தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ``மருத்துவ வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை மாணவர்கள், வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் அரசு மருத்துவkக் கல்லூரிகள் தமிழகத்தில் உருவாக்கப்பட்டன. ஆனால், 'நீட்' தேர்வைக் கொண்டு வந்து தமிழக மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் கூட நமது பிள்ளைகள் படிக்க முடியாத சூழலை உருவாக்குகின்றனர். ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் என்றும் எட்டாக்கனியாக மாறிவிடக் கூடாது, அவர்கள் ஏழ்மை நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்திற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், நாம் ஒடுக்கப்பட வேண்டும், நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட வேண்டும் என்பதற்காக நீட் தேர்வை திணித்துக் கொண்டிருக்கின்றனர். இதை தட்டிக் கேட்க இதற்கு முன்னாலிருந்த அ.தி.மு.க ஆட்சிக்கு முதுகெலும்பு இல்லை. அதனால், தி.மு.க., அதன் கூட்டணிக் கட்சியினரின் ஒருமித்த குரலோடு நீட் தேர்வை எதிர்த்து மத்திய பா.ஜ.க அரசை தட்டிக் கேட்கிறது. இதுபோல, மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாநில உரிமைகளை பறிக்க கூடிய விஷயங்களுக்காக தி.மு.க தொடர்ந்து போராடி வருகிறது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மத்திய பா.ஜ.க அரசு, இந்தியாவில் இரண்டு இந்தியாவை உருவாக்க முயன்று வருவதாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். ஒன்று, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவது, மற்றொன்று ஏழைகளை மேலும் ஏழைகளாக மாற்றுவது. இதில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் மக்களுக்கு சரியான சாலை வசதி கிடையாது. கழிப்பிட வசதி கிடையாது. நமது திருமணத்தை கூட அங்கு நம் விருப்பப்படி அமைத்துக் கொள்ள முடியாது. அங்கு மக்களுக்கு சுதந்திரம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் பா.ஜ.க இவ்வளவு நாளும் அ.தி.மு.க மீது ஏறி சவாரி செய்து கொண்டிருந்தது.

தற்போது தனியே தேர்தலைச் சந்திப்பதாக அறிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க, பா.ஜ.க என தனித்தனியே இரண்டு முகங்களாக வந்தாலும் இரண்டும் ஒரே முகம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தி.மு.க தலைவர் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தின் போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் மக்கள் தேவையை அறிந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். முந்தைய ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள், மழை காலங்களில் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். இதற்கு சரியாக திட்டமிடப்படாத ஸ்மார்ட் சிட்டி பணிகளே காரணம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தி.மு.க ஆட்சி அமைந்ததும், இந்தமுறை மழை காலத்தில் மக்களுக்கு சிரமங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்ட குறைகளை ஆராய்ந்து சரியான திட்டமிடலுடன் பணிகளை விரைந்து முடித்ததன் விளைவாகத்தான் இன்று நாம் பெரும் சிரமத்தை தவிர்த்துள்ளோம். இதுபோல தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எண்ணற்ற திட்டங்களை தி.மு.க தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. படித்த இளைஞர் - இளம்பெண்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு பர்னிச்சர் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மக்கள் திட்டகளை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் சரியானவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும். அதற்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தந்தால் அவர்கள் உங்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாக செயல்படுவார்கள். எனவே, மக்களுக்கான திட்டங்களை சரியாக உங்களிடம் கொண்டு வந்து சேர்பவர்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும்” என்றார்.