Published:Updated:

எங்கேயிருந்து வந்தது இவ்வளவு பணம்? - தேர்தல் நிதிப்பத்திர சர்ச்சைகள்!

தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் தி.மு.க 45.5 கோடி ரூபாய் பெற்றுள்ளது. மற்ற பிரிவுகளில் 100 ரூபாய் கொடுத்தவரின் பெயரைகூட வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர்.

பிரீமியம் ஸ்டோரி

தேர்தல் சமயத்தில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து கட்சிகள் நிதி பெறுகின்றன. அவை குறித்த முறையான தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும் வேண்டும். அந்தவகையில், 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க - அ.தி.மு.க இரண்டு கட்சிகளும் தேர்தல் அறக்கட்டளை மற்றும் நிதிப்பத்திரம் மூலமாகப் பல கோடிகளை வாங்கிக் குவித்திருக்கின்றன. அந்தத் தகவல் வெளியாகி, அதில் சில சர்ச்சைகளும் வெடித்துள்ளன...

அமெரிக்கா போன்ற நாடுகளில் புழக்கத்திலிருந்த தேர்தல் அறக்கட்டளை (Electrol trust), தேர்தல் நிதிப்பத்திரம் (Electrol Bond) கலாசாரம் இந்தியாவிலும் புகுந்துவிட்டது. அதன்படி நம் நாட்டில் தேர்தல் அறக்கட்டளை 2013-ம் ஆண்டும், தேர்தல் நிதிப்பத்திரம் 2017-ம் ஆண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. டாடா, ரிலையன்ஸ் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களின் தேர்தல் அறக்கட்டளைகள் இந்திய நிறுவனச் சட்டத்தின் கீழ் இயங்கிவருகின்றன. யார் வேண்டுமானாலும் அந்த அறக்கட்டளைக்கு நிதி வழங்கலாம். அந்த அறக்கட்டளைகள், அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்கலாம். இந்த முறையின்படி கடந்த காலங்களில் பி.ஜே.பி-க்கு அதிக நிதி சென்றது சர்ச்சையானது.

எங்கேயிருந்து வந்தது இவ்வளவு பணம்? - தேர்தல் நிதிப்பத்திர சர்ச்சைகள்!

தேர்தல் நிதிப்பத்திர மசோதாவை மத்திய பி.ஜே.பி அரசு நிறைவேற்றும்போதே சர்ச்சைகள் வெடித்தன. ‘‘20,000 ரூபாய்க்கு மேல் பெறும் நிதிகளை வங்கிப் பரிவர்த்தனை மூலமே அரசியல் கட்சிகள் மேற்கொள்ள வேண்டும். அந்தப் பட்டியலை ஆணையத்தில் வெளிப்படையாகப் பதிவுசெய்ய வேண்டும்’’ என்பது தேர்தல் ஆணையத்தின் விதி. ஆனால், ‘‘யார் பணம் கொடுத்தார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை” என்கிறது தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம். இதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற பஞ்சாயத்து நீதிமன்றம் வரை சென்றுள்ளது.

இந்த நிலையில் தி.மு.க., அ.தி.மு.க ஆகியவை 2019-20 நிதியாண்டுக்கான வரவுகளைத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்துள்ளன. இதில் அ.தி.மு.க, Progressive Electrol Trust மூலம் ரூ.46.78 கோடி, ஐ.டி.சி நிறுவனம் மூலம் இரண்டு தவணைகளில் ரூ.5.39 கோடி என மொத்தம் 52.17 கோடி ரூபாய் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது. தி.மு.க-வில் கட்சி வளர்ச்சி நிதி, டெல்லியில் கட்டும் கட்சி அலுவலகத்துக்குப் பெற்ற நிதி, இளைஞரணிக்குக் கொடுத்த நிதி, தேர்தல் நிதிப்பத்திரம் மூலமாகப் பெற்ற நிதி ஆகியவற்றை சமர்ப்பித்துள்ளனர். தேர்தல் நிதிப்பத்திரம் மூலம் தி.மு.க 45.5 கோடி ரூபாய் பெற்றுள்ளது. மற்ற பிரிவுகளில் 100 ரூபாய் கொடுத்தவரின் பெயரைகூட வெளிப்படையாகச் சொல்லியுள்ளனர். ஆனால், நிதிப்பத்திரத்தில் யார் கொடுத்தனர் என்று குறிப்பிடவில்லை. இந்த வெளிப்படையற்ற தன்மைமீது கேள்வி எழுப்பியுள்ளார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன்.

லோகநாதன்
லோகநாதன்

‘‘மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 29 (C) படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வருவாயைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்ய வேண்டும். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை எங்கிருந்து பணம் வந்தது என்பதைச் சொல்லிவிட்டனர். Progressive Electrol Trust, ஐ.டி.சி நிறுவனம் ஆகியவை டாடா குழுமத்தால் நிர்வகிக்கப்படுவதால், அ.தி.மு.க-வுக்கு டாடா குழுமத்திடமிருந்து 52 கோடி ரூபாய் வந்துள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஆனால், மற்ற பிரிவுகளில் எல்லா நிதிகளையும் வெளிப்படையாகச் சொல்லியுள்ள தி.மு.க., தேர்தல் நிதிப்பத்திரம் தொடர்பான விவரங்களை மட்டும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.

தேர்தல் நிதிப்பத்திரங்கள் எஸ்.பி.ஐ வங்கிகளில் மட்டும்தான் கிடைக்கும். இதில் பணம் கொடுப்பவர்களுக்கு வரிவிலக்கு உண்டு. அந்த விவரங்களை வெளியில் சொல்லத் தேவையில்லை என மத்திய அரசு சொல்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ‘இம்முறையில் நிதி வழங்குபவர்களின் ரகசியம் காக்கப்படுவதால் வெளிநாட்டு நிதியோ, தீவிரவாத நிதியோ கட்சிகளுக்குச் செல்ல வாய்ப்புள்ளது. வெளிப்படைத்தன்மை இல்லாததால், இம்முறையைத் தடைசெய்ய வேண்டும்’ என்று வழக்கு தொடர்ந்தவர் கூறியுள்ளார். அந்த வழக்கில் தேர்தல் ஆணையம், ‘அரசியல் கட்சிகளுக்கு 20,000 ரூபாய்க்கு மேல் எந்த வகையில் நிதி வந்தாலும் அதைச் சொல்ல வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளோம்’ என நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தெளிவாகக் கூறியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளுக்குத் தேர்தல் ஆணையம் பல்வேறு சலுகைகளை அளிக்கிறது. அதன் மூலம் பயன்பெறும் இவர்கள், தேர்தல் ஆணைய விதியை மட்டும் கடைப்பிடிக்காமல் இருப்பது மிகவும் தவறான செயல்’’ என்றார் ஆதங்கத்துடன்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ‘‘தேர்தல் நிதிப்பத்திரத்தின் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப்பது சரியல்ல என்பதுதான் என் கருத்து. நிதியளிக்கும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குத் தேர்தலுக்குப் பிறகு நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். அதனால், தேசியத் தேர்தல் நிதி என்பதைத் தொடங்கி, தேர்தல் ஆணையத்தின் மூலம் அதை நிர்வகிக்க வேண்டும். அந்த நிதியம் மூலம் மட்டுமே அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க வேண்டும். தேர்தல் நிதிப்பத்திரம் என்பது நல்லதல்ல’’ என்றார் அழுத்தமாக.

எங்கேயிருந்து வந்தது இவ்வளவு பணம்? - தேர்தல் நிதிப்பத்திர சர்ச்சைகள்!

தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி-யிடம் கேட்டபோது, ‘‘இந்த விஷயம் பற்றிப் பொருளாளரிடம்தான் கேட்க வேண்டும்” என்றார். தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிடம் பேசினோம். நம்மிடம் விவரங்களைக் கேட்டுக்கொண்ட பாலு, ‘‘ஜூனியர் விகடனுக்கும் நமக்கும் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் கேள்வி கேட்டு பதில் சொன்னாலும் தவறு. சொல்லாவிடினும் தவறாகிவிடும். என்னை விட்டுவிடுங்கள். வழக்கு முடிந்தவுடன் நாம் சந்தோஷமாகச் சந்திக்கலாம்’’ என்றார்.

தேர்தல் ஆணையம் ஒன்று சொல்கிறது... தேர்தல் நிதிப்பத்திரத் திட்டம் ஒன்று சொல்கிறது... நீதிமன்றம் ஒன்று சொல்கிறது... மத்திய அரசு ஒன்று சொல்கிறது. இந்தக் குழப்பங்கள் தீரும் வரை, அரசியல் கட்சிகள் அவர்கள் பாட்டுக்கு வாங்கிக் குவித்துக்கொண்டே இருப்பார்கள். இதில் யாருக்கு யாரும் சளைத்தவர்கள் அல்ல. அதுவரை இந்தப் பிரச்னை தீரப்போவதும் இல்லை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு