Published:Updated:

`மத்திய அரசே நினைத்தாலும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது!’ - ஹெச்.ராஜா

`நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என திமுக கூறியிருப்பது, அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. மத்திய அரசே நினைத்தாலும்கூட இனி நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது” என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டம், மாங்கரைத் தெருவில் புதிதாக அமைக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டத்தில், பாஜக கிழக்கு மாவட்டத் தலைவர் தனபால் உள்ளிட்ட 300 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பாதயாத்திரை பக்தர்கள் தங்கும் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் வந்திருந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா அவர்களைச் சந்தித்துப் பேசினார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``அக்டோபர் 2-ம் தேதி கிராமசபைக் கூட்டத்தில் மதுபான கடையை அகற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் மதுக்கடை அகற்றப்படாததால் போராட்டம் நடைபெற்றது. ஒரு சமயத்தில் சாலைகளில் `நாம் இருவர் நமக்கு இருவர், நமக்கு ஒருவர்’ என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும், `குழந்தை வேண்டுமா... சோதனைக் குழாய் குழந்தை?’ எனப் பெயர் பலகைகள் நிறைந்துள்ளன.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

1967-ம் ஆண்டுக்குப் பிறகுதான் கலைஞர் கருணாநிதி மதுபான கடையை தமிழகத்துக்குக் கொண்டு வந்தார். இந்த மதுபான கடைகளால்தான் பல ஆண்கள், குழந்தைகள் பெற்றெடுக்கத் தகுதியில்லாமல் ஆகின்றனர். ஆகையால் மதுபான கடைகளை முழுவதுமாக அகற்ற தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

''கோயில் பணத்தில் காலேஜ் கட்டலாமா?'' - ஹெச்.ராஜா அடுத்த அதிரடி

திமுக தேர்தலில் கூறிய வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வை ரத்து செய்துவிடுவோம் என திமுக கூறியது, அவர்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. மத்திய அரசே நினைடைத்தாலும்கூட இனி நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது. அதேபோல் எல்லாக் குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகச் சொன்ன வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை” என்றார்,

`அதிமுகவிலுள்ள குழப்பத்துக்கும், சசிகலாவின் அரசியல் பிரவேசத்துக்கும் பாஜக ஓர் அங்கமாக உள்ளது என்று திருமாவளவன் கூறியிருக்கிறாரே...’ எனக் கேள்வி எழுப்பியதற்கு, ``திருமாவளவன் ஒரு குழப்பவாதி, சமூக விரோதி” என்று பேட்டியை முடித்துக்கொண்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு