Published:Updated:

அப்படியே ஷாக் ஆகிட்டோம்!

தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல்

ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் கணக்கு வேற லெவல்... ‘234 தொகுதி வேட்பாளர்களுக்கு என்ன செய்வது...’ என்று யோசித்து யோசித்து விரக்தியில் வெறித்தனமாய்...

அப்படியே ஷாக் ஆகிட்டோம்!

ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் கணக்கு வேற லெவல்... ‘234 தொகுதி வேட்பாளர்களுக்கு என்ன செய்வது...’ என்று யோசித்து யோசித்து விரக்தியில் வெறித்தனமாய்...

Published:Updated:
தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
தேர்தல்

மே 2 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாள். யார் தோற்கிறார்களோ அவர்களுக்கு அதிர்ச்சி. ஆனால் தேர்தல் காலத்திலேயே நமக்குத்தான் எத்தனை எத்தனை அதிர்ச்சிகள்! அப்படியே ஒரு டிசால்வ் செய்து ப்ளாஷ்பேக் போவோமா?

‘ஓட்டுன்னு போட்டா ரஜினிக்குத்தான்’ என்று ட்விட்டரில் விதவிதமாக டிரெண்ட் அடித்துக்கொண்டிருந்தார்கள் கல்தோன்றி ‘காலா’ தோன்றாக்காலத்தே முன்தோன்றிய மூத்தகுடிகள். ரஜினியும் அவ்வப்போது அவர்களை உற்சாகப்படுத்துவதுபோல் ‘இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை’ என்று ‘கமான் கமான்’ சொல்லிக்கொண்டிருந்தார். ‘வெற்றிவேல் வீரவேல்’ என்று பா.ஜ.க-வும் கம்பு சுற்றிக் கொண்டிருக்க, ஒரு பொன்னான நாளில் ‘இவர் பெரியப்பு அவர் சித்தப்பு’ என்று ரெண்டு பேரைக் கைகாட்டினார் அரசியல் அண்ணாத்த. ஒரு பெரியப்பு தமிழ்நாடே தெரிந்த தமிழருவி மணியன். இன்னொருவர் ஆருக்குமே தெரியாத அர்ஜுனமூர்த்தி. ‘இருக்கு... சம்பவம் இருக்கு’ என்று எல்லோரும் காத்துக்கிடந்த நேரத்தில் ‘ஆண்டவன் சொல்றான், அல்வா தர்றான். அரசியல் கட்சி இல்லை. நெக்ஸ்ட் பஞ்சாயத்தில் மீட் பண்ணுவோம்’ என்று துண்டை உதறி முதல் அதிர்ச்சியை ஆரம்பித்துவைத்தார் ரஜினி.

அப்படியே ஷாக் ஆகிட்டோம்!

வெறுத்துப்போன தமிழருவி மணியன் ‘இனிமே அரசியலே இல்லை. திரும்பி வர மாட்டேன்’ என்று இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் கொஞ்சநாளிலேயே லட்சக்கணக்கான(?) ஆதரவாளர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மீண்டும் அரசியலுக்கு வந்தார். ஆனால் ‘காந்திய மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தார். அந்த அதிர்ச்சியைச் செரித்து முடிப்பதற்குள் அர்ஜுனமூர்த்தி ஒரு கட்சி ஆரம்பித்து ரோபோ சின்னம் வாங்கி ‘பூம்பூம் ரோபோடா’ என்று பல்லேலக்கா பாட்டுப் பாடினார். ‘இருக்கு... ஒரு காமெடி சம்பவம் இருக்கு’ என்று எல்லோரும் எதிர்பார்த்த நேரத்தில் ‘இந்த எலெக்‌ஷன்ல போட்டியில்லை’ என்று அர்ஜுனமூர்த்தியும் அதிர்ச்சி கொடுத்தார். அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் தமிழகத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அதிரடியாக அறிவிக்க, கோடிக்கணக்கான (எத்தனை சைபர்!) வாக்காளர் களைக் கொண்ட இந்த மூன்று கட்சிகளும் போட்டியிடாவிட்டால் தேர்தல் என்னாகுமோ என்று அதிர்ந்துபோய் உட்கார்ந்தது ஒட்டு மொத்தத் தமிழகமும்.

ஆழ்வார்பேட்டை ஆண்டவரின் கணக்கு வேற லெவல்... ‘234 தொகுதி வேட்பாளர்களுக்கு என்ன செய்வது...’ என்று யோசித்து யோசித்து விரக்தியில் வெறித்தனமாய் கவிதை எழுதத் தயார்நிலையில் இருந்த கமலுக்கு இன்ப அதிர்ச்சி. ஐ.ஜே.கே ரவி பச்சமுத்து, ச.ம.க சரத்குமார் என்று இருவரும் வாண்டடாக வண்டி ஏறினார்கள். விடுவாரா விஸ்வரூபன்? வந்து ஐக்கியமான வேந்தருக்கு 40, நாடிவந்த நாட்டாமைக்கு 40 என்று ஒரே வீச்சில் 80 தொகுதிகளைக் காலி செய்து தனக்குத்தானே ‘இன்ப அதிர்ச்சி’ கொடுத்துக்கொண்டார். ‘ஏதோ கூட்டணி பேசவந்தோம்னா ஆளுக்கு ஆறு கொடுப்பார்னு பார்த்தா பொசுக்குன்னு 40 சீட்டு கொடுத்தா நாங்க எங்கே போறது’ என்று ரூம் போட்டு அழுது அழுது அதிர்ச்சியானார்கள் ச.ம.க சரத்குமாரும் ஐ.ஜே.கே.ரவி பச்சமுத்துவும். ‘முக்கித்தக்கி பாத்துட்டோம்... முடியல...’ என்று சொல்லி 3 சீட்டைத் திருப்பிக்கொடுத்து ஆண்டவருக்கே அதிர்ச்சி கொடுத்தார் நாட்டாமை. அதுமட்டுமல்ல, ராதிகாவும் சரத்குமாரும் தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று சுய எலிமினேஷன் செய்து ஆண்டவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார்கள்.

இந்தக் கூட்டணி அதிர்ச்சி இப்படி என்றால், தே.மு.தி.க-வின் திடீர் அதிர்ச்சி தரமான சம்பவம். கடைசிவரை அ.தி.மு.க ‘ஒத்தையா ரெட்டையா’ ஆட்டம் ஆட, வெறுத்துப்போன பிரேமலதா வழக்கம்போல டூயல்சிம் போனில் மூன்று கால்கள் பேசினார். ‘வந்தனம் வந்தனம் வந்த சனம் குந்தனம்’ என்று மக்கள் நீதி மய்யம் பொன்ராஜ் அழைப்பு விடுக்க, ‘அது கறுப்பு எம்.ஜி.ஆர், கட்சி, இதுவோ குழப்ப எம்.ஜி.ஆர் கட்சி’ என்று கமலும் ஒத்திகை பார்த்துக் குத்தகைக்காகக் காத்திருந்தார். ஆனால் லெப்ட்டில் இண்டிகேட்டர் போட்டு ரைட்டில் கை காட்டி யு-டர்ன் போட்டு கோயம்பேடு தே.மு.தி.க டிராவல் வண்டி போய் நின்றது அ.ம.மு.க பஸ் ஸ்டாப்.

2019 தேர்தலில் திண்டுக்கல்லில் புரோட்டா சுட்ட மன்சூர் அலிகான், இந்தத் தேர்தலில் பணியாரம் சுடுவதற்குத் தோதான தொகுதியை எதிர்பார்த்துக் காத்திருக்க... அண்ணனோ அவருக்கு ‘அல்வா’ கொடுத்து ‘புஹாஹாஹா’வாக்கினார். ஆத்திரத்தில், புத்தம் ‘புதிய புலி’க்கட்சியை ஆரம்பித்துத் தேர்தலில் நிற்கப்போவதாக நடிகர் தொடை தட்டியதில், அறிவாலயமே `ஐயய்யோ பயந்து வருதுப்பா’ என்றது. நல்லவேளையாக அடுத்த சில நாள்களில், ‘கட்சிப் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய முடியாததால் இந்தத் தேர்தலில் கட்சி போட்டியிடவில்லை’ என்று அறிவித்து மக்கள் வயிற்றில் பால் வார்த்தார். ஆனாலும் ‘ஓங்கிய அரிவாளை வெட்டாம உறைக்குள்ள வைக்கக்கூடாது’ என்று தொண்டாமுத்தூரில் மன்சூர் மட்டுமே சுயேச்சையாகக் களமிறங்கினார். ஆனால் பிரசாரத்துக்குப் போகுமிடங்களி லெல்லாம் மக்கள், ‘என்னா பாய், எவ்வளவு பணம் வாங்குனீங்க...’ என்று வில்லன் நடிகரை காமெடியனாக்க... அதிர்ந்துபோன அவர், குப்பைத் தொட்டி ஓரம் படுத்திருந்த நாயிடம் மட்டும் ஓட்டு கேட்டுவிட்டுத் திரும்பினார்.

அப்படியே ஷாக் ஆகிட்டோம்!

வில்லன் நடிகரையே காமெடியனாக்கிய அரசியல், காமெடி நடிகரை விட்டுவைக்குமா... ஆட்சி முடிகிற நேரத்தில், ‘ஆதரவு தரமாட்டேன்... கூவத்தூர் ரகசியம் சொல்லப்போறேன்’ என்று ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி தருவதாக நினைத்துக்கொண்டு நடிகர் கருணாஸ் கூவ ஆரம்பிக்க... அவரை நம்பி வாக்களித்த மக்களே ‘சினிமாவை விடவும் அரசியல்ல நல்லா காமெடி பண்றாருப்பா...’ என்று டைம்பாஸாக்க... கடுப்பானவர், அறிவாலயத்துக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால், அங்கேயும் ‘இதயத்தில் மட்டுமே இடம் இருந்ததால்’, கொடுத்த ஆதரவை வெடுக்கெனப் பிடுங்கிய லொடுக்கு, தனியாகத் தேர்தலைச் சந்திக்க தன் கட்சியினரோடு பேச்சுவார்த்தை நடத்தினார். ‘முடிவு என்னாகுமோ...’ என்று திக்திக் மனநிலையோடு காத்திருந்தனர் தமிழக மக்கள். இறுதியில், ‘ஆணியே புடுங்கவேண்டாம்’ என்ற அறிவிப்பு வெளிவரவே நிம்மதியடைந்தனர் வாக்காளர்கள்.

கூட்டணி மாறிமட்டுமா அதிர்ச்சி கொடுப்போம், ஆள்களே மாறிமாறி அதிர்ச்சி கொடுப்போம் என்று சீட் கிடைக்காத தி.மு.க எம்.எல்.ஏ சரவணன் காவிக்கட்சிக்கு மாற, அ.தி.மு.க சிட்டிங் எம்.எல்.ஏ ராஜவர்மன் அ.ம.மு.க-வுக்குத் தாவி அதிர்ச்சி கொடுத்தார். இருவருக்குமே ஸ்விக்கியை விட செம ஸ்பீடில் சீட்டு டெலிவரி செய்யப்பட்டது அடடே அதிர்ச்சி. ‘என் கையில இருக்கு எய்ம்ஸ் ஹாஸ்பிடல்’ என்று உதயநிதி கலகல அதிர்ச்சி கொடுக்க ‘செங்கல்லைத் திருடிட்டார்’ என்று கம்ப்ளெயின்ட் கொடுத்து காவிக்கட்சியும் லகலக அதிர்ச்சி கொடுத்தது. இடையில் மோடி வேறு ‘திண்டுக்கல் லியோனி’யைத் திட்டி லியோனியுடன் சேர்த்து ஒட்டுமொத்த ஊருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். மதுரையில் மேடையேறிய மோடி ‘‘எம்.ஜி.ஆர் நடித்த ‘மதுரைவீரன்’ திரைக் காவியம்’’ என்று ஸ்பீச் கொடுக்க ‘‘அடுத்து திருச்சியில் பேசினால் விஷாலின் ‘மலைக்கோட்டை’ சிறந்த படம்னு சொல்வாரோ’’ என்று தமிழகமே அதிர்ச்சியுடன் பேயறைந்து கிடந்தது.

பல பல அதிர்ச்சிகளுடன் இந்தத் தேர்தல் முடிந்திருக்கிறது. ஆனால் யாருக்குத் தமிழக வாக்காளப் பெருங்குடி மக்கள் ‘ஷாக் ட்ரீட்மென்ட்’ கொடுத்தி ருக்கிறார்கள் என்பது மே 2 பொட்டி திறந்தால் தெரியும். டொண்ட டொண்ட டொய்ங்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism