Election bannerElection banner
Published:Updated:

கொரோனா: 16 லட்சம் வாக்காளர்கள்... 512 துணை வாக்குச்சாவடிகள்... விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பாடு!

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்துச் சட்டமன்றத் தொகுதிகளிலும் 1,000 வாக்காளர்களுக்கும் அதிகமான வாக்காளர்களைக்கொண்ட வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து, 512 துணை வாக்குச்சாவடிகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் அவர்களது கட்சி பிரசாரத்தையும் தொடங்கிவிட்டனர். இன்னும் சில மாதங்களில் தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல் ஆணையமும் அதற்குண்டான பணிகளை முடுக்கிவிட்டிருக்கிறது. தற்போது கொரோனா சூழல் நிலவிவருவதால், தேர்தல் நடத்தும் வழிமுறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து, துணை வாக்குச் சாவடிகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

விழுப்புரம் மாவட்டம், அண்மையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் செஞ்சி, மைலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ௭ன ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தற்போதுள்ள தரவுகளின்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 8,33,206 ஆண் வாக்காளர்களும், 8,51,082 பெண் வாக்காளர்களும், 216 மூன்றாம் பாலின வாக்காளர்களும் என மொத்தமாக 16,84,504 - வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் கொரோனா தடுப்பு நடவடிக்கையைப் பின்பற்றி 1,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களைக்கொண்ட வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து துணை வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கான கூட்டம் நேற்று முன்தினம் மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, ``கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், ஆயிரம் வாக்காளர்களுக்கும் அதிகமான வாக்காளர்களை உள்ளடக்கிய வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து துணை வாக்குச்சாவடிகளாக அமைக்கும்படியும், பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்கும்படியும், வாக்குச்சாவடிகளில் புதிதாகப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டியிருந்தால் அவற்றை செய்யும்படியும் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.அதன்படி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளிலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய வாக்குச்சாவடிகளை இரண்டாகப் பிரித்து, துணை வாக்குச்சாவடிகளை அமைக்கும்படி வட்டாட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தோம்.

அதன் அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களை உள்ளடக்கிய வாக்குச்சாவடிகளை கண்டறிந்த வட்டாட்சியர்கள், கள ஆய்வு மேற்கொண்டு அவர்களுக்குத் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட, அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்தனர்.

பின்னர், ஆயிரம் வாக்காளர்களுக்கு மேலுள்ள வாக்குச்சாவடிகளைப் பிரித்து 512 துணை வாக்குச்சாவடிகளாக அமைக்கும்படியும், எட்டு வாக்குச்சாவடிகளைப் பெயர் மாற்றம் செய்யும்படியும், 66 பழுதடைந்த வாக்குச்சாவடிகளை மாற்றி அமைக்கும்படியும் தகவல் அளித்துள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே வாக்குச்சாவடிகளின் இறுதிப்பட்டியல் முடிவுசெய்யப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு