Election bannerElection banner
Published:Updated:

இபிஎஸ்., ஓபிஎஸ் தேர்தல் சென்டிமென்ட் முதல் நாட்டாமைக்குத் தயாராகும் கமல்ஹாசன் வரை கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்...
கழுகார் அப்டேட்ஸ்...

`தலைவர்களின் பிரசாரக் களத்தில் ஃபாலோ செய்கிறேன். செய்திகளை மெயிலில் அனுப்பியிருக்கிறேன்.’ - கழுகாரின் குறுந்தகவல் மொபைலில் ஒளிர்ந்தது.

நேருக்கு நேர்... டீக்காசு...
அப்பாவின் அம்பாஸிடர் கார்... அறை எண் மூன்று! வேட்பாளர்களின் தேர்தல் சென்டிமென்ட்

தேர்தல் நாள் நெருங்கிவிட்ட நிலையில் அரசியல் பிரமுகர்களின் சென்டிமென்ட்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. எடப்பாடி வீட்டைவிட்டுக் கிளம்பும்போது, தான் வீட்டில் வேலைக்கு வைத்திருக்கும் நபர் ஒருவரை மறக்காமல் நேருக்கு நேர் பார்த்துவிட்டுச் செல்கிறாராம். போடி தொகுதியில் கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் யார் கேட்டாலும் நூறு, இருநூறு என்று ‘டீக்காசு’ மறுக்காமல் கொடுக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார் பன்னீர்செல்வம். பழைய டீக்கடை சென்டிமென்ட்தான் இதற்குக் காரணமாம். கடலூர் தி.மு.க மாவட்டச் செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சென்டிமென்ட்டாகத் தன் தந்தையின் பழைய அம்பாஸிடர் காரில் சென்று வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதே சென்டிமென்ட் காரணமாக, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே, கே.கே.சாலையிலுள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் தேர்தலுக்காக அறை ஒன்று எடுத்திருக்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். விழுப்புரத்திலேயே ஒரு வாடகை வீடு இருந்தாலும், மூன்றாம் இலக்க எண்ணுடைய அறையை சென்டிமென்ட்டாக எடுத்திருக்கிறாராம் அவர். தேர்தல் நேரத்தில், மூன்று தனக்கு ராசியான நம்பர் என்பதால், இந்த ஏற்பாடாம். மார்ச் 15-ம் தேதியிலிருந்து லாட்ஜில் தங்க ஆரம்பித்திருக்கிறார் சண்முகம்.

முதல்ல சென்டிமென்ட்... அப்புறம் செட்டில்மென்ட்!

விளம்பரம் பாக்கலியோ விளம்பரம்!
வேலுமணி வீடியோ

அ.தி.மு.க-வின் ‘வெற்றிநடை போடும் தமிழகமே...’ விளம்பரத்தில் இ.பி.எஸ் முன்னிலைப்படுத்தப்பட்டதால், ஓ.பி.எஸ் தன்னை முன்னிலைப்படுத்தி தனியாக விளம்பரம் செய்திருந்தார். இந்தநிலையில், அ.தி.மு.க-வில் மூன்றாவது விளம்பரம் கொடுத்து அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறார் அமைச்சர் வேலுமணி. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் என எல்லோரும் அந்த விளம்பரத்தில் சில நொடிகள் வர, பெரும்பாலும் வேலுமணியை மையப்படுத்தியே வீடியோ தயார் செய்யப்பட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி - வேலுமணி
எடப்பாடி பழனிசாமி - வேலுமணி

`சேவைகளின் மன்னா... எங்க வேலுமணி அண்ணா...’ என்று பாடல் பின்னணியில் பில்ட்அப் ஷாட்களால் நிறைந்த வீடியோ வழியாக `அண்ணா’ என்ற அடைமொழியை அவருக்கு அவரே வழங்கி புரோமோஷன் கொடுத்துக்கொண்டிருக்கிறார். தவிர, ‘வேலுமணி அண்ணா’ என்ற பெயரில் தனி வெப்சைட், மொபைல் ஆப் ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளன. ‘ஓவர் விளம்பரமா இருக்கே!’ என்று நெளிகிறார்கள் அ.திமு.க சீனியர்கள், ``பேரறிஞர் படத்தைப் போட்டு, இவரை இவரே `அண்ணா’னு சொல்லிக்கிறாரு. இன்னும் என்னென்ன பார்க்க வேண்டியிருக்கோ” என்று புலம்புகிறார்கள் தொண்டர்கள்.

பாவம் அண்ணா!

வேட்பாளர்களிடம் சுருட்டிய கதர்கள்!

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, `தொண்டர்களின் ரத்தம் குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள். நிறைய தவறு நடக்கிறது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கொந்தளித்திருந்தார். வேட்பாளர் தேர்வில் பெரும் வசூல் வேட்டை நடைபெற்றதே இதற்குக் காரணம். கட்சியின் `கோபக்கார’ பிரமுகர் ஒருவரும், தென்மாவட்ட ‘ஜொலிக்கும்’ கதர் பிரமுகர் ஒருவரும் வசூல் வேட்டையில் புகுந்து விளையாடியிருக்கிறார்கள். ‘நவரத்தின’ காங்கிரஸ் பிரமுகர், தேர்தல் சீட்டுக்காக 5 கோடி ரூபாய் வரை தான் விரும்பும் தொகுதியில் செலவழித்துவிட்டார். ஆனால், தொகுதி தி.மு.க-வுக்கு மாறும் சூழல் தென்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் அலுவலகம்
காங்கிரஸ் அலுவலகம்

பதறிப்போன அவர், தென்மாவட்ட கதர் பிரமுகரிடம் சரணாகதி அடைந்து ஐந்து ஸ்வீட் பாக்ஸ்களைக் காணிக்கையாகப் படைக்கவும், அவருக்கு சீட்டும் அந்தத் தொகுதியும் உறுதி செய்யப்பட்டதாம். அதேபோல, ‘ஊரையே வசியம்’ செய்யும் காங்கிரஸ் பிரமுகரும் வேட்பாளர் பட்டியலில் தன் பெயர் இடம்பெறுவதற்காக தென்மாவட்ட கதர் பிரமுகருக்கு படியளந்திருக்கிறாராம். இந்த விவகாரத்தில் ‘கோபக்கார’ பிரமுகரும் கணிசமான தொகையைக் கறந்திருக்கிறார் என்கிறார்கள். வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு குஷியான ‘நவரத்தின’ காங்கிரஸ் பிரமுகர், சித்தாலப்பாக்கத்தில் அபார்ட்மென்ட் ஒன்றில் மூன்று அறைகள்கொண்ட வீட்டைப் பரிசாக தென்மாவட்ட கதர் பிரமுகருக்கு அளித்திருக்கிறார். இந்த விவகாரமெல்லாம் கட்சித் தலைமைக்குப் புகாராகச் சென்றிருக்கின்றன.

பேசாம, ‘தமிழ்நாடு கரன்சி கமிட்டி’னு பேரை மாத்திடலாம்!

மணல் பிரமுகர் அளித்த ஸ்வீட் பாக்ஸ்!
கிலியில் 'குயின்' தொகுதி...

தி.மு.க சார்பில் ‘குயின்’ தொகுதியில் களமிறங்கும் சிட்டிங் எம்.எல்.ஏ இம்முறை கரைசேர்வது கடினம் என்கிறார்கள். இதனால், ‘காந்தி’ நோட்டுகளை தொகுதி முழுவதும் வாரியிறைக்கத் திட்டமிட்ட வேட்பாளர், மணல் தொழிலதிபர் ஒருவரிடம் ஐந்து ஸ்வீட் பாக்ஸ்களை அன்பளிப்பாகக் கேட்டிருக்கிறார். ஆத்திரமடைந்த மணல் அதிபரோ, “போனமுறை கொடுத்த எட்டரை ஸ்வீட் பாக்ஸ்களுக்கே எம்.எல்.ஏ ஆன பிறகு எதுவும் செஞ்சு தரலை” என்று புலம்பியிருக்கிறார். அதற்கு குயின் வேட்பாளரோ, ``எதிர்க்கட்சியா இருந்ததால ஒண்ணும் முடியலை. அடுத்தது நம்ம ஆட்சிதான். உங்களுக்கு அனுசரனையா இருப்போம்” என்று பேசி சரிக்கட்டி இரண்டு ஸ்வீட் பாக்ஸ்களை லவட்டிவிட்டாராம்.

ஸ்வீட் பாக்ஸ்களை ஈ மொய்க்காம பார்த்துக்கிறதே பெரிய வேலையா இருக்குமே!

``எடப்பாடி பழிவாங்கிவிட்டார்!’’
புலம்பும் ஶ்ரீதர் வாண்டையார்

அ.தி.மு.க கூட்டணியில், கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஶ்ரீதர் வாண்டையார் போட்டியிடுகிறார். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டபோது, அதற்கு எதிராகச் சில தினங்கள் கும்பகோணத்தில் ஶ்ரீதர் வாண்டையார் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். பிறகு, அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் சமாதானம் பேசி பிரச்னையைச் சுமுகமாக முடித்துவைத்தார். இந்தநிலையில், அ.தி.மு.க கூட்டணியில் ஶ்ரீதர் வாண்டையார் போட்டியிடுவதை பா.ம.க தலைமை ரசிக்கவில்லை என்கிறார்கள்.

ஶ்ரீதர் வாண்டையார்
ஶ்ரீதர் வாண்டையார்

கும்பகோணம் தொகுதியில் வன்னியர்கள் கணிசமாக வசிப்பதால், ‘ஶ்ரீதர் வாண்டையாருக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய மாட்டோம்’ என்றும் பா.ம.க நிர்வாகிகள் போர்க்கொடித் தூக்கியிருக்கிறார்கள். பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸிடம் பேசி இந்தப் பிரச்னைக்கு சுபம் போட்டுவிடலாம் என்று வைத்திலிங்கம் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லையாம். ‘‘முக்குலத்தோர் அரசியல் அதிகாரம் பெற்றுவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டே வன்னியர்கள் அதிகமிருக்கும் கும்பகோணம் தொகுதியில் எனக்கு சீட் ஒதுக்கி முதல்வர் பழனிசாமி பழிவாங்கிவிட்டார்’’ என்று ஶ்ரீதர் வாண்டையார் புலம்புகிறாராம்.

உள் ஒதுக்கீட்டைவெச்சு ஊமைக்குத்தா குத்திட்டாங்கனு சொல்லுங்க!

‘செவனேனுதானே இருந்தேன்...’
தங்கமணி மீது கொதிக்கும் நிர்வாகி...

நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க அவைத்தலைவராக இருப்பவர், பி.ஆர்.சுந்தரம். இவர் இரண்டு முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவர், தற்போது மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவராகவும் பதவிவகிக்கிறார். கட்சியில் சீனியரான இவர், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட முயன்றுவந்தார். முதல்வர் பழனிசாமியும் அமைச்சர் தங்கமணியும், ‘உங்களுக்குதான் சீட்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அந்த நம்பிக்கையில், வேட்பாளர் பட்டியலை அறிவிப்பதற்கு முன்பே, தான் வகித்துவந்த மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

தங்கமணி
தங்கமணி

இந்தநிலையில், இவருக்கு கல்தா கொடுத்துவிட்டு, சிட்டிங் எம்.எல்.ஏ பொன்.சரஸ்வதிக்கே சீட் கொடுத்துவிட்டது அ.தி.மு.க தலைமை. இதனால், ‘‘நான் பாட்டுக்கு செவனேனுதானே இருந்தேன். சீட்டு தர்றோம் வானு அழைச்சுட்டு போயி அசிங்கப்படுத்திட்டாங்களே’’ என்று தங்கமணி மீது, கடும் கோபத்தில் இருக்கிறாராம் சுந்தரம்.

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையால்ல இருக்கு!

மிரட்டிய நிர்வாகி...
அசராத ஸ்டாலின்!

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் நீலகிரி மாவட்ட தி.மு.க செயலாளர் முபாரக், ``எனக்கு வயசாகிடுச்சு. இதுதான் என்னோட கடைசித் தேர்தல். கட்டாயம் எனக்கு வாய்ப்பு கொடுக்கணும்” என்று தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் சென்டிமென்ட்டாகப் பேசியே குன்னூர் தொகுதியை வாங்கியதாகப் பேச்சு எழுந்தது. இருப்பினும், அவரால் வெற்றிபெற முடியவில்லை. இந்தமுறை குன்னூரில் போட்டியிட முன்னாள் அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து, ``எனக்கு சீட் தரலைன்னா என்னோட மானமே போயிரும். அப்புறம் தலைமறைவாகிடுவேன்” என்று மூத்த நிர்வாகிகளிடம் அறிவாலயத்தில் மன்றாடினாராம். இதற்கெல்லாம் அசராத ஸ்டாலின், ‘‘வேட்பாளர் பட்டியலை மாற்ற முடியாது. போய் தேர்தல் வேலையைப் பாருங்க. அப்புறம் பார்த்துக்கலாம்’’ என மிரட்டி அனுப்பினாராம். வெளிறிப்போய் ஊர் திரும்பியிருக்கிறார் முபாரக்.

குன்னூருல மண்ணைக் கவ்விட்டாருன்னு சொல்லுங்க!

அமைச்சர் செய்த உள்ளடி...
சுயேச்சையாகக் களமிறங்கும் முன்னாள் அமைச்சர்?!

நாகப்பட்டினம் தொகுதியை, கடந்த முறை கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கிய அ.தி.மு.க தலைமை, இந்தமுறை முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபாலுக்குத் தருவதாக உறுதி அளித்திருந்தது. இந்தநிலையில், அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி, தனது வலதுகரமான தங்க.கதிரவனை அ.தி.மு.க வேட்பாளாராக்கிவிட்டார்.

ஓ.எஸ்.மணியன்.
ஓ.எஸ்.மணியன்.

தி.மு.க கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தை கட்சிக்கு இந்தத்தொகுதி ஒதுக்கப்பட்டு, ஆளூர் ஷாநவாஸ் வேட்பாளராகியிருக்கிறார். சீட் கிடைக்காத விரக்தியிலிருக்கும் ஜெயபாலை சுயேச்சையாகக் களமிறங்கும்படி அவரின் ஆதரவாளர்கள் வற்புறுத்திவருகிறார்களாம். ஜெயபாலை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது அமைச்சர் தரப்பு.

ஜெய ‘பாலு’க்கு விக்கெட் விழுமா!

தயாரிப்பாளருக்குக் குவியும் கூட்டம்...
தனித்துவிடப்பட்ட ம.நீ.ம வேட்பாளர்கள்!

கன்னியாகுமரி சட்டசபைத் தொகுதியில் ம.நீ.ம சார்பில் சினிமா தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் போட்டியிடுகிறார். இவருக்குப் பிரசாரம் செய்வதற்காக மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டுமொத்த ம.நீ.ம நிர்வாகிகளும் கன்னியாகுமரியிலேயே முகாமிட்டிருப்பதால், மாவட்டத்தின் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர்கள் அதிருப்தியில் இருக்கிறார்கள்.

பி.டி. செல்வகுமார்
பி.டி. செல்வகுமார்

மார்ச் 14-ம் தேதி கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் சுபா சார்லஸ் மற்றும் நாகர்கோவில் சட்டசபைத் தொகுதி வேட்பாளர் மரியா ஜேக்கப் ஸ்டான்லி ஆகியோர் அறிமுகம் செய்யப்பட்ட கூட்டத்தில்கூட உள்ளூர் நிர்வாகிகள் கலந்துகொள்ளவில்லையாம். நொந்துபோன அந்த வேட்பாளர்கள், வெளியூரைச் சேர்ந்த உறவினர்களுடன் வந்து பிரஸ்மீட் வைத்து தங்களைத் தாங்களே அறிமுகப்படுத்திவிட்டு கிளம்பினார்கள். இந்த விவகாரம் ஆழ்வார்ப்பேட்டைக்குப் புகாராகச் சென்றிருக்கிறது.

நாட்டாமை வேஷங்கட்டுவாரா கமல்!

காங்கிரஸுக்கு மாறிய தொகுதி...
குஷியில் உடுமலை ராதாகிருஷ்ணன்!

தி.மு.க கூட்டணியில் உடுமலைப்பேட்டை தொகுதி, காங்கிரஸ் கட்சிக்குச் சென்றுவிட்டது. இது அமைச்சர் உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணனின் உள்ளடி வேலைதான் என்று புலம்பித் தீர்க்கிறது தி.மு.க வட்டாரம். ``தனக்கு எதிராக தன்னுடைய ஸ்லீப்பர் செல் ஆள் ஒருவரே தி.மு.க வேட்பாளராகக் களமிறங்கினால், வெற்றி உறுதி என்று அதற்கான முயற்சியில் ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார்.

உடுமலை ராதாகிருஷ்ணன்
உடுமலை ராதாகிருஷ்ணன்

அது வேலைக்காகவில்லை. அடுத்ததாக, காங்கிரஸ் தலைவர்கள் சிலரை அணுகி, உடுமலை தொகுதியை காங்கிரஸ் கட்சிக்காகக் கேட்டு வாங்கவைத்துவிட்டார். தாராபுரம் தொகுதியில் காங்கிரஸ் வலுவாக இருக்கும்போது, உடுமலை தொகுதியை அவர்கள் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், ராதாகிருஷ்ணனின் ஸ்வீட் பாக்ஸ் மேஜிக்கால், உடுமலை தொகுதியை காங்கிரஸ் பெற்றிருக்கிறது. இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ராதாகிருஷ்ணன் தரப்பு குஷியில் இருக்கிறது’’ என்று புலம்பித் தீர்க்கிறார்கள் உடன்பிறப்புகள்.

அரசியல்ல அமாவாசை கேரக்டரையே மிஞ்சிட்டாரே!

கே.எஸ்.அழகிரி மீது டெல்டா காங்கிரஸ் அதிருப்தி!

காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்டா மாவட்டங்களை முற்றிலும் புறக்கணிப்பதாக கதர்வேட்டி சீனியர்கள் கடுப்பில் இருக்கிறார்கள். துளசி அய்யா வாண்டையாரின் மகனும், தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான கிருஷ்ணசாமி வாண்டையார், பாபநாசம் தொகுதியில் போட்டியிட விரும்பினார். தொகுதியை காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்க தி.மு.க-வும் தயாராக இருந்த நிலையில், கே.எஸ்.அழகிரி உள்நோக்கத்தோடு வேண்டாமென மறுத்துவிட்டதாக கிருஷ்ணசாமி வாண்டையாரின் ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரைவேலன், நன்னிலம் தொகுதியை எதிர்பார்த்தார். அந்தத் தொகுதியைப் பெற்றுத்தரவும் காங்கிரஸ் மாநிலத் தலைமை ஆர்வம்காட்டவில்லையாம். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் மயிலாடுதுறையில் மட்டுமே காங்கிரஸ் போட்டியிடுகிறது. இதுவும்கூட மணிசங்கர் அய்யர், தி.மு.க தலைமையிடம் நேரடியாகப் பேசிப் பெற்றதால் கிடைத்தது என்கிறார்கள். இந்த விவகாரங்களால், கே.எஸ்.அழகிரி மீது டெல்டா கதர்களிடையே அதிருப்தி நெருப்பு பற்றியெரிகிறது.

டெல்டாவை ஆக்கிப்புட்டாரே உல்டா!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு