22 தங்கப் பெண்கள்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

“மராட்டிய மண்ணை ரஜினி ஆளட்டும்!”

காளியம்மாள்
பிரீமியம் ஸ்டோரி
News
காளியம்மாள்

அரசியல் பெண்கள்: ஆறு கேள்விகள்!

கொள்கை உறுதியுடன் கூடிய செயல்பாடு மற்றும் பேச்சாற்றல் மூலமாக வடசென்னை தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் கவனத்தைப் பெற்றவர் `நாம் தமிழர்' கட்சியின் காளியம்மாள். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவரை, வடசென்னையில் வேட்பாளராக நிறுத்தினார் சீமான். 60,515 வாக்குகளை அள்ளிய காளியம்மாள், தேர்தலுக்குப் பிறகு இயக்கப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். அவருடனான உரையாடலில்...

நாம் தமிழர் கட்சியில் உங்களைக் கவர்ந்த விஷயம் என்ன?

தமிழ் மண்ணின் பூர்வகுடி மக்கள், உரிமைகளற்றவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பூர்வகுடி சமூகம் குறித்து அண்ணன் சீமான் முன்வைத்த கருத்துகள் என்னை ஈர்த்தன. அதனால், நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் உங்கள் கட்சியின் வேட்பாளர்களில் பாதி பேர் பெண்கள். உங்கள் கட்சியில் முடிவெடுக்கும் இடத்தில் பெண்களுக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது?

உண்மையில் பெண்களுக்கு உரிய முக்கியத்துவமும் சமத்துவமும் அளிக்கிற கட்சியாக நாம் தமிழர் கட்சி உள்ளது. எங்கள் கட்சியில் மகளிர் பாசறை உள்ளது. கட்சியின் முக்கிய முடிவுகளை மகளிர் பாசறை நிர்வாகிகளும் சேர்ந்தே முடிவுகளை எடுக்கிறார்கள்.

`அன்பான சர்வாதிகாரம்' என்று உங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்கிறார். சர்வாதிகாரம் என்றால், அங்கு ஜனநாயகம் இருக்காதே?

வார்த்தையைப் பிடித்துக்கொள்ள வேண்டியதில்லை. ஹிட்லர் மாதிரி ஆட்சி நடத்துவது என்பது அதன் அர்த்தம் அல்ல. தவறு செய்யும் ஒரு குழந்தையிடம், அந்தத் தவற்றை மீண்டும் செய்யக் கூடாது என்பதற்காகப் பெற்றோர்கள் கண்டிப்பு காட்டுவார்களே... அதைத்தான் `அன்பான சர்வாதிகாரம்' என்று அண்ணன் சீமான் சொல்கிறார்.

தமிழர் என்கிற அடிப்படையில் நடிகர் விஜய்யை சீமான் ஆதரிக்கிறார். அந்த ஒரு விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஒருவரை ஆதரிப்பது சரியா?

அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் சொல்கிறார். மராட்டியரான ரஜினி, மராட்டிய மண்ணை ஆளட்டும். தமிழ் மண்ணை ஆள்வதற்கு அவருக்குத் தகுதி இல்லை. தமிழர் நிலத்தை, தமிழர் தான் ஆள வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். இந்தப் பிரச்னை எழும்போது, தமிழ் மண்ணின் பிள்ளை என்று நடிகர் விஜய்யை அண்ணன் சீமான் ஆதரிக்கிறார். அதேநேரம், திரையில் நடித்ததன் மூலம் கிடைத்த புகழ் மட்டுமே நாட்டை ஆள்வதற்கு முழுமையான தகுதி எனக் கொள்ள முடியாது. இந்த மண்ணைப் பற்றியும், இந்த மக்களின் நலன்கள் குறித்தும் அறிந்தவர்களாகவும் புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்... இந்த மக்கள் மீது நிகழ்த்தப்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவராகவும் போராடுபவராகவும் இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம்.

உங்கள் பொதுக் கூட்டங்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாக இருக்கிறதே?

நாங்கள், மற்ற கட்சிகளைப் போல பணம் கொடுத்து கூட்டத்தை அழைத்து வருவதில்லை. சொந்தப் பணத்தைச் செலவழித்து கூட்டங்களுக்கும் போராட்டங்களுக்கும் செல்கிறோம். ‘சூழ்நிலை காரணமாக எங்களால் வர முடியவில்லை’ என்று, வழிச்செலவுக்கு எங்களுக்குப் பணம் கொடுத்துவிடும் பெண்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அதோடு, லட்சக்கணக்கான பெண்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளார்கள்.

“மராட்டிய மண்ணை ரஜினி ஆளட்டும்!”

தேர்தலுக்குப் பிறகு என்ன மாதிரியான இயக்கப்பணிகளை ஆற்றிவருகிறீர்கள்?

ஒரு தொண்டு நிறுவனத்தில் பணியாற்றிய நான், தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த வேலையை ராஜினாமா செய்தேன். இப்போது, கட்சிப் பணிகளை ஆற்றிவருகிறேன். போராட்டங்களில் பங்கேற்கிறேன். பல மாவட்டங்களுக்கும் சென்று பொதுக்கூட்டங்களில் பேசுகிறேன். பேசி முடித்து மேடையிலிருந்து இறங்கியதும், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் வந்து, ‘நன்றாகப் பேசினீர்கள்... நீங்கள் பேசியது சரியான கருத்து..’ என்று சொல்வார்கள். அது எனக்கு நெகிழ்ச்சியான அனுபவம்!

படம்: பா.பிரசன்னா