Published:Updated:

அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு! - எடப்பாடிக்கு ரூ.1.7 கோடி, பன்னீருக்கு ரூ.84.5 லட்சம்

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்
பிரீமியம் ஸ்டோரி
News
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம்

பொது வாழ்க்கைக்கு வருகிற எல்லோருமே தாங்கள் எளிமையானவர்கள் என்று காட்டிக்கொள்ளத்தான் விரும்புகிறார்கள்.

‘‘நான் விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன்; மிகவும் எளிமையானவன்’’ - கடந்த அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கடிக் கூறிய வார்த்தைகள் இவை. இப்போதுவரை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எளிமையான மனிதர் என்ற பிம்பத்தோடுதான் எடப்பாடியை முன்வைத்துவருகிறது அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, அவருக்குத் தமிழக அரசு சார்பில் கிரீன்வேஸ் சாலையில் வீடு ஒதுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஆன பிறகும், அதே வீட்டில்தான் வசித்துவருகிறார். அவர் முதல்வராகப் பதவியேற்றது முதல் ஆட்சி முடியும்வரை, அந்த வீட்டைப் பராமரிக்க கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் ரூ.1.7 கோடி செலவாகியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், துணை முதல்வர், அ.தி.மு.க அமைச்சர்கள் தங்கிய அனைத்து அரசு பங்களாக்களுக்கும் சேர்த்து கடந்த 10 ஆண்டுகளில் ரூ.28.47 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருப்பதாக ஆர்.டி.ஐ-யில் தெரியவந்திருக்கிறது!

அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு! - எடப்பாடிக்கு ரூ.1.7 கோடி, பன்னீருக்கு ரூ.84.5 லட்சம்

இந்தத் தகவலை நீண்ட போராட்டத்துக்குப் பிறகு பெற்றுள்ள கோவை வழக்கறிஞர் லோகநாதனிடம் பேசினோம்... ‘‘பொது வாழ்க்கைக்கு வருகிற எல்லோருமே தாங்கள் எளிமையானவர்கள் என்று காட்டிக்கொள்ளத்தான் விரும்புகிறார்கள். அதை நிரூபிக்க, சேற்றிலெல்லாம்கூட இறங்குவார்கள். ஆனால், உண்மையில் அவர்களின் வாழ்வியல் முறை அதற்கு எதிராகத்தான் இருக்கிறது. அவர்களின் உண்மை முகத்தை அறிய வேண்டும் என்றுதான் அமைச்சர்கள், நீதிபதிகள் தங்கியுள்ள அரசு பங்களா வீடுகளின் பராமரிப்புத் தொகை விவரங்களை பொதுப்பணித் துறையிடம் வாங்கினேன்.

எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு மட்டுமே கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.1.70 கோடி பராமரிப்புக்குச் செலவானதாகக் கூறுகிறார்கள். இந்தத் தொகைக்கு நீச்சல் குளத்துடன் புதிதாகப் பெரிய பங்களாவே கட்டிவிடலாம். துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு ரூ.84.5 லட்சம் பராமரிப்புச் செலவு செய்யப்பட்டுள்ளது. சி.விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரூ.55.37 லட்சம், சபாநாயகராக இருந்த தனபால் வீட்டுக்கு ரூ.43.37 லட்சம், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டுக்கு ரூ.38.61 லட்சம், எஸ்.பி.வேலுமணி வீட்டுக்கு ரூ.31.23 லட்சம், சி.வி.சண்முகம் வீட்டுக்கு ரூ.30.45, கே.பி.அன்பழகன் வீட்டுக்கு ரூ.27.88 லட்சம் பராமரிப்புச் செலவானதாகக் கூறியுள்ளார்கள்.

அரசு பங்களாக்களைப் பராமரிக்க கோடிகளில் செலவு! - எடப்பாடிக்கு ரூ.1.7 கோடி, பன்னீருக்கு ரூ.84.5 லட்சம்

முதலமைச்சரின் ‘பசுமை வீடுகள்’ திட்டத்தின்கீழ் சாமானிய மக்கள் வீடு கட்டிக்கொள்ள, அரசுத் தரப்பில் சுமார் ரூ.2 லட்சம்தான் தருகிறார்கள். ஆனால், அரசு பங்களாக்களுக்கோ பராமரிப்புச் செலவுகளே கோடிகளில் நடக்கிறது. இது அரசுப் பணம்... மக்களின் வரிப்பணம் என்பதால், இதைக் கட்டுப்படுத்த ஒரு நிர்வாகம் வேண்டும். இதே பட்டியலில், 10 ஆண்டுகளுக்குமாகச் சேர்த்தே சில அமைச்சர் வீடுகளின் பராமரிப்புச் செலவு குறைவாகத்தான் உள்ளது. உதாரணமாக, ஜி.பாஸ்கரன் - ரூ.10.16 லட்சம், மணிகண்டன் - 9.86 லட்சம், உடுமலை ராதாகிருஷ்ணன் - 8.5 லட்சம், பாலகிருஷ்ண ரெட்டி - ரூ.5.73 லட்சம். எனவே, பசையுள்ள துறைகளைக் கையில்வைத்திருந்த அமைச்சர்களின் வீடுகளுக்குத்தான் அதிகம் செலவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

அமைச்சர்களின் வீடுகளைவிட, நீதிபதிகளின் அரசு பங்களாக்களுக்கு இன்னும் அதிகம் செலவு செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு 47 அரசு பங்களாக்கள் உள்ளன. இவற்றில் ஒருசிலவற்றைத் தவிர, அனைத்து பங்களாக்களிலும் நீதிபதிகள் தங்கியிருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நீதிபதிகளின் பங்களாக்களைப் பராமரிக்க ஆன செலவு ரூ.30.88 கோடி. நீதித்துறைக்கான செலவினங்களை மாநில அரசுதான் செய்ய வேண்டும். அந்த வகையில், நீதிபதிகளை ‘மகிழ்ச்சியாக’ வைத்துக்கொள்ள இப்படி கண்மூடித்தனமாகச் செலவு செய்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படிப் பார்த்தால் இதை மறைமுக லஞ்சம் என்றுதான் குறிப்பிடவேண்டியிருக்கும்.

லோகநாதன்
லோகநாதன்

அரசாங்கத்தையே கண்காணிக்கவேண்டிய பொறுப்பு, நீதித்துறைக்கு இருக்கிறது. அரசுத் தரப்பில் அநாவசியமாகச் செலவுசெய்யும்போது, நீதித்துறை அதை ஏன் என்று கேட்கலாம். அவர்கள்தான், அரசு இயந்திரத்துக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக நீதித்துறையில் இருப்பவர்களே இதை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்? இந்தப் பராமரிப்புச் செலவில் தண்ணீர், மின்சாரக் கட்டணங்கள் அடங்காது. அவை தனி. இவை பெயின்ட்டிங், புனரமைப்பு போன்ற வீடுகளைப் பராமரிக்க ஆன செலவுகள் மட்டும்தான். இவை எல்லாமே மக்கள் வரிப்பணம். இனியாவது உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்’’ என்றார்.

வீடு என்பதைப் பெருங்கனவாகக்கொண்ட லட்சக்கணக்கான அன்றாடங்காய்ச்சிகளும் வீடற்றவர்களும் வாழ்ந்துவரும் ஒரு மாநிலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் பராமரிப்புக்கு மட்டுமே கோடிகளில் செலவு செய்து கொண் டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கிறது!