Published:Updated:

சசிகலா ஆடியோ :``ஃபேஸ்புக் பதிவைப் பார்த்து சின்னம்மா போன் செய்தார்" - தச்சநல்லூர் சுந்தரராஜ்!

அ.தி.மு.க தலைமை அலுவலகம்
அ.தி.மு.க தலைமை அலுவலகம்

``அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இப்போதும் சசிகலாதான் நீடிக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு யாருக்கும், கட்சியிலிருந்து யாரையும் நீக்குவதற்கு அதிகாரம் கிடையாது!" என்று கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் அரசியலிலிருந்து ஒதுங்கியிருக்கப்போவதாக அறிவித்திருந்த சசிகலா, தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த பின்னர் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள தொண்டர்களுடன் தொலைபேசி வாயிலாக அவர் பேசிவருவதாகவும் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

சசிகலா
சசிகலா

அ.தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சசிகலா பேசுவது தொடர்பாக கிராமப்புறங்களிலுள்ள அ.தி.மு.க தொண்டர்கள்கூட விரிவாக விவாதிக்கத் தொடங்கிவிட்டனர். அதனால் சசிகலாவுடன் பேசுபவர்களைக் கட்சியைவிட்டு நீக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் சசிகலாவுக்கு எதிராக அ.தி.மு.க சார்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுவரும் நிலையில், சசிகலாவுடன் பேசியதற்காக இதுவரை 75-க்கும் அதிகமானோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அறிவிப்பு

சசிகலாவிடம் பேசியதாக நேற்று (24-ம் தேதி) அ.தி.மு.க தலைமையால் ஐந்து பேர் நீக்கப்பட்டனர். அவர்களில் இருவர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள். நெல்லை மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற முன்னாள் இணைச் செயலாளர் ராஜகோபால், தச்சநல்லூர் பகுதி மாணவரணி இணைச் செயலாளர் சுந்தரராஜ் ஆகியோரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தச்சநல்லூர் சுந்தரராஜ் கூறுகையில், ``அம்மாவின் மறைவுக்குப் பிறகு சின்னம்மா தலைமை ஏற்றால் மட்டுமே கட்சியைக் காப்பாற்ற முடியும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறேன். இதையே தொடர்ந்து முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுவருகிறேன்.

சுந்தரராஜ்
சுந்தரராஜ்

எனது பதிவுகள் சின்னம்மாவின் கவனத்துக்குச் சென்றதால், அவரே என்னை அழைத்துப் பேசினார். அவரிடம், ‘நீங்கதான் கட்சிக்குத் தலைமையேற்க வர வேண்டும்’ என்று வற்புறுத்தினேன். அவரும் உரிய நேரத்தில் வருவதாகச் சொன்னார். அவரிடம் பேசியது எனக்கு மகிழ்ச்சியாக இருந்துச்சு.

ஒன்றரைக் கோடி தொண்டர்களைக்கொண்ட அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக இப்போதும் சின்னம்மா சசிகலாதான் இருக்கிறார். அதனால்தான் யாரையும் பொதுச்செயலாளராக நியமிக்கவில்லை. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பதெல்லாம் இல்லாத பதவிகள்.

கட்சியின் பொதுச்செயலாளரான சசிகலாவைத் தவிர வேறு யாருக்கும் என்னைக் கட்சியைவிட்டு நீக்க உரிமையில்லை
சுந்தரராஜ், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்

என்னைக் கட்சியைவிட்டு நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு மட்டுமே இருக்கிறதே தவிர, வேறு யாருக்கும் கிடையாது. சசிகலா கொடுத்த ஆட்சியிலும் கட்சிப் பதவியிலும் இருந்து பலன் அடைந்தவர்கள், அவருடன் பேசியதற்காகக் கட்சியைவிட்டு என்னை நீக்கியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. என்னைக் கட்சியைவிட்டு நீக்கியதை எதிர்த்து நீதிமன்றத்துக்குச் செல்ல முடிவெடுத்துள்ளேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு