ஈரோடு கிழக்குத் தொகுதியில் தே.மு.தி.க வேட்பாளராக, அந்தக் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆனந்தை கட்சி மேலிடம் அறிவித்திருக்கிறது. வேட்பாளராக அறிவிக்கப்பட்டு சில நாள்களான நிலையில், வெள்ளிக்கிழமை முதல் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார் ஆனந்த். தாமதமாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருக்கும் அவர், ``இந்தத் தேர்தலில் கணிசமான வாக்குகளுடன் வெற்றி பெறுவேன்" என்று கூறி வருகிறார்.
இந்த நிலையில், தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த், ஆளுங்கட்சியான தி.மு.க-வில் இணையப் போவதாகவும், இது தொடர்பாக ஆளுங்கட்சி தரப்பில் அவருக்கு விலைபேசி வருவதாகவும் சமூக வலைதளங்களிலும், ஒரு செய்தித்தாளிலும் செய்தி வெளியானது. இதைக்கண்டு பதற்றமடைந்த வேட்பாளர் ஆனந்த் அவசர, அவசரமாக செய்தியாளர்களை அழைத்து பேட்டியளித்தார்.

அப்போது பேசியவர், ``நடைபெறவிருக்கும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தே.மு.தி.க சார்பில் போட்டியிட கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்த் எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார். இந்த நிலையில், போட்டியிலிருந்து விலகி வேறு கட்சியில் நான் சேரப் போவதாகப் பொய்யான செய்தியைப் பரப்பிவருகிறார்கள். யாரோ ஆதாயம் தேடுவதற்காக இதுபோன்ற தவறான செய்திகளைப் பரப்பி வருகிறார்கள். என் மீதும், நான் சார்ந்திருக்கும் தே.மு.தி.க மீதும் தவறான எண்ணத்தைப் பரப்பி என் மீதும், கட்சியின் மீதும் இருக்கும் நற்பெயருக்கு களங்கம் பரப்பும் வகையில் தற்போதைய ஆளுங்கட்சியும், ஏற்கெனவே ஆட்சிபுரிந்த கட்சியினரும் ஈடுபட்டு வருகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
எங்கள் மீது பரப்பும் இதுபோன்ற அவதூறு தகவல்களை மக்கள் நம்பமாட்டார்கள். இருப்பினும், தவறான செய்தி பரவுவதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விளக்கத்தை அளிக்கிறோம். தற்போது இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்புச்செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ் உள்ளிட்டோர் கொண்ட 168 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரின் ஆலோசனையின்பேரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம். என்னை ஆதரித்து கட்சியின் பொருளாளர் பிரேமலதா, விஜய பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்கள் பிரசாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்" என்றார்.

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் இந்தத் தொகுதியில் தே.மு.தி.க-வும், டி.டி.வி.தினகரன் கட்சியான அ.ம.மு.க-வும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அப்போது ஈரோடு கிழக்குத் தொகுதி அ.ம.மு.க-வுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்தக் கட்சியின் வேட்பாளர் முத்துகுமரன் 1204 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்தார். அதேசமயம் 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையிலான அணியில் இடம்பெற்றிருந்த தே.மு.தி.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனது குறிப்பிடத்தக்கது.