Published:Updated:

போலி கொரோனா தடுப்பூசிச் சான்றிதழ்: கணக்கில் சேர்க்கிறதா அரசு?

ஒமைக்ரான் கொரோனா வைரஸ்
News
ஒமைக்ரான் கொரோனா வைரஸ்

500 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை கொடுத்தால், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமலேயே, போலிச் சான்றிதழ்கள் கொடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், அவற்றைக்கூட அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பதுதான் கேள்வி!

2020 மார்ச் மாதம் இந்தியாவில் தீவிரமாகப் பரவத் தொடங்கியது கொரோனா தொற்று. நவம்பர் வரை நீடித்து, அதன் பிறகு கொஞ்சம் இடைவெளி கொடுத்தது. நான்கே மாதங்களில் மீண்டும் இந்த ஆண்டு மார்ச் மாதம் இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. அக்டோபர் மாதத்திலிருந்து தற்போது வரை தொற்றின் வேகம் குறைந்துவருகிறது. எனினும், அதற்குள்ளாக ஒமைக்ரான் என்ற உருமாறிய கொரோனா தொற்று பரவத் தொடங்கிவிட்டது. கொரோனா இருக்கிறதோ, இல்லையோ அதற்கான தீர்வாக உலகமே ஏற்றுக்கொண்ட, தடுப்பூசி செலுத்துவது மட்டும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

தடுப்பூசி
தடுப்பூசி

குறிப்பாக, தமிழகத்தில் தடுப்பூசி முகாம்களை பொதுமக்கள் கூடும் இடங்களில் நடத்தி, அங்கேயே பொதுமக்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்துவருகிறது மருத்துவத்துறை. கொரோனாவையும் தடுப்பூசியையும் நம்பாத சிலர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதாக போலியாக சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்ற தகவல் பரவியது. எப்படிப் போலிச் சான்றிதழ்களைப் பெறுகிறார்கள் என்று அது தொடர்பான வட்டாரத்தில் பேசியபோது, ``கொரோனா தடுப்பூசி மீதெல்லாம் ஈடுபாடில்லாதவர்கள் போலிச் சான்றிதழ்களை நாடுகிறார்கள். ஆனால் இப்போது பொதுவெளியிலும், வெளியூர் செல்வதற்கும், ஏன் சென்னையிலுள்ள பிரபலமான மால்களுக்குச் சென்றால்கூட கொரோனா சான்றிதழைக் காண்பித்தால்தான் அனுமதிக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதற்காக, எங்கு போலியாகச் சான்றிதழ் கொடுக்கிறார்கள் என்று தேடுகிறார்கள் சிலர். ஆதார் எண்ணை மட்டும் கொடுத்தால் போதும், மத்திய அரசின் கோவின் இணையதளத்தில் வெளிவரும் சான்றிதழ்போலவே பிரதமர் மோடி படத்துடன், பேட்ச் எண்ணுடன் அசலே தோற்றுப்போகும் அளவுக்கான போலிச் சான்றிதழ் கிடைக்கிறதாம். இதற்கான செலவு 1,500 ரூபாய்தானாம்” என்கிறார்கள்

போலி சான்றிதழ்
போலி சான்றிதழ்

போலி கொரோனா சான்றிதழ் குறித்து மருத்துவத்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, ``வெளிநாடு செல்பவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் அவசியமாகிறது. ஆனால், ஊசிக்குப் பயந்து குறுக்குவழியில் ஊசிபோட்டுக்கொண்டதுபோல போலிச் சான்றிதழைப் பலர் பெற்றுவருகிறார்கள். வெளிநாடுகளுக்கு வேலை நிமித்தமாகச் செல்பவர்கள் மட்டுமின்றி, ‘குருவி’யாகச் சென்று வருபவர்களும் போலி கொரோனா சான்றிதழைப் பெறுகிறார்கள். கண்ணில் பார்ப்பதற்கு அச்சு அசலாக ஒரிஜினல் போன்றே தெரிவது மட்டுமின்றி, கோவின் இணையதளத்துச் சென்று மொபைல் எண்ணை டைப் செய்து, ஓ.டி.பி எண்ணை டைப் செய்தால்கூட போலிச் சான்றிதழ் இணையத்தில் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சமீபத்தில்கூட சென்னை மண்ணடியில் 500 ரூபாய்க்கு போலி கொரோனா சான்றிதழ் கொடுப்பதாக ஒருவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். நாடு முழுவதுமே இதுச்போன்று நடந்துகொண்டுதான் இருக்கிறது. எல்லாமே பக்காவாக இருப்பதால், தடுப்பூசிக் கணக்கில் சில நேரங்களில் போலிகூட சேர்ந்துகொள்கிறது. போலி மட்டுமின்றி, அச்சுப் பிழைபோல ஒரு டோஸ் போட்ட சிலருக்கு, இரண்டாவது டோஸ் போட்டதுபோல சான்றிதழ் வெளியாகிறது. எனினும், பொதுமக்கள் உஷாராக இருக்கிறார்கள் என்றே நம்புகிறோம். தமிழ்நாட்டில் இத்தனை கோடிப் பேரில் சில நூறு பேர்தான் போலிச் சான்றிதழை பெறுகிறார்கள்” என்றனர்.

மா.சு
மா.சு

இது பற்றி மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டபோது, “இதுவரை ஏழரை கோடிப் பேர் கொரோனா தடுப்பூசி போட்டிருக்கிறார்கள். ஒன்றிரண்டு தவறுகள் நடப்பதை நாம் பெரிதாக்கக் கூடாது. சிலருக்கு தொழில்நுட்ப சிக்கல்கள் வருகின்றன, அதுவும் தப்புதான். இதற்காக மாவட்டத்துக்கு ஓர் அதிகாரியை நியமித்திருக்கிறோம். ஒரு டோஸ் போட்டவர்களுக்கு இரண்டு டோஸ் போடப்பட்டதாகத் தகவல் வருகிறது என்றால், அதுபற்றி துறையில் புகாரளித்தால், அந்த மாவட்ட அதிகாரி ஆய்வு மேற்கொண்டு தீர்வு காண்பார்.

உங்களுக்குத் தெரிந்து எங்கேயாவது போலியாகச் சான்றிதழ் கொடுத்தால் உடனடியாகத் தெரிவியுங்கள், அடுத்த சில மணி நேரத்தில் அவரைச் சிறையில் அடைக்கிறோம். வெறும் செய்தியாக வெளியிடுகிறார்களே தவிர, ஆதாரங்கள் இருப்பதுபோலத் தெரியவில்லை. இல்லை என்றும் நான் வாதிடவில்லை. தொழில்நுட்பச் சிக்கல்கள் இருப்பதும் உண்மைதான். முடிந்தவரை எல்லாவற்றையும் சரிசெய்கிறோம். கொரோனாவுக்குத் தடுப்பூசி ஒன்றுதான் பாதுகாப்பு என்பதால், காலில் விழாத குறையாகப் போடவைத்திருக்கிறோம். இந்த நேரத்தில் போலிச் சான்றிதழ் என்றெல்லாம் பீதியைக் கிளப்பினால் தடுப்பூசி போடாதவர்கள் அச்சம்கொள்வார்கள்” என்றார்.