரிக்குச் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த மக்கள், `` நேற்று பிரசாரத்துக்கு வந்த அண்ணா எங்கள் வீட்டில் சாப்பிட்டுவிட்டுச் சென்றார். நீங்களும் சாப்பிட்டுவிட்டுப் போங்கள்..." என்று கையைப் பிடித்துக்கொண்டு கேட்கவே, என்ன சொல்வதென்று தெரியாமல் திகைத்தனர் காங்கிரஸார்.

ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியை ``உயர் சாதியினருக்கான கட்சி" என நீதிக்கட்சி குறிப்பிட்டு அப்போது கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. எனவே சாப்பிடாமல் போனால், குற்றச்சாட்டை மக்கள் நம்பிவிடுவார்களே என்ற அச்சத்தில், மனதுக்குள் அண்ணாவைச் சபித்தபடியே வேறு வழியில்லாமல் அவர்கள் வீட்டில் சாப்பிட்டார்கள்.

அந்தக் கடுப்புடன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸார், ``அண்ணாவுக்கு ஓட்டுப் போட்டால் ஆலயங்களில் விளக்கு எரியாது" என்று பிரசாரம் செய்தனர். பதிலடிக்கு அண்ணாவுக்குச் சொல்லியா கொடுக்க வேண்டும்..?

``சென்னையிலுள்ள சேரிகளெல்லாம் இருளில் இருக்கின்றன. எனவே, அவர்கள் வசிக்கும் பகுதிக்கு விளக்கு போட்ட பிறகு பணமும் மின்சாரமும் மிச்சப்பட்டால் கோயில்களில் விளக்கு எரியும்" என உடனே அண்ணாவிடமிருந்து பறந்து வந்தது பதிலடி. இது அப்போது காங்கிரஸை ஆதரித்த உயர் சாதியினருக்குக் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்த, அந்த தேர்தலில் அண்ணாவைத் தோற்கடித்தே தீர வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்கினர்.

அண்ணா
அண்ணா

தேர்தலில் தோல்வி... திரைப்படம் பார்க்கச் சென்ற அண்ணா

தேர்தலுக்குப் புதுசு என்பதால், அந்தத் தேர்தலில் அண்ணா தோல்வியுற்றார். இந்தநிலையில், ``சரி பரவாயில்லை... அடுத்த தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்" என ஆறுதல் சொல்வதற்காக, தேர்தல் முடிவு வந்த நேரத்தில் அண்ணாவைத் தேடினார்கள் நீதிக்கட்சியினர். ஆனால், அண்ணாவைக் காணவில்லை. ``என்னவோ... ஏதோ..?" எனக் கட்சியினர் பரிதவித்தனர். அண்ணாவைத் தேடி நாலா திசைகளிலும் ஆட்கள் பறக்க, சில மணி நேரம் கழித்து, அண்ணா கூலாகத் திரும்பி வந்தார்.

அண்ணாவைப் பார்த்ததும், ``அவர் பத்திரமாகத் திரும்பி வந்துவிட்டாரே... அப்பாடா..." என ஆறுதல் பெருமூச்சுவிட்ட கட்சியினர், அதே சமயம், ``இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் எங்கே போய்விட்டார்..? இவரைக் காணாமல் தவித்துவிட்டோமே..!" என ஆற்றாமையும் கோபமுமாக அண்ணாவிடம் அது குறித்துக் கேட்க, அண்ணாவோ, ``எங்கேயும் போகவில்லை... 'பட்டினத்தார்' படம் பார்க்கத்தான் சென்றுவிட்டு வந்தேன்..!" என அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்தார்.

அதைக் கேட்ட கட்சியினர், ``அப்படியானால் தேர்தல் தோல்வி குறித்து உங்களுக்கு வருத்தமில்லையா..?" எனக் கேட்க, "மக்களுக்கு நாம் அறிந்ததைச் சொன்னோம். அவர்கள் தமக்குப் பிடித்தவரைத் தேர்ந்தெடுத்தார்கள். அதோடு எலெக்ஷனை மறந்துவிட வேண்டும். ஓட்டுக்கேட்பதும், பிரசாரம் செய்வதும் மட்டுமே நமது உரிமை. வெற்றி தோல்வி நம் கையில் இல்லை" எனச் சாதாரணமாகச் சொன்னார். அப்படியான ஒரு பக்குவம் தனிக்கட்சி ஆரம்பிக்கும் முன்னரே அண்ணாவுக்கு வந்திருந்தது.

அதனால்தான், அவரால் தனிக்கட்சிக் கண்ட பின்னர், ``பதவி என்பது தோளில் கிடக்கும் துண்டு. கொள்கை என்பது இடுப்பில் கட்டியிருக்கும் வேட்டி. பதவிக்காக கொள்கையைத் துறக்கக் கூடாது" எனச் சொல்ல முடிந்தது.

இரண்டாவது தோல்வி... அண்ணா சொன்ன அந்த வார்த்தை

நீதிக்கட்சி, அடுத்து திராவிடர் கழகம் என அரசியல் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட அண்ணா, அதற்கடுத்தபடியாக `திராவிட முன்னேற்றக் கழகம்’ எனும் தனிக்கட்சியைத் தொடங்கி, காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்ந்து கடும் நெருக்கடியைக் கொடுத்து வந்தார். 1957-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக 15 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அண்ணா, கருணாநிதி என திமுக-வின் பெருந்தலைகள் எல்லாம் சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்திருந்தனர்.

இவர்களை இப்படியேவிட்டால், காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடும் என உணர்ந்த காமராஜர், அடுத்து வந்த 1962-ம் ஆண்டு தேர்தலில் அண்ணா உட்பட திமுக-வின் 15 எம்.எல்.ஏ-க்களையும் தோற்கடித்தே தீர வேண்டும் எனத் திட்டமிட்டார்.

ஆட்சியில் இருந்தபோதிலும் கட்சி பலமாக இல்லை என்பதை உணர்ந்தார் காமராஜர். பதவியிலிருந்து விலகி, கட்சியை பலப்படுத்தத் தயாரானார். அந்தத் திட்டத்துக்கு நேரு வைத்த பெயர், `கே.பிளான்’ (K Plan). அதன்படி பக்தவத்சலம் தமிழக முதல்வரானார். காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானார். தமிழகத்திலும் காமராஜர் உட்பட முன்னணி காங்கிரஸ் தலைவர்கள் களமிறங்கி பம்பரமாகச் சுற்றிச்சுழன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அண்ணா உட்பட காமராஜர் குறிவைத்த திமுக எம்.எல்-ஏக்கள் 15 பேர் போட்டியிட்ட தொகுதிகளில் வலுவான பிரமுகர்களை இறக்கினார். இதனால், சென்ற தேர்தலில் திமுகவில் வெற்றிபெற்ற 15 பேரில் அண்ணா உட்பட 14 பேர் காமராஜர் வைத்த குறியில் சிக்கி தோற்றிருந்தனர். தப்பியது கருணாநிதி மட்டுமே. அண்ணா, தனது சொந்தத் தொகுதியான காஞ்சிபுரத்தில் நடேச முதலியாரிடம் தோற்றிருந்தார்.

அண்ணா- கருணாநிதி
அண்ணா- கருணாநிதி

அதேசமயம் திமுக., இந்தத் தேர்தலில் 50 தொகுதிகளில் வென்று அசத்தியிருந்தது. ஆனால், கட்சியால் இந்த வெற்றியைக் கொண்டாட முடியாதபடி அண்ணா உள்ளிட்டவர்களின் தோல்வி, கட்சியினரை வருத்தத்தில் ஆழ்த்தியது. ஆனால், அப்போதும் அண்ணா அந்த தோல்வியைச் சாதாரணமாகவே எடுத்துக்கொண்டார்.

தம்பிமார்கள், இது குறித்துக் கேட்டபோது அவர், ``புனித ஜெருசலத்துக்காக ஐரோப்பிய நாடுகள் போரிட்டன. ஒப்பந்தம் ஏற்பட்டது. ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது. ஐரோப்பிய படைக்குத் தலைமை வகித்த ரிச்சர்டு மன்னன் உள்ளே வரக் கூடாது மற்றவர்கள் வரலாம் என்பதே அந்த நிபந்தனை. இதைக் கேட்ட அந்த மன்னன், நான் உள்ளே போகாவிட்டால் என்ன? என் படைகள் உள்ளே போகிறது” என்றான். அதுபோல் சட்டசபையில் என்னை நுழையவிடவில்லை. அதனால் என்ன? என் தம்பிமார்கள் 50 பேர் சட்டசபை செல்கின்றனர். அவர்கள் உருவில் நான் செல்கிறேன்" என்றார்.

அண்ணாவின் அந்த வார்த்தையைக் கேட்ட கட்சியினர் அசந்து போயினர். ஆனாலும், தம்பிமார்கள் அவரை விடவில்லை. சட்டமன்றத்துக்குச் செல்ல முடியாத அண்ணாவை, சட்டசபைத் தேர்தலில் வென்ற திமுக எம்.எல்.ஏ-க்கள் மூலம் மாநிலங்களவை உறுப்பினராக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்.

பகுதி 6க்கு செல்ல....