Election bannerElection banner
Published:Updated:

'உழைப்புக்கு மதிப்பில்லை' - தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

தி.மு.க-வில் இணைந்த காமராஜ்
தி.மு.க-வில் இணைந்த காமராஜ் ( நா.ராஜமுருகன் )

முதலமைச்சர், துணை முதலமைச்சர் என அனைவருக்கும் என்னைப் பற்றித் தெரியும். என்னோட அத்தனை உழைப்புக்கும் உதாசீனம்தான் பரிசு என்றால், அந்தக் கட்சியில் எப்படிக் காலம் தள்ள முடியும்? அதனால், தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதியின் முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ காமராஜ். இந்தத் தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தார். ஆனால், அ.தி.மு.க தலைமை கடந்த 10-ம் தேதி அறிவித்த வேட்பாளர் பட்டியலில் காமராஜ் பெயரில்லை. அ.தி.மு.க சார்பில் கரூர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணிச் செயலாளரான தானேஷ் என்கிற முத்துக்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால், அதிருப்தி அடைந்த காமராஜ் நேற்று மாலை அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க-வில் இணைந்தார்.

தி.மு.கவில் இணைந்த காமராஜ்
தி.மு.கவில் இணைந்த காமராஜ்
நா.ராஜமுருகன்

இது குறித்துப் பேசிய காமராஜ் ``கட்சியில் உண்மையாக உழைப்பவர்களுக்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மதிப்பளிப்பதில்லை. அவர்தான் அப்படி என்று நினைத்தால், முதலமைச்சரும் அப்படித்தான் இருக்கிறார். அதனால், உண்மையாக உழைப்பவர்களுக்கு தேவையான மரியாதையைத் தரும் கட்சியான தி.மு.க-வுக்கு சென்றிருக்கிறேன்" என்று நம்மிடம் தெரிவித்தார் காமராஜ்.

`இரண்டு வேட்பாளர்களுக்கு மீண்டும் வாய்ப்பு; ஒரு புதுமுகம்!’ - கரூர் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஸ்டேட்டஸ்

போக்குவரத்துத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு, காமராஜ் தனி செல்வாக்கோடு வளர்வதை விரும்பவில்லை என்று கட்சிக்குள் பேசப்பட்டது. காமராஜ் வகித்துவந்த ஜெ பேரவை மாவட்டச் செயலாளர் பதவியை, எடப்பாடி பழனிசாமியிடம் கூறிப் பறிக்க முயன்றதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ஓ.பி.எஸ் ஆதரவாளரான காமராஜ், அவர் மூலமாக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டார். அதனால் காமராஜுடன் நெருக்கமாக இருந்த கரூர் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் செந்தில்நாதனின் பதவியை, எம்.ஆர்.விஜயபாஸ்கர் பறிக்கவைத்தார். இதனால், அதிருப்தியடைந்த செந்தில்நாதன், சமீபத்தில் பா.ஜ.க-வில் இணைந்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

ஆனால், ஓ.பி.எஸ் மூலம் தனது பதவியை தக்க வைத்துக்கொண்ட காமராஜ், அவர் மூலமாக வரும் தேர்தலில் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் சீட் வாங்க தீவிரமாக காய்நகர்த்திவந்தார். அதற்கு ஆயத்தமாக, கடந்த ஒரு மாதமாகவே பணிகள் மேற்கொண்டுவந்தார்.

இந்தநிலையில்தான், காமராஜ் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவில்லை. இதனால் கோபமான அவர், தி.மு.கவுக்கு தாவும் மூடுக்கு வந்திருக்கிறார். 'காமராஜ் அதிருப்தியாக இருக்கிறார்' என்று தெரிந்த செந்தில் பாலாஜி, அவரை தி.மு.க-வுக்கு கூட்டிச் சென்று இணைத்திருக்கிறார் என்கிறார்கள், கரூர் மாவட்ட தி.மு.க-வினர். காமராஜ் போல் அ.தி.மு.கவில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது அதிருப்தியிலுள்ள அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளை தி.மு.க-வில் இணைக்கும் வேலையில் செந்தில் பாலாஜி ஈடுபட்டுவருவதாகவும் சொல்கிறார்கள். பதிலுக்கு, எம்.ஆர்.விஜயபாஸ்கரும் கரூர் மாவட்டத்தில் பரவலாக தி.மு.க-வினர்களை அ.தி.மு.க-வுக்கு இழுக்க முயன்றுவருகிறார் என்கின்றனர்.

காமராஜ்
காமராஜ்
நா.ராஜமுருகன்

தி.மு.க-வில் இணைந்தது குறித்துப் பேசிய காமராஜ் ``நான் கட்சிக்காக உண்மையாக உழைத்தவன். இது, கரூரிலுள்ள கடைக்கோடி அ.தி.மு.க தொண்டனுக்கும் தெரியும். உண்மையாக உழைத்த என்னை, கரூர் மாவட்டத் தலைமை மதிக்கவில்லை. இவர்தான் இப்படின்னா, கட்சித் தலைமையும் மதிக்கவில்லை. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் என அனைவருக்கும் என்னைப் பற்றித் தெரியும். என்னுடைய உழைப்பின் உண்மை பற்றிப் புரியும். ஆனால், அத்தனை உழைப்புக்கும் உதாசீனம்தான் பரிசு என்றால், அந்தக் கட்சியில் எப்படிக் காலம் தள்ள முடியும்? அதனால், உழைப்புக்கு உரிய மரியாதை தரும் தளபதியைத் தலைமையாகக்கொண்ட தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன். கரூர் மாவட்டத்தில் உழைக்கத் தயங்காதவர்களை மதிக்கும் பண்புள்ள செந்தில் பாலாஜி அண்ணன் தலைமையில், தி.மு.க-வில் இணைந்திருக்கிறேன்" என்றார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் கூறப்படுவதாவது,``காமராஜ், அமைச்சரைப் பற்றித் தவறான தகவல்களைப் பகிர்கிறார். தனக்கு மரியாதை தரவில்லை என்று பொய் சொல்கிறார். எம்.எல்.ஏ சீட்டுகளை அறிவித்தது கட்சித் தலைமை. அதற்கும் அண்ணனுக்கும் சம்பந்தமில்லை. எம்.எல்.ஏ சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடனே கட்சி மாறியதைப் பார்த்தால், அவர் எம்.எல்.ஏ சீட்டுக்காகத்தான் கட்சியில் இருந்தார் என்று தெரிகிறது.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்
எம்.ஆர்.விஜயபாஸ்கர்
நா.ராஜமுருகன்

கிருஷ்ணராயபுரத்தில் புதுமுகத்தை நிறுத்தினால், வெற்றி பிரகாசமாக இருக்கும் என்று நினைத்துத்தான், தானேஷுக்கு கட்சித் தலைமை சீட் கொடுத்திருக்கிறது. செந்தில் பாலாஜி, தேவையில்லாமல் அரசியல் செய்கிறார்" என்றார்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு