ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ திருமகன் ஈ.வெ.ரா குறித்து சீமான் பேசிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அதில், "முதலில் நாம் தமிழர் கட்சியில்தான் திருமகன் ஈ.வெ.ரா சேர வந்தார், பலருக்கும் இது தெரியாது. அவரது அப்பா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. அதனால், அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டேன். திருமகன் ஈ.வெ.ரா இறந்ததில் எனக்கு மிகுந்த மனத்துயரம். ஈ.வி.கே.எஸ் அய்யாவுடன் துயரம் பகிர்ந்துகொண்டேன். ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக திருமகன் ஈ.வெ.ரா சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஏதாவது, மக்களின் பிரச்னை குறித்துப் பேசியிருப்பாரா? இல்லை... ஈ.வி.கே.எஸ் போனாலும் பேசமாட்டார். அப்படியென்றால், மக்களின் பிரச்னையைத் துணிந்து, தெளிந்து பேசக்கூடியவரைச் சட்டமன்ற உறுப்பினர் ஆக்கவேண்டும்" என்று சீமான் பேசியது பரபரப்பாகி வரும் சூழலில் இதுகுறித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவனைத் தொடர்புகொண்டு பேசினேன்.

“சீமான் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர், எப்போதும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கமாட்டார். ஒன்றைச் சொல்லிவிட்டு பின்பு மாற்றிப் பேசக்கூடியவர். அவருக்கு நிரந்தரமான கொள்கையே கிடையாது. ஒருமுறை பெரியாரைத் தாக்குவார். மறுமுறை பெரியாரைப் புகழ்வார். திடீரென்று முருகக் கடவுளின் பேரன் என்பார். சீமானைத் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிடிக்கும். நல்ல இளைஞர். ஆனால், ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார் என்பது தெரியவில்லை.
என் மகன் திருமகன் ஈ.வெ.ரா அவரது கட்சியில் சேரப்போனார் என்று சீமான் கூறுவது எனக்கே புதிய விஷயமாக இருக்கிறது. என் மகன் 10 வருடங்களும் மேலாக இளைஞர் காங்கிரஸில் இருந்தார். அவர் போய் சீமானைச் சந்தித்து கட்சியில் சேரப்போவதாகக் கூறுவதற்கு வாய்ப்பே இல்லை. பொய்யான தகவல்களை சீமான் பரப்புகிறார். அவர், இப்படி நிரந்தரமான கொள்கையுடன் இல்லாதது எனக்கு அவர் மீது வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

சீமானுக்கு என் மகனைப் பற்றி என்ன தெரியும்? முதன்முதலாக திருமகன் எம்.எல்.ஏ ஆனவுடன் சட்டமன்றத்தில் தொகுதியின் பிரச்னைகள் குறித்துத்தான் பேசினார். அதற்கு துரைமுருகனும் பதில் சொல்லியிருக்கிறார். எல்லோருமே பாராட்டினார்கள். இதெல்லாம் சீமான் பார்த்தாரா? ஊரே எனது மகனின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறது. சட்டமன்றத்தில் என் மகன் பேசியபோது எதிர்க்கட்சிகள், பா.ஜ.க உட்படப் பாராட்டின. இறந்த என் மகனை சீமான் இப்படிச் சொல்வது என் நெஞ்சத்தில் வேதனையைக் கூட்டுகிறது. அவர் இப்படிப் பேசுவார் என்று எதிர்பார்க்கவே இல்லை” என்கிறார் வேதனையோடு.