ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் திருமகன் ஈ.வெ.ரா (46). இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் மகன் ஆவார். ஈரோடு பெரியார் வீதியில் குடியரசு இல்லத்திலுள்ள இவரது வீட்டில் இன்று மதியம் சுமார் 11:45 மணியளவில் திருமகன் ஈ.வெ.ரா-வுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது உதவியாளர் தனபால், வீட்டின் பணியாளர் கார்த்தி ஆகியோர் மட்டுமே உடன் இருந்தனர். மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியும், எம்.எல்.ஏ-வின் உறவினருமான ராஜேஷ் ராஜப்பாவுக்குத் தகவல் அளித்தனர். அவர் வெளியே இருந்ததால், அருகிலிருந்த முன்னாள் கவுன்சிலர் ஜாபர் சாதிக்கை தொடர்புகொண்டு உடனடியாக மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ-வை அழைத்துச் செல்லுமாறு கூறிவிட்டு, ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்தார்.
சில நிமிடங்களில் அருகிலிருந்த குடும்ப டாக்டர் முத்துசாமிக்கும் தகவல் அளிக்கப்பட, அவர் மகன் தனஞ்செயன் வந்து எம்.எல்.ஏ-வை பரிசோதனை செய்துகொண்டிருந்தார். அதற்குள் ஆம்புலன்ஸ் வரவே, ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்கு எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா கொண்டு செல்லப்பட்டார். அவருடன் ஜாபர் சாதிக் உடன் சென்றார்.

மின்னல் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ் கே.எம்.சி.எச் மருத்துவமனைக்குச் சென்றடைந்தது. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் எம்.எல்.ஏ-வின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் போராடினர். ஆனால், மருத்துவர்களின் போராட்டத்துக்குப் பலன் இல்லாமல் போனது. மதியம் சுமார் 12:30 மணியளவில் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற தகவலை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். இதையடுத்து, வீட்டுக்கு அவரின் சடலத்தை சுமந்தபடி ஆம்புலன்ஸ் வாகனம் சென்றது. இந்த தகவல் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் காட்டுத் தீயாகப் பரவியது. இதை நம்பமுடியாத கட்சியினர், எம்.எல்.ஏ-வின் வீட்டுக்குப் படையெடுக்கத் தொடங்கினர். உடனடியாக எம்.எல்.ஏ-வின் உடல் குளிர்சாதன பேழையில் வைக்கப்பட்டது.

இது குறித்து உடனடியாக சென்னையிலிருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ந்த இளங்கோவன், எம்.எல்.ஏ-வின் தாயார் வரலட்சுமி, எம்.எல்.ஏ-வின் மனைவி பூரணியம்மாள், ஒரே மகள் சமனா ஈ.வெ.ரா, தம்பி சஞ்சய் சம்பத் ஆகியோர் காரில் புறப்பட்டு சுமார் ஆறு மணியளவில் ஈரோடு வந்தனர்.

எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்த தகவல் அறிந்ததும் எம்.பி கணேசமூர்த்தி, மேயர் நாகரத்தினம், எஸ்.பி சசிமோகன் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். அதேபோல, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும், அவரின் மனைவியும் தங்கள் மகன் திருமகன் ஈ.வெ.ரா-வின் உடலைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுதனர்.

காங்கிரஸ் எம்.எம்.ஏ திருமகன் ஈ.வெ.ராவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் ஜாபர் சாதிக் நம்மிடம் கூறுகையில், ``மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு எம்.எல்.ஏ கேட்டுக்கொண்டார்.

ஆம்புலன்ஸில் ஏறி 3 நிமிடங்களில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அதற்குள் மயங்கிய நிலையில் அவர் காணப்பட்டார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர்.

ஆனால், அவர் உயிரிழந்துவிட்டார். எப்போதும் சிரித்த முகத்துடன், பொதுமக்கள் யார் எந்த கோரிக்கை மனுவுடன் வந்தாலும் அதைச் செய்துதர எல்லா முயற்சிகளையும் செய்வார்" என்றார்.