Published:Updated:

விகடன் பிரஸ்மீட்: “வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா?”

Kamal Haasan
பிரீமியம் ஸ்டோரி
News
Kamal Haasan

விகடன் பிரஸ்மீட்டில் கமல்! #VikatanPressMeet: விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

சினிமாவில் ஒரு நீண்ட சுற்றை முடித்துவிட்டு அரசியலில் காலடி எடுத்துவைத்திருக்கிறார் அவர். ஆம், திரையுலகில் 60 ஆண்டுக்காலப் பயணம்! அடுத்த மாதம் 65வது வயதில் நுழையும் கமல்ஹாசனிடம் அரசியல், சினிமா, சமூகம், தனிப்பட்ட வாழ்க்கை என எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்; கேட்டோம்!

‘`கதாநாயகனாக உங்களுடைய முதல் நாள் ஷூட்டிங் அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்!”

- சனா

“ ‘உணர்ச்சிகள்’ படம். மிகவும் வித்தியாசமான ஒரு நாள். முதலில் இந்தப் படத்தின் கதாநாயகனாக நான் நடிப்பதாக இல்லை. வேறு யாரும் நடிக்காத ஒரு பாத்திரம், வேண்டாம் என மறுத்த பாத்திரம், அந்தக் கதாபாத்திரத்தை எழுதியதில் எனக்கும் பங்குண்டு என்பதால் என் தலையில் கட்டப்பட்ட படம். இந்தப் பொதியைச் சுமக்க இந்தக் கழுதைதான் சரி என இயக்குநர் சக்தி முடிவு செய்துவிட்டார். அன்றைய சூழலில், எங்களுக்கு இருந்த பணவசதியில் பெரிய அரங்குகளுக்கெல்லாம் போகமுடியாது. கேமராக்களை எல்லாம் வாடகைக்கு எடுத்துவிட்டு ஷூட்டிங்கிற்கு இடம்தேடிக் கிடைக்காமல், இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கியிருக்கும் அதே எல்டாம்ஸ் சாலையில் இருக்கும் கட்டடத்தில்தான் முதல் நாள் ஷூட்டிங் நடந்தது. ஸ்விட்ச் போட்டு ஷூட்டிங்கைத் தொடங்கிவைத்தவர் என் மிகப்பெரிய ரசிகையான என் அம்மா ராஜலட்சுமி அவர்கள். இவையெல்லாம் தானாக நடந்தன. மிகவும் சிறிய குரூப் ஒன்றுகூடிப் படம் எடுத்துக்கொண்டிருந்தோம். ‘இவங்க நிஜமாவே சினிமா எடுக்குறாங்களா, இல்லை, என்னைத் திருப்திப்படுத்த ஏதோ பண்றாங்களா, சினிமா எடுக்குறது இவ்ளோ சிம்பிளா’ என என் அம்மாவுக்கே சந்தேகம் வரும் அளவுக்கு அன்று ஷூட்டிங் நடந்தது.’’

“ ‘பாகுபலி’, ‘சைரா நரசிம்ம ரெட்டி’ என இப்போது வரலாற்றுப்படங்கள் வருகின்றன. ஆனால், இதற்கெல்லாம் வித்திட்டவர் நீங்கள். ‘மருதநாயகம்’ படத்தை நாங்கள் திரையில் பார்க்க வாய்ப்பிருக்கிறதா?”

- நித்திஷ்

“திரையில் பார்க்கலாம். ஆனால், என்னை அதில் பார்க்கமுடியுமா என்பதுதான் சந்தேகம். ஏனென்றால் நான் உங்களோடு இருக்க ஆசைப்படுகிறேன். இனி நான் கண்டுவைத்திருந்த கனவுகளையெல்லாம் நல்ல நடிகர்களை வைத்து நிறைவேற்றும் கம்பெனியாக ராஜ்கமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டேயிருக்கும். இப்போதைய சூழலில் என் அரசியல் பயணத்துக்கு இடைஞ்சல் இல்லாமல் எத்தனை கமிட்மென்ட்டுகளை ஏற்கமுடியுமோ அவ்வளவுதான் என்னால் முடியும். இப்போது மக்களுடனான என் பயணம்தான் என் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம் என நினைக்கிறேன்.’’

“ ‘தேவர் மகன்’, ‘சபாஷ் நாயுடு’ என சாதிப்பெயர் கொண்ட டைட்டில்கள் குறித்து உங்களிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, ‘நோயின் பெயர் சொல்லித்தான் மருந்து கண்டுபிடிக்க முடியும். சாதிப்பெயர் சொல்லித்தான் சாதி ஒழிக்க முடியும்’ என்றீர்கள். இந்தியாவிலேயே தமிழகத்துக்கு உள்ள தனிச்சிறப்பு, பெயருக்குப்பின்னால் இருந்த சாதிப்பெயரை ஒழித்தது. பொதுவெளியில் சாதிப்பெயர் இல்லாத தமிழகத்தில், சாதிப்பெயர் சொல்லி சாதி ஒழிக்கப்போகிறேன் என்பது விநோதம் இல்லையா? அதுதான் யதார்த்தம் என்று வைத்துக்கொண்டாலும், ஆதிக்கச்சாதிகள் மட்டும்தானே பெருமையாக நினைத்து சாதிப்பெயர் போடுகிறார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவு எனக்கருதி சாதிப்பெயர் போடுவதில்லையே? ‘தேவர் மகனை’ப்போல, ஒடுக்கப்பட்ட சாதிகளின் பெயர்களைத் தாங்கிய படங்கள் வரவில்லையே?‘வன்முறைக்கு எதிரான படம்’ என்று சொல்லப்படும் ‘தேவர் மகன்’ படப்பாடலே சாதிய மோதல்களுக்கும் வன்முறைக்கும் வித்திட்டதே?”

- சுகுணா திவாகர்.

“அந்த விபத்துக்கு நானும், இளையராஜாவும், இப்போது இல்லையென்றாலும், வாலி அவர்களின் சார்பிலும் மன்னிப்பு கேட்கிறோம். ஆனால், அந்தப் பாடலை உருவாக்கியபோது எங்கள் மனதில் அதுபோன்ற எந்த எண்ணமும் இல்லை. எதையும் நினைக்காமல் செய்துவிட்டோம். வியாபார யுக்தியோ, ஒரு இனத்தை வாழ்த்திப்பாட வேண்டும் என்பதோ எங்கள் நோக்கமாக அப்போது இல்லை. ஒரு ஹீரோவை, கதையின் நாயகனை வாழ்த்திப்பாடுவதற்காக இயற்றப்பட்ட பாடல்தான் அது.

VikatanPressMeet
VikatanPressMeet

இப்போது மறுபடியும் ‘தேவர் மகன்’ எடுத்தால்கூட அதற்கு ‘தேவர் மகன்’ எனப் பெயர்வைக்க மாட்டேன். ஆனால், அந்தக் காலத்தில் அது தேவைப்பட்டது. மது ஒழிப்பைப் பற்றி ஒரு படம் எடுக்கும்போது அதன் கதாநாயகன் குடிகாரனாக இருப்பது மிக அத்தியாவசியம். குடியிலிருந்து மீள்வதற்கு அவனைக் குடிகாரனாகக் காட்டித்தான் ஆகவேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் இருப்பவர்கள் வெகுவாகத் தங்கள் சாதிப் பெயரைச் சொல்லிக்கொள்வார்கள். எல்லா சாதிப்பெயரையும் சொல்லிக்கொள்வார்கள். அங்கே செட்டியார் வந்திருக்கிறார், முதலியார் வந்திருக்கிறார் என்றுதான் அறிமுகப்படுத்துவார்கள். ஆனால், அங்கே அதற்கு வேறெந்தப் படிநிலைகளும் இல்லை. ஜெர்மனியில் ஷூமேக்கர் என்பது தொழிற்பெயர்தான். செருப்பு தைப்பவர் ஷூமேக்கர். அங்கே அது அவமானமாக இல்லை. ஆனால், இங்கே அது அவமானமாக வந்துசேர்ந்துவிட்டது. இது மெதுவாக மாறும். அந்த மாற்றுத்துக்கான கருவிகளாக நாங்களும் நிச்சயம் இருப்போம்.’’

“ ‘கமல், ரஜினி அரசியல் வேண்டாம் ப்ளீஸ்’ என்று உங்கள் நண்பர் சிரஞ்சீவி ஆனந்த விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார். உங்கள் பதில் என்ன?’’

- கே.ஜி.மணிகண்டன்

“எனக்கு நெருங்கிய நண்பர் அவர். ஆனால், அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவமாக இருக்கவேண்டிய அவசியமில்லை. நான் மிகவும் மதிக்கும் நாகேஷ் அவர்கள் ஒருமுறை ‘ஏன் புரொடெக்‌ஷன் கம்பெனி ஆரம்பிக்கிற... நான் ஆரம்பிச்சேனா பார்?’ என என்னிடம் கேட்டிருக்கிறார். அது அவருடைய அனுபவம். ‘இந்தக் கம்பெனி நான் ஆரம்பிச்சிருக்கேன். அதுல நீங்க நடிக்கிறீங்க... இப்ப எப்படி இருக்கு?’ என என் படத்தில் அவர் நடித்தபோது அவரிடமே நான் கேட்டிருக்கிறேன். எல்லா அறிவுரைகளையும் கேட்டுக்கொள்ளலாமே தவிர அதன்படி நடக்கவேண்டிய அவசியம் இல்லை.’’

Kamal Haasan
Kamal Haasan

“வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்துப் போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா?’’

- ஆ.பழனியப்பன்

“வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இந்த முடிவு கொள்கை சம்பந்தமானது. தமிழகத்துக்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. மிக ஜாக்கிரதையாகக் கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி பற்றி விரோத மனப்பான்மை கிடையாது. ஆனால், நேர்மைக்கு விரோதமான எவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு.’’

“காதல் மன்னன், உலக நாயகன், நம்மவர், உங்கள் நான்... எது உங்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது?’’

- ஜெனி ஃப்ரீடா

“ ‘உங்கள் நான்’தான் என உங்களுக்கே தெரிந்திருக்குமே. ஏனென்றால், அதுவாகவே நான் மாறியிருக்கிறேன். நீங்கள் கொடுத்த டைட்டில் எல்லாம் எனக்குத் தகுதியில்லையோ என்னவோ எனக்கு ஒட்டவில்லை. எனக்கு ஒட்டிப்பிடித்த ஒரு விஷயம் இதுதான். அதனால் அதைக் கட்டிப்பிடித்துக்கொண்டேன்.’’

“அமித் ஷா தொடர்ந்து இந்தித் திணிப்பை முன்னெடுத்துப் பேசிவருகிறார். மோடி எங்கு சென்றாலும் புறநானூறு சொல்வது, குறள் சொல்வது எனத் தமிழை முன்னிலைப்படுத்துகிறார். இதை ஒரு யுக்தியாக அவர்கள் செய்வதாக நீங்கள் நினைக்கிறீர்களா?’’

- வெய்யில்

“நாகாலாந்துக்குப் போகும்போது கொம்பு வைத்த தொப்பி போட்டுக்கொண்டு நடனம் ஆடுவார்கள். அம்பு விடும் கூட்டத்துக்குப் போய் அம்புவிட்டுவிட்டு அதன்பிறகு அதைத் தொடவே மாட்டார்கள். இதெல்லாம் காலம்காலமாக அரசியல்வாதிகள் செய்வது. இதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள். எல்லோருக்கும் ‘அட, இவருக்கு வேட்டி கட்டத் தெரியுமா?’ அப்படிங்கிற ஆச்சர்யம் மட்டுமே முதலில் நிற்கும். வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா? அதற்கு அவர் செய்யவேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும்.

கமல்
கமல்

இந்தியைப் பொறுத்தவரை நமக்கு வெறுப்பு கிடையாது. எந்த மொழிமேலும் வெறுப்பு கிடையாது. இதை வட இந்தியாவில் வசிப்பவர்கள் சரியாகப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். மற்ற மொழிகள்மீது வெறுப்பிருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோஷமாக வங்கமொழியில் நாம் தேசிய கீதம் பாடுவோமா?”

“பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, தென்னிந்தியாவில் இருந்து எழுந்த எதிர்ப்புக் குரல்களில் உங்களுடைய குரல் முக்கியமானது. விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது. உங்கள் கருத்து என்ன?’’

- ஐஷ்வர்யா

“தீர்ப்பின் குரல் எதுவாகவும் இருக்கலாம். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது ஒலித்தேனே, என்னுடைய குரல் அதுவாகவேதான் இருக்கும். நாங்கள் நியாயத்தின் குரல். அது நீதியின் குரல்.’’

‘` `தலைவன் இருக்கிறான்’ என்ன களம்? ஒரு எக்ஸ்குளூசிவ் தகவல் சொல்லுங்களேன்...’’

- கே.ஜி.மணிகண்டன்

‘`என் வயதுக்கேற்ற களம். என்னுடைய சமீபத்திய சூழலுக்கு ஏற்ற படம். எனக்குத் தேவையான படம். நமக்குத் தேவையான படம். ஆனால், படம் பற்றி இப்போதே சொல்வது சரியாக இருக்காது. நீளமான திரியைக் கொண்டு பட்டாசைக் கொளுத்தக்கூடாது என்று சொல்லுவார்கள். ஏனென்றால், வெடிக்கும் நேரம் யாரும் இருக்கமாட்டார்கள். அதனால் நேரம் வரும்போது நானே சொல்கிறேன்.’’

- தொடரும்

இவர்களைப் பற்றி கமல்!
இவர்களைப் பற்றி கமல்!

அடுத்த வாரம்...

  • ‘`கமல் - ரஜினி, விஜய்-அஜித், இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான் என இணையவெளியில் நடந்துவரும் ஒப்பீட்டுச் சண்டையை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

  • ‘`தொடர்ச்சியாகப் பல மேக்கப்புகள் போட்டதால் உங்கள் உடலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா, குள்ளம், உயரம், குண்டு என்று உடலை ரப்பராக வளைத்திருக்கிறீர்களே, உங்கள் உடல் உங்களிடம் என்ன சொல்லும்?’’

  • ‘` ‘கமலுக்குக் கட்சி நடத்த எங்கிருந்து பணம் வருகிறது?’ - இந்தக் கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டு வருகிறது. விரிவான ஒரு விளக்கம் கிடைக்குமா?’’