Published:Updated:

மகாராஷ்டிரா: பாஜக மாஜி அமைச்சர் ஏக்நாத் கட்சேயிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை!

ஏக்நாத் கட்சே
ஏக்நாத் கட்சே

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பாஜக முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சேயின் மருமகனை நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறை கைதுசெய்துள்ள நிலையில், ஏக்நாத் கட்சேயிடமும் விசாரணை நடத்தினர்.

மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசில் அமைச்சராக இருந்த ஏந்காத் கட்சே, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி புனேயில் எம்.ஐ.டி.சி நிலத்தை மார்க்கெட் விலையைவிட குறைந்த விலைக்கு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து 2016-ம் ஆண்டு அமைச்சராகப் பதவியேற்ற சில மாதங்களில் ஏக்நாத் கட்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க மாநில அரசு கமிட்டி ஒன்றை அமைத்திருந்தது. அந்த கமிட்டி தனது விசாரணை அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. அதில் ஏகாத் கட்சே குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். புனேயைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஹேமந்த் கவாடே இது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவந்தனர்.

ஏக்நாத் கட்சே
ஏக்நாத் கட்சே

இதில் கட்சே மருமகன் கிரிஷ் சௌத்ரி, ஏக்நாத் கட்சே மனைவி மந்தாகினி ஆகியோரும் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டனர். ஏக்நாத் கட்சே 40 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வெறும் 3.75 கோடிக்கு விலையைக் குறைத்து வாங்கியதாக ஹேமந்த் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக ஏக்நாத் கட்சேயிடம் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஏக்நாத் கட்சே மும்பை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் தான் பாஜக-விலிருந்து விலகி தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததால் அரசியல் நோக்கத்தோடு தன்னிடம் விசாரிக்கப்படுவதாகவும், தன்னைக் கைதுசெய்யத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இதையடுத்து அவரைக் கைதுசெய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், திடீர் திருப்பமாக அமலாக்கத்துறையினர் ஏக்நாத் கட்சேயின் மருமகனை அழைத்துச் சென்று பல மணி நேரம் விசாரணை நடத்தினர். புனேயில் எம்.ஐ.டி.சி நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கியது தொடர்பாக இந்த விசாரணையை நடத்தினர். கிரிஷ் சௌத்ரியை விசாரணைக்குப் பிறகு நள்ளிரவில் கைதுசெய்தனர்.

பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏக்நாத்கட்சேயிடம் விசாரணை நடத்தினர். அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வந்த கட்சே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன். இது என்னைக் களங்கப்படுத்த நடக்கும் சதி. என்ன நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த மகாராஷ்டிராவும் பார்த்துக்கொண்டிருக்கிறது. அரசியல் நோக்கத்தோடு இந்த விசாரணை மேற்கொள்ளப்படுவது அனைவருக்கும் தெரியும். இதற்கு முன் ஐந்து முறை விசாரணை நடத்தப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் விசாரிக்கின்றனர். என் மீதான குற்றச்சாட்டில் எந்தவித உண்மையும் இல்லை என்று லஞ்ச ஒழிப்புத்துறையே கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துவிட்டது" என்று தெரிவித்தார். இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``ஜனவரி மாதம் விசாரணை நடத்தப்பட்டது. மேற்கொண்டு வாக்குமூலம் வாங்க வேண்டியிருப்பதால் ஏக்நாத் கட்சே மீண்டும் அழைக்கப்பட்டார்" என்று தெரிவித்தனர். காலை 11 மணிக்கு விசாரணைக்கு வந்த ஏக்நாத் கட்சேயிடம் ஒன்பது மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். ஏக்நாத் கட்சேயின் மருமருகன் விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, ஏக்நாத் கட்சே முன்னிலையில் அவரிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஏக்நாத் கட்சேவை சட்டமேலவை உறுப்பினராக்க மகாராஷ்டிரா அரசு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், அதற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் ஏழு மாதங்களாக இழுத்தடித்துவருகிறார். ஏற்கெனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் அஜித்பவார் மற்றும் அவரோடு தொடர்புடையவர்களிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திவருகிறனர். மகாராஷ்டிராவில் பாஜக-வை வளர்த்த முக்கியத் தலைவர்களில் ஏக்நாத் கட்சேயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு