Published:Updated:

ஜெயலலிதாவுக்கு அடுத்து எடப்பாடியா? சர்ச்சையாகும் செங்கோல் வீடியோ!

Jayalalithaa - MGR
Jayalalithaa - MGR

செங்கோலை ஜெயலலிதாவிடமிருந்து பெறும்போது, எம்.ஜி.ஆர் சுற்றுமுற்றும் பார்த்து, அருகில் நின்ற மற்றொரு அ.தி.மு.க தொண்டரையும் அழைத்து, செங்கோலை சேர்த்துப் பிடிக்கச்சொல்லும் காட்சி மாநாட்டு மேடையில் நடந்தது.

1986-ம் ஆண்டு ஜூலை மாதம் 12-ம் தேதி, மதுரை தமுக்கம் மைதானம். மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் டி.எம்.சௌந்தரராஜன்-சுசிலாவின் குரல்களில் இசை மழையில் நனைந்துகொண்டிருந்தது அந்த மேடை. அன்றைய தமிழகத்தின் முதல்வரும் தமிழ்த் திரையுலகின் மன்னனாகவும் விளங்கிய எம்.ஜி.ஆரின் ரசிகர் மன்றங்கள் ஒருங்கிணைந்து நடத்திய மாநாட்டு மேடை அது.

Jayalalithaa, MGR
Jayalalithaa, MGR

மதுரையில் நடைபெற்ற அந்த மாநாட்டுக்கும் தமிழக அரசியல் களத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எம்.ஜி.ஆரால் 1984-ம் ஆண்டு, அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினராக ஜெயலலிதா அறிவிக்கப்பட்டது முதல், ஜெ-வுக்கு எதிராகப் பலர் அ.திமு.க-வில் அணி சேர்ந்தனர். அது, எம்.ஜி.ஆருக்கும் தெரிந்திருந்தது. அ.தி.மு.க-வின் அடுத்த வாரிசு ஜெயலலிதாதான் என்று அவரது ஆதரவாளர்கள் ஒருபுறம் சொல்லிவந்த நிலையில், அந்த வார்த்தைக்கு எம்.ஜி.ஆரால் அர்த்தம் கற்பிக்கப்பட்டது அந்த மதுரை மாநாட்டில்தான்.

அவ்வளவு ஏன்? இன்றுவரை பெரும்பாலான அ.தி.மு.க கூட்டங்களில் தவறாமல் இடம்பெறும் ஒரு புகைப்படம் ஜெயலலிதா-எம்.ஜி.ஆர் இருவரும் ஒரு செங்கோலைக் கையில் பிடித்திருக்கும் புகைப்படம். அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டது அந்த மாநாட்டில்தான். ஆறடி உயரமுள்ள செங்கோலைத் தயார்செய்து, அந்த மாநாட்டில் ஜெயலலிதா கைகளினால் வழங்க வைத்தார்கள். ஆனால், செங்கோலைப் பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், அதை திருப்பி ஜெயலலிதாவிடமே வழங்கினார். இப்போது இந்த வீடியோ தமிழகம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்களால் பரப்பப்பட்டுவருகிறது. ஆனால், அந்த வீடியோவுக்கு புதிய கதையும் சேர்த்தே பரப்பப்படுகிறது.

Jayalalithaa, Edappadi
Jayalalithaa, Edappadi

செங்கோலை ஜெயலலிதாவிடமிருந்து பெறும்போது, எம்.ஜி.ஆர் சுற்றுமுற்றும் பார்த்து, அருகில் நின்ற மற்றொரு அ.தி.மு.க தொண்டரையும் அழைத்து, செங்கோலை சேர்த்துப்பிடிக்கச் செய்தது, அந்த மாநாட்டு மேடையில் நடந்தது. அது, வீடியோவிலும் பதிவாகியிருந்தது. “ஜெயலலிதாவுடன் செங்கோலை சேர்த்துப்பிடித்த அந்த நபர் வேறு யாருமல்ல, இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடிதான். எம்.ஜி.ஆரின் தீர்க்க தரிசனத்தைப் பாருங்கள். தனக்குப் பிறகு அ.தி.மு.க-வை வழிநடத்தப்போகும் இருவரையும் ஒரேமேடையில் அடையாளம் காட்டிவிட்டார்” என்று அனல்பறக்க இந்த வீடியோவைத் தமிழகம் முழுவதும் பரப்பிவருகிறது அ.தி.மு.க ஐ.டி விங்.

அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கும் நபரின் முகம் சரியாகத் தெரியாதநிலையில், அதை எப்படி எடப்பாடி என்று சொல்கிறார்கள் என்கிற சந்தேகம் பலரிடம் எழுந்துள்ளது. உண்மையில், எடப்பாடி அந்த மாநாட்டில் கலந்துகொண்டு செங்கோலைப் பெற்றாரா... என்று அந்த நிகழ்ச்சி நடந்தபோது அந்த மேடையிலிருந்த அன்றைய அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமியிடம் கேட்டோம். சிரித்துக் கொண்டே நம்மிடம் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்.

“எடப்பாடி பழனிசாமிக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன சம்பந்தம்? இந்த மாநாடு நடந்தது 1986-ல். எடப்பாடி அ.தி.மு.க கட்சிக்குள் வந்தது 1988-ம் ஆண்டு. சேலம் கண்ணன் என்பவர் நடத்திவந்த ஜெயலலிதா பேரவையில் எடப்பாடி பகுதியில் பொறுப்பாளராக இருந்து, அதற்குப் பிறகு அ.தி.மு.க-வுக்குள் வந்தவர். இந்த நிகழ்ச்சி நடந்த காலத்தில், அன்றைய அ.தி.மு.க-வின் தென்மாவட்டத்தின் முக்கியத் தூணாக விளங்கிய கே.கே.எஸ்.எஸ்.ஆர், முத்துசாமி, நாவலர் உள்ளிட்டவர்களோடு நானும் மேடையில் இருந்தேன்.

K C Palanisamy
K C Palanisamy

எம்.ஜி.ஆரின் பாணி என்னவென்றால், ஒரு கட்டடத்தைத் திறந்து வைப்பதாக இருந்தால்கூட, அந்தக் கட்டடத்தைக் கட்டிய கொத்தனாரை வைத்துத் திறக்கச் சொல்லுவார். அதுபோல் அன்று அந்த செங்கோலைக் கொடுக்கும்போது, தொண்டர் கையிலும் அந்தச் செங்கோல் இருக்க வேண்டும் என்று அன்றைக்கு மதுரை பகுதியைச் சேர்ந்த சாதாரண ஓரு தொண்டரை அழைத்தார். அதை நான் நேரில் பார்த்தவன். அந்த நிகழ்ச்சிக்கும் எடப்பாடிக்கும் முடிச்சுப்போட்டு இட்டுக்கட்டாதீர்கள்” என்றார்.

எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் இதுகுறித்துக் கேட்டால், “யார் செய்த வேலை என்று தெரியவில்லை. உண்மையில் இது முதல்வருக்குத் தெரியாது. தெரிந்தால் இப்படி ஒரு தவறான தகவல் பரவுவதை அவர் விரும்ப மாட்டார்” என்கிறார்கள்.

` வெளிநாட்டுப் பயணத்தில் என்ன நடந்தது?' - புள்ளிவிவரங்களை அடுக்கிய எடப்பாடி பழனிசாமி
அடுத்த கட்டுரைக்கு