Published:Updated:

தூத்துக்குடி: சிக்கலிலிருந்து தப்பிக்க சிறப்பு பூஜை செய்தாரா வேலுமணி?!

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

வேலுமணி திருச்செந்தூரில் ரகசிய பூஜை, ஹோமம் நடத்திச் சென்றிருக்கிறார் என்று அதிமுக வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

அ.தி.மு.க-வின் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியின் வீடு, அலுவலகம் உட்பட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை முதல் மாலை வரை சோதனை நடத்தினர். ``ரூ.13,08,500 ரொக்கம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், தனியார் நிறுவனங்களுடனான பரிவர்த்தனை ஆவணங்கள், மாநகராட்சித் தொடர்புடைய அலுவல் தொடர்பான ஆவணங்கள், ஹார்டு டிஸ்க் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன’’ என சோதனையின் முடிவு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையம் வந்த வேலுமணி
விமான நிலையம் வந்த வேலுமணி

லஞ்ச ஒழிப்புத்துறையினரின் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்ட 17 பேரின் பெயர்களில் வேலுமணி முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டாவது நாளாக சில இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். இந்தநிலையில், சென்னையிலிருந்து இன்று காலை 7:35 மணிக்கு விமானம் மூலம் வேலுமணியும், அவரின் அண்ணன் மகன் விஜய்யும் தூத்துக்குடி வந்தனர்.

விமான நிலையத்தின் வாசலில் காத்திருந்த `TN 99 W 5577' என்ற வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரில் இருவரும் ஏறிச் சென்றனர். வேலுமணியின் வருகை குறித்து உள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுக்கு நேற்றிரவே தெரிந்திருந்தும், வேலுமணியின் உத்தரவால் அவரை வரவேற்க யாரும் விமான நிலையத்துக்கு வரவில்லை. போனில் மட்டும் தொடர்புகொண்டு பேசியதாகச் சொல்கிறார்கள். மீண்டும் மாலை 3:35 மணி விமானத்தில் கிளம்பி வேலுமணி சென்னைக்குச் செல்வதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், மதியம் 12 மணியிலிருந்தே தூத்துக்குடி விமான நிலையத்தின் முன்பு வேலுமணியின் வருகைக்காகப் பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.

வேலுமணி வந்த கார்
வேலுமணி வந்த கார்

மாலை 3:06 மணிக்கு வேலுமணியின் ஆதரவாளரான அ.தி.மு.க மாநில அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி ஆவினின் முன்னாள் சேர்மனுமான சின்னதுரையின் கார் விமான நிலையம் வந்தடைந்தது. அவரது காரில் வேலுமணி வந்திருப்பாரோ என மீடியாக்கள் கார் கதவை நோக்கி ஓட, சின்னதுரை மட்டும் காரிலிருந்து இறங்கினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3:25 மணிக்கு காலையில் வேலுமணியை அழைத்துச் சென்ற அதே கார் விமான நிலைய வளாகத்துக்குள் வந்தது. காரிலிருந்து முதலில் வேலுமணியும், இரண்டாவதாக அவரின் மகன் விஜய்யும் இறங்கி விமான நிலையத்துக்குள் நடந்து சென்றனர். அப்போது ரெய்டு குறித்தும், தூத்துக்குடி வருகை குறித்தும் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ``ரெய்டு குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் அறிக்கை அளித்துவிட்டனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இது தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்திருக்கிறார். கட்சியின் தலைமையிடம் பேசிவிட்டு இரண்டு நாள்களில் பத்திரிகையாளர்களைச் சந்திப்பேன்" என்றார். மேலும் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளிக்காமல் கைகூப்பியபடியே கிளம்பினார். இது குறித்து அ.தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். ``திருச்செந்தூர், சுப்பிரமணியசுவாமி கோயில்ல சத்ருசம்ஹார மூர்த்தி சந்நிதி இருக்கு.

நேற்று எம்.ஆர்.வி., எஸ்.பி.வி., நாளை சி.வி.பி-யா ?! - திமுக அரசின் அடுத்த மூவ்?!
விமான நிலையத்தில் வேலுமணி
விமான நிலையத்தில் வேலுமணி

இந்த மூர்த்தி எதிரிகளை வலுவிழக்கச் செய்து வெற்றியைத் தரக்கூடிய மூர்த்தி. காரிய வெற்றிக்கான மிகப்பெரிய பரிகாரத்தலம் இதுன்னு எல்லாருக்குமே தெரியும். உள்ளூர் கவுன்சிலர்ல இருந்து பல மாநில முதல்வர்கள், உயர் பதவி வகிக்கும் அதிகாரிகள் வரைக்கும் அவர்களுக்குச் சோதனை வர்ற நேரத்துல சத்ருசம்ஹார பூஜை, ஹோமத்தைச் செய்யுறது வழக்கம்.

இப்போ கோயிலுக்குள்ளேயும் வெளியேயும் இந்த பூஜை, ஹோமத்துக்கு அனுமதி இல்லைங்கிறதுனால கோயிலில் பூஜை செய்யற குருக்கள், தனி இடங்கள், மடங்கள்ல பூஜை செய்யறது வழக்கம். நேற்றே இந்த பூஜை, ஹோமத்தைச் செய்யணும்னு ரெண்டு நாளுக்கு முன்னாலேயே வேலுமணி அண்ணன் திருச்செந்தூர் கோயில்ல இருக்குற முக்கியமான ஒருத்தர்கிட்ட சொல்லியிருந்தார். ஆனா, ரெய்டு நடந்ததுனால பூஜைக்கான ஏற்பாடுகள் செஞ்சும் அவரால வர முடியலை. இந்த நிலையிலதான் இன்று பூஜை செய்யுறதுக்காக தூத்துக்குடிக்கு வந்தார்.

விமான நிலையத்துக்குள் காரில் வந்த வேலுமணி
விமான நிலையத்துக்குள் காரில் வந்த வேலுமணி

திருச்செந்தூர்ல இருக்குற ஒரு மடத்துல பூஜை, ஹோமம் நடந்துச்சு. ஒரு மணி நேரத்துக்கும் மேல நடந்த அந்த பூஜையை முடிச்சுட்டு, திருச்செந்தூர்ல இருக்குற பிரபல லாட்ஜின் முதலாளியோட வீட்டுல மதிய உணவை முடித்துவிட்டு திரும்பவும் சென்னைக்குக் கிளம்பிப் போயிட்டார். காலையில இறுக்கமா இருந்த அவரோட முகத்துல பூஜைக்குப் பிறகுதான் லேசான சிரிப்பு தெரிஞ்சுதாம். பரிகார பூஜை செஞ்சுருக்குறதுனால கொஞ்சம் தைரியம் வந்திருப்பதாகவும் சொல்றாங்க. அவர் வர்ற தகவல் ரெண்டு மூணு முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும்தான் தெரியும். அவர்களிடமும் போனில் மட்டும்தான் பேசினார்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு