Published:Updated:

எலெக்‌ஷன் ஜங்ஷன்

ஸ்ரீபிரியா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரீபிரியா

- குடவோலைக் குமரன்

ஸ்ரீப்ரியாவின் டப்பிங் வாய்ஸ்!

மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ம.நீ.ம வேட்பாளர் நடிகை ஸ்ரீப்ரியா, தொகுதி பிரச்னைகளைப் பற்றி பெரிதாகப் பேசுவதில்லை. பிரசார ஜீப்பில் அவருடன் கட்சியின் கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் ரங்கராஜன் ஏறிக்கொள்கிறார். மைக் பிடிக்கும் ஸ்ரீப்ரியா, “நான் மயிலாப்பூர் மகள்... இதோ, தொகுதியின் பிரச்னைகளைப் பற்றி ரங்கராஜன் உங்களிடம் பேசுவார்” என்று மைக்கை அவரிடம் நீட்டிவிடுகிறார். ரங்கராஜன் பேசி முடித்தவுடன் வாகனம் அடுத்த பாயின்ட்டுக்கு நகர்கிறது. அங்கேயும் இதே கதைதான். “சினிமா ஷூட்டிங் மாதிரி, தொகுதியின் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்குக்கூட டப்பிங்குக்கு ஆள்வெச்சிருக்கார். இவரா சட்டமன்றத்தில் நம் பிரச்னைகளைப் பேசப்போகிறார்?” என்று சலித்துக்கொள்கிறார்கள் தொகுதி மக்கள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

“சி அப்படீன்னா என்னா?”

கோவை மாவட்டத்தில், மாற்றுக்கட்சியிலிருந்து தி.மு.க-வுக்கு வந்து சீட்டும் வாங்கிவிட்டார் அந்த நபர். கட்சித் தலைமையிடம் ‘பத்து ‘சி’ செலவு செய்வேன்’ என்று சொன்னவர், இப்போது ‘சி அப்படீன்னா என்னா?’ என்று கேட்கிறாராம். அவருடன் பிரசாரத்துக்குச் செல்பவர்களிடம் மதிய நேரமாகிவிட்டால், ‘வெயில்ல அலையாதீங்கப்பா... வீட்டுக்குப் போய் சாப்பிட்டுட்டு சாயங்காலமா வாங்க” என்று அனுப்பிவிடுகிறாராம். ஒட்டுமொத்த அலையில் ஜெயித்துவிடலாம் என்று பண விஷயத்தில் மனிதர் கையைக்கூட உதறாமல் பிடிவாதம் பிடிப்பதால் கடுப்பிலிருக்கிறார்கள் உடன்பிறப்புகள்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

“நகையைத் தருவாரா ஹரி?”

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தொகுதியில் போட்டியிடும் பனங்காட்டுப்படை கட்சி வேட்பாளர் ஹரி நாடாரின் நகை அலங்காரத்தைப் பார்ப்பதற்காகவே பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. பிரசாரத்தின்போது ஒரு திருமணவிழாவுக்குச் சென்று மணமக்களை வாழ்த்தியதுடன், தனது சின்னமான தலைக்கவசத்தை மணமகனுக்குப் பரிசாக வழங்கினார். இதை கவனித்த அங்கிருந்த மணமகன் உறவினர்கள், “அண்ணாச்சி கழுத்துல போட்டிருக்கிற ஒரு நகையைக் கழட்டி மாட்டியிருந்தாக்கூட லைஃப்ல பையன் செட்டிலாகி யிருப்பானே!” என்று கமென்ட் அடிக்க, காதில் கேட்காததுபோலவே நகர்ந்தார் ஹரி!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

வாஷிங் மெஷினுக்கு ஸ்விட்ச் போர்டு!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, “ஒரு வீட்டுல நாலு ஓட்டு இருந்துச்சுன்னா அதை ரெண்டு வேட்பாளருக்குப் பிரிச்சுப் போடாதீங்க. அது யாருக்கும் பயன்படாது. குடும்பமே ஒத்துமையா நின்னு சொன்ன வாக்குறுதிகளை நிறைவேத்துற கட்சிக்கு ஓட்டுப் போடுங்க. நாங்க சொன்னபடி வாஷிங் மெஷின் கொடுப்போம். தாய்மார்கள் இனிமேல் கையால துணி துவைக்க வேண்டாம். இப்பவே எலெக்ட்ரீஷியனைக் கூப்பிட்டு, வீட்டுல வாஷிங் மெஷினுக்கு ஸ்விட்ச் போர்டுவெக்கிற வேலையைப் பாருங்க!” என்று பேச... வாய்த்துடுக்கான சில பெண்களோ, “அண்ணே, அதையும் நீங்களே செஞ்சுடுங்க...” என்று கூற, பதில் சொல்ல முடியாமல் நமட்டுச் சிரிப்புடன் நகர்கிறார் கடம்பூர் ராஜு!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

மிரட்டுகிறாரா வேட்பாளரின் மனைவி?

வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர்களின் குடும்பத்தினர் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். ஆனால், தென்காசி தொகுதியின் அ.தி.மு.க வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனின் மனைவி ஜெகதா, ஓட்டுக்காகப் பள்ளி ஆசிரியர்களை மிரட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான இவர், கல்வித்துறை உயரதிகாரிகள் மூலம், “தபால் ஓட்டு தப்பாம வந்துடணும்... இல்லைன்னா டிரான்ஸ்ஃபர் போட்டுருவேன்” என்று மிரட்டுவதாகப் புலம்புகிறார்கள் ஆசிரியர்கள். இது தொடர்பாக தி.மு.க-வினர் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்திருக்கிறார்கள்.

எலெக்‌ஷன் ஜங்ஷன்

“பார் சீன்ல நடிக்கிறதை நிறுத்துவாரா?’’

நெல்லை, தச்சநல்லூரில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலினிடம், பெண்ணொருவர், “தம்பி... தயவுசெஞ்சு டாஸ்மாக் கடைகளை மூடுறதுக்கு ஏற்பாடு பண்ணுங்க” என்று வேண்டுகோள் வைத்தார். உடனே உதயநிதி, “போன தடவை எங்க தாத்தா டாஸ்மாக் கடைகளை மூடுறதா வாக்குறுதி கொடுத்தார். அப்ப நீங்க எங்களுக்கு ஓட்டுப் போட்டீங்களா? போவட்டும்... இந்த தடவை நிச்சயம் செய்வோம்” என்றார். கூட்டத்திலிருந்த ஒருவர், “தம்பியை முதல்ல டாஸ்மாக் கடை பார் சீன்ல நடிக்குறதை நிறுத்தச் சொல்லுங்க... அப்புறம் மதுக்கடைகளை மூடுறதைப் பத்தி யோசிக்கலாம்” என்று கமென்ட் அடித்தார்!

எலெக்‌ஷன் ஜங்ஷன்

“பதவியும் வேணாம்... ஒண்ணும் வேணாம்!”

அ.ம.மு.க-வுக்குச் சென்று மீண்டும் அ.தி.மு.க-வுக்கே திரும்பிய அறந்தாங்கி எம்.எல்.ஏ ரத்தினசபாபதிக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால், முறுக்கிக்கொண்டு திரிந்தவருக்கு, தெற்கு மாவட்ட அவைத் தலைவர் பதவியைக் கொடுத்து சமாதானம் செய்தது கட்சித் தலைமை. அப்படியும் சமாதானம் ஆகாதவர், “எனக்குப் பதவியும் வேணாம்... ஒண்ணும் வேணாம். அந்தப் பதவியிலிருந்து விலகுறேன். அ.ம.மு.க - அ.தி.மு.க இணையாம ஒருத்தனும் ஜெயிக்கவே முடியாது” என்று வெறுப்பாகச் சொல்லிவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார்!