Published:Updated:

சசிகலா: `கண்ணாடிக்கூண்டு; அ.தி.மு.க உறுப்பினருக்குச் சொந்தமான கார்... கைதுசெய்ய அரசு தீவிரமா?

சசிகலா - எடப்பாடி பழனிசாமி
சசிகலா - எடப்பாடி பழனிசாமி

`அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் ஒருவரை உரிமையாளராகக்கொண்ட காரில் (அ.தி.மு.க கொடி கட்டிய) சசிகலா பயணிக்கப்போகிறார். அதற்காக மூன்று கார்கள் ரெடியாக இருக்கின்றன’ - சசிகலா ஆதரவாளர்கள்.

வருகிற பிப்ரவரி 8-ம் தேதி காலை 9 மணிக்கு சசிகலா, கர்நாடகா மாநிலம் பெங்களூரு புறநகர்ப் பகுதியிலிருந்து பிரத்யேக காரில் அ.தி.மு.க கொடி பறக்கும் கார் அல்லது வேனில் தமிழகம் வருகிறார். அ.ம.மு.க-வின் முக்கியப் பிரமுகரான பழனியப்பன் தலைமையில் எல்லையில் நுழையும்போது பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு நடக்கிறது. எதிர்முகாமான அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தலைமையில் அ.தி.மு.க பிரமுகர்கள் சசிகலாவின் சட்ட மீறல்களை உன்னிப்பாக கவனிக்கக் காத்திருக்கிறார்கள்.

சசிகலா
சசிகலா

ஆங்காங்கே வீடியோ சகிதம் திரளான அ.தி.மு.க-வினரை நிறுத்தியிருக்கிறார்கள். இருதரப்பினரும் இன்று காலையிலிருந்தே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாயின்டுகளுக்கு வந்து சேர்ந்துவிட்டனர். இதை கவனித்த சசிகலாவின் சகோதாரர் திவாகரன் தரப்பினர் பதறிப்போய், `எங்கள் தரப்பினர் மீது தாக்குதல் நடத்த திட்டம் ' என்கிறரீதியில் மீடியாக்களிடம் தகவல்களைக் கசியவிட்டனர். ஆனால், கே.பி.முனுசாமி தரப்பினர் இதை மறுத்தனர். `வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்புகிறார்கள் சசிகலா தரப்பினர்’ என்கிறார்கள் கே.பி.முனுசாமி தரப்பினர். இப்படி மாறி மாறி குற்றச்சாட்டுகளை அள்ளிவீசிக்கொண்டிருக்கிறார்கள். சசிகலா வருகை தொடர்பான பந்தோபஸ்து பணிகளை தமிழக சட்டம், ஒழுங்கு பிரிவின் சிறப்பு டி.ஜி.பி-யான ராஜேஷ் தாஸிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்திருக்கிறார்.

`பெங்களூரிலிருந்து சில மணி நேரங்களில் சென்னைக்கு காரில் வந்துவிடலாம். ஆனால், சசிகலா திட்டமிட்டு அரசியல் நாடகம் நடத்துவார். ஒசூரிலிருந்து சென்னைக்கு 13 மணி நேரம் பயணிக்கத் திட்டமிட்டிருக்கிறார். அவரது இமேஜை உயர்த்திக்கொள்வதுதான் நோக்கம்’ என்று உளவுத்துறை ரிப்போர்ட் சொல்வதாகத் தகவல் கசிந்திருக்கிறது.

சசிகலாவின் கார் பவனிக்கு எந்தெந்த வழிகளில் முட்டுக்கட்டை போடலாம் என்று முக்கிய அமைச்சர்கள், போலீஸ் உயரஅதிகாரிகள் கடந்த இரண்டு நாள்களாக சென்னையில் ஆலோசனை நடத்திவருகிறார்கள். சசிகலாவை ஏதாவது காரணம் சொல்லி, கைதுசெய்து அரசு வாகனத்தில் ஏற்றிச் சென்னைக்கு அழைத்து வந்து விடவேண்டும் என்றும், அதற்கான ரூட்மேப்பும் போடப்பட்டுவருகிறதாம். வழியில் சசிகலா கோஷ்டியினரால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. அதைச் சமாளிக்க அ.தி.மு.க-வின் நிர்வாகிகள் அனைவரையும் தயார்நிலையில் வைத்திருக்க முடிவு செய்தனர்.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

நேற்று (5.2.21) நள்ளிரவு நேரத்தில் தமிழகம் முழுக்கவிருக்கும் மாவட்டச் செயலாளர்களை அவசரமாக போனில் அழைத்து, சென்னைக்கு அழைத்தனர் அ.தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள். வாக்காளர்கள் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனை என்று வெளியே சொன்னாலும், சசிகலா பக்கம் யாரும் போய்விடக் கூடாது என்பதற்காக சிறப்பான விருந்துவைத்து உபசரிக்கவே என்று கட்சியினர் பேசிக்கொள்கிறார்கள்.

எடப்பாடி முகாமைச் சேர்ந்த கட்சி பிரமுகரிடம் பேசியபோது,``கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட சசிகலா தமிழகத்துக்குள் வருகிறார் என்றால், அவருக்கு கொரோனா இல்லை என்று கர்நாடகா அரசு மருத்துவமனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அந்தச் சான்றிதழ் இல்லாமல் அவரை தமிழகத்துக்குள் நுழைய மருத்துவ விதிகள் அனுமதிக்காது. ஒருவேளை, சான்றிதழ் இல்லாவிட்டால் தமிழக எல்லையில் அதற்கான டெஸ்ட்டுகள் நடத்த ஏற்பாடாகியிருக்ருகிறது.

சசிகலா, இளவரசி
சசிகலா, இளவரசி

அதற்கு சசிகலா ஒத்துழைக்க வேண்டும். சசிகலாவுடன், அவரது அண்ணி இளவரசியும் வருகிறார். அவரும் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர். அவருக்கும் இதே விதிகள் பொருந்தும். சசிகலா விதிகளை மீறினால் சட்டம், தன் கடமையைச் செய்யும். அதேநேரம், சசிகலாவுக்கு வரவேற்பு தருகிறோம் என்கிற பேனரில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல் ஏற்படுத்த தென்மாவட்டப் பிரமுகர்கள் முற்படுவார்கள். அவர்களின் அலம்பல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் '' என்கிறார்.

மன்னார்குடியைச் சேர்ந்த சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த ஒருவரிடம் பேசியபோது, ``சசிகலாவுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் ரெடியாக இருக்கிறது. இந்தப் பிரச்னையை கிளப்புவார்கள் என்று எதிர்பார்த்து கண்ணாடிக்கூண்டு அமைப்பை அவர் பயணிக்கும் காரில் ஏற்பாடு செய்துள்ளனர். காரைவிட்டு இறங்கி, கட்சியினரைச் சந்திக்க மாட்டார். காரின் உள்ளேதான் இருப்பார்.

அ.தி.மு.க கொடியை உறுப்பினராக இருப்பவர்தான் பயன்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். நிச்சயமாக, அ.தி.மு.க-வில் உறுப்பினராக இருக்கும் ஒருவரை உரிமையாளராகக்கொண்ட காரில் (அ.தி.மு.க கொடி கட்டிய) சசிகலா பயணிக்கப்போகிறார். அதற்காக மூன்று கார்கள் ரெடியாக உள்ளன. எப்படியும் சசிகலாவைக் கைதுசெய்ய வேண்டும் என்று எடப்பாடி அரசு நினைக்கிறது. ஏற்கெனவே நான்கு வருடங்கள் சிறைச்சாலையைப் பார்த்தவர் சசிகலா. பொய் வழக்கு போட்டால், அதையெல்லாம் சட்டப்படி சந்திக்க ரெடியாகக் காத்திருக்கிறோம்’’ என்கிறார்.

சசிகலா டி.டி.வி-க்குக் கொடுத்த அசைன்மென்ட்; பிப்.8 பெங்களூர்- சென்னை பயணத் திட்டம்!

பி.ஜே.பி-யைப் பொறுத்தவரை, சசிகலாவுக்கும் எடப்பாடிக்கும் செக் வைத்திருக்கிறார்கள். 8-ம் தேதி நடக்கப்போகும் சசிகலா ரேஸில் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களுக்கே தங்களது ஆதரவு என்கிற நிலைப்பாட்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள். இருவரும் மோதிக்கொண்டு ஒருவர் ஜெயித்து வர வேண்டும். அதன் பிறகு, தங்களது அஜெண்டாவைச் சொல்ல இருக்கிறார்கள். தி.மு.க-வை வீழ்த்த அ.தி.மு.க. ஒன்றுபட்ட நிலையில் இருந்தால்தான் முடியும் என்கிற கணக்கில் காத்திருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு