Published:Updated:

``என்னை எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள்!" - பொங்கும் ஜெ.தீபா

J. Deepa
J. Deepa

பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு நடுவே ஜெ.தீபாவுடன் ஒரு பேட்டி.

அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக அதிரடித்த ஜெ.தீபா, தனது பேரவையை அ.தி.மு.க-வுடன் இணைப்பதாக அறிவித்துள்ளார். வழக்கம்போல தனது முடிவை அவர் மாற்றிவிடுவார் எனச் செய்திகள் இறக்கை கட்டிப் பறந்தநிலையில், அச்செய்தியை மறுத்துள்ள ஜெ.தீபா, வரும் பிப்ரவரி 26-ம் தேதி கட்சி இணைப்பு விழாவை நடத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழலுக்கு நடுவே, அவரிடம் பிரத்யேக பேட்டி கண்டோம்.

Deepa with Madhavan
Deepa with Madhavan

அ.தி.மு.க-வில் இணைய விரும்புவதாக தலைமைக் கழகத்தில் கடிதம் அளித்திருக்கிறீர்கள். ஆனால், அதை அந்தக் கட்சி சீரியஸாக எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லையே?

அ.தி.மு.க தரப்பில் சரியான ரெஸ்பான்ஸ் இல்லாதது உண்மைதான். அவர்களின் கட்சித் தலைவியின் வாரிசு என்கிற முறையிலாவது, உரிய மரியாதையை அ.தி.மு.க தலைவர்கள் எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். ஜனவரி 6-ல் சேலத்தில் நடைபெற்ற பேரவையின் பொதுக்குழுவில், அ.தி.மு.க-வில் இணைந்து செயல்படுவது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பின்னரும் என் பேரவை நிர்வாகிகள் தொடர்ச்சியாக அழுத்தம் தந்தனர். சில விஷமிகள் தவறான பிரசாரத்தையும் செய்துவந்தனர். இதற்காகத்தான் அ.தி.மு.க-வில் இணைய விருப்பம் தெரிவித்து கடிதம் அளித்தோம். வரும் பிப்ரவரி 26-ம் தேதி இணைப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கட்சிப் பதவி ஏதேனும் எதிர்பார்த்துள்ளீர்களா?

இது நிபந்தனையற்ற ஆதரவு. எனக்கோ, என் கணவர் மாதவனுக்கோ கட்சிப்பதவியை எதிர்பார்த்து அ.தி.மு.க-வில் இணையவில்லை. தாய்க்கழகத்தில் இணைந்து செயல்படுவது என்கிற நிர்வாகிகளின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, நானும் ஒப்புக்கொண்டேன். இதனிடையே என் உடல்நிலையிலும் தொய்வு ஏற்பட்டது. ஓய்வு தேவைப்பட்டதால், அரசியலிலிருந்து விலகியிருக்க முடிவெடுத்தேன்.

இவ்வளவு நாள்கள் பேரவையில் நிலவிய குழப்பங்களுக்கு ராஜாதான் காரணம். அவர் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய சக்தி செயல்படுகிறது.
ஜெ.தீபா

உங்கள் நண்பர் ராஜாமீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறுகிறீர்களே... அவர் உங்களுடன் இருந்தபோது, அவர்மீதான குற்றச்சாட்டுகள் உங்களுக்குத் தெரியவில்லையா?

நான் நம்பியிருந்த எல்லோரும் என்னை ஏமாற்றிவிட்டனர். ஒவ்வொரு காலகட்டத்திலும், தங்களது சுயரூபத்தை வெளிப்படுத்தி பேரவையில் இருந்து அவர்களே வெளியேறி விட்டார்கள். நிர்வாகிகள் நியமனத்தில் ராஜா பணம் பெறுவதாக வந்த குற்றச்சாட்டில்தான், அவரை மூன்று முறை பேரவையில் இருந்து நீக்கி, மீண்டும் இணைத்துக்கொண்டோம். இப்போது பேரவையைப் பற்றியும், என் கணவர் மாதவனைப் பற்றியும் அவதூறு பரப்பும் குற்றச்சாட்டுகளை ராஜா பரப்பி வருகிறார். இவ்வளவு நாள்கள் பேரவையில் நிலவிய குழப்பங்களுக்கு ராஜாதான் காரணம். அவர் பின்னணியில் ஏதோ ஒரு பெரிய சக்தி செயல்படுகிறது. இப்போது நான் தெளிவாகிவிட்டேன்.

ஜெயலலிதாவின் சொத்துகள் தொடர்பான வழக்கு நடைபெறுகிறது. இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதாவின் வாரிசு என்கிற முறையில், அவரது சொத்துகளை நாங்கள் எதிர்பார்ப்பதில் தவறில்லை. எங்கள் உரிமையைத்தான் நாங்கள் கேட்கிறோம். தீபக்கும் நானும்தான் தாத்தா ஜெயராமனின் வாரிசுகள் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த ஓர் அடையாளமே போதும், சட்டப்படி ஜெயலலிதாவின் வாரிசுகள் நாங்கள்தான் என்பதை நிரூபிப்பதற்கு.

J.Deepa
J.Deepa

உங்களை நம்பி வந்தவர்களுக்கு, நீங்கள் கூறும் அட்வைஸ் என்ன?

முதலில் நீங்கள் ஒன்றைத் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். யாரையும் என்னை நம்பி, என் பின்னால் வர நான் சொல்லவில்லை. என் அத்தை இறந்த பிறகு, அ.தி.மு.க-வுக்கு நான் தலைமைப் பொறுப்பேற்க வேண்டுமென்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் என் வீட்டுவாசலில் வந்து நின்றார்கள். அரசியல் ஈடுபாடு இல்லாத நான், அவர்கள் வற்புறுத்தலின் பெயரில்தான் அரசியலுக்கே வந்தேன். கடந்த இரண்டு வருடங்களில் என் நிம்மதி, உடல்நிலை என நான் இழந்தவை ஏராளம். இப்போது எனக்கு ஓய்வு தேவைப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு