Published:Updated:

`பா.ஜ.க-வின் CAA ஆதரவு மிஸ்டு கால்கள்!' - நெட்ஃபிளிக்ஸை பொங்கவைத்த நெட்டிசன்கள்

போலி CAA ஆதரவு மிஸ்டு கால்கள்
போலி CAA ஆதரவு மிஸ்டு கால்கள்

"புதிய ஐபோன் மாடல் உங்களுக்கு வேண்டுமா, இந்த எண்ணில் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்", "எனக்கு போரடிக்கிறது. என்னோடு பேச விரும்புபவர்கள் இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்", "இலவசமாக பிட்சா டெலிவரி வேண்டுமா? இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்."

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு ஆதரவைத் திரட்டுவதற்காக பா.ஜ.க தலைமை, ஒரு மிஸ்டு கால் அறிவிப்பை கடந்த வியாழனன்று வெளியிட்டது. அதன்படி, குடியுரிமை சட்டத் திருத்தத்தை ஆதரிப்பவர்கள் '88662 88662' என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கும்படி பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் விளம்பரம் செய்யப்பட்டது. அமித்ஷாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் அதைக் குறிப்பிட்டிருந்தார். பா.ஜ.க ஆதரவாளர்கள் பலரும் ஆர்வத்தோடு மிஸ்டு கால் கொடுத்து, அதை ட்விட்டரிலும் பதிவுசெய்து வந்தனர்.

இந்நிலையில் பா.ஜ.க அறிவித்த அதே மிஸ்டு கால் எண்ணை, பல்வேறு பயன்பாடுகளைக் குறிப்பிட்டு போலியான ட்விட்டுகளை குடியுரிமை சட்டத் திருத்த ஆதரவாளர்கள் போடத் தொடங்கினார்கள். "புதிய ஐபோன் மாடல் உங்களுக்கு வேண்டுமா, இந்த எண்ணில் என்னைத் தொடர்புகொள்ளுங்கள்", "எனக்குப் போரடிக்கிறது. என்னோடு பேச விரும்புபவர்கள் இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்", "இலவசமாக பிட்சா டெலிவரி வேண்டுமா? இந்த எண்ணில் தொடர்புகொள்ளுங்கள்" என்றெல்லாம் விதவிதமாக நூற்றுக்கணக்கான ட்வீட்களை வெளியிட்டுள்ளார்கள்.

அதுமட்டுமல்லாமல், பல்வேறு நிறுவனங்களின் பேரில் வேலைக்கு ஆட்கள் தேவை அறிவிப்புகளிலும் அந்த எண்ணைப் பயன்படுத்தி ட்வீட் செய்துள்ளார்கள். இவற்றையெல்லாம் உண்மையென்று நம்பி பலர் ஏமாந்துள்ளார்கள்.

குறிப்பாக, நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரராகி ஆறு மாத காலத்துக்கு இலவசமாக அதன் சேவையைப் பயன்படுத்த இந்த எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்கும்படியும் முதலில் வரும் 100 அழைப்புகளுக்கு மட்டுமே இந்த ஆஃபர் என்றும் ஒருவர் ட்வீட் செய்திருந்தார். அது வைரலாகி, பலரும் மிஸ்டு கால் கொடுக்க, இறுதியில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமே அந்த போலி ட்வீட் குறித்து பதிவிட்டு அதை நம்ப வேண்டாமென்று கேட்டுக்கொண்டதோடு, "உங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்த விரும்பினால் எப்போதும்போல் வேறொருவரின் அக்கவுன்டைப் பயன்படுத்துங்கள்" என்று அறிவுரையும் கூறும்படி வைத்துவிட்டார்கள்!

அடுத்த கட்டுரைக்கு