Published:Updated:

ஐபேக் vs நாம் தமிழர்... ட்ரோல் புயலில் கலங்கும் கட்சிகள்!

ஐபேக் பிரசாந்த் கிஷோர் - நாம் தமிழர் சீமான்
ஐபேக் பிரசாந்த் கிஷோர் - நாம் தமிழர் சீமான்

இந்தியா - சீனா மோதலைவிட சமூக வலைதளங்களில் நடைபெறும் ஐபேக், நாம் தமிழர் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது.

சமூக வலைதளங்களில் தி.மு.க. ஐ.டி விங் பலம் பொருந்தியது. ஒரு ஹேஷ்டேக்கை கணநேரத்தில் ட்ரெண்ட் செய்யவும் முடியும், எதிர்ப்பாளர்களின் கணக்குகளை ரிப்போர்ட் அடித்து நீக்கவும் முடியும். அ.தி.மு.க., பா.ம.க. கட்சிகளுக்கு ஆதரவு வட்டம் இருந்தாலும், தி.மு.க ஐ.டி விங்கின் தொழில்நுட்பக் கட்டமைப்பை அவர்கள் இன்னும் நெருங்கவில்லை. இந்த நிலையில்தான், தி.மு.க-வுக்கு தேர்தல் பணியாற்றுவதற்காக பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம் களமிறங்கியது. சமூக வலைதளங்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை கேலிச் சித்திரமாக காட்டப்படுவதைத் தடுக்கும் பொறுப்பையும் ஐபேக்கிடமே தி.மு.க தலைமை அளித்தது. இதை தி.மு.க ஐ.டி விங் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘நாங்கள் இருக்கும்போது சமூக வலைதள மேலாண்மை பொறுப்பை ஏன் ஐபேக்கிடம் அளித்தீர்கள்?’ என வெளிப்படையாகவே கொதித்தெழுந்தனர்.

ஐபேக் பிரசாந்த் கிஷோர்
ஐபேக் பிரசாந்த் கிஷோர்

ஐபேக்கிற்கு போட்டியாக தி.மு.க ஐ.டி விங்கைச் சேர்ந்தவர்களே தனி ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்த கூத்தெல்லாம் நடந்தது. கட்சித் தலைமையின் கோபப் பார்வை வீசியதால் அடக்கி வாசிக்கின்றனர். இந்நிலையில், நாம் தமிழர் - ஐபேக் இடையே ட்விட்டரில் புதிய மோதல் உருவாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷயம் இதுதான்...

`அபராதம் எல்லாம் கட்ட முடியாது!' -பெண் ஆய்வாளரை அவதூறாகப் பேசிய தி.மு.க ஒ.செ?

கடந்த மாதம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெயரில் ட்விட்டரில் போலிக் கணக்கு ஒன்று உருவாக்கப்பட்டது. சீமானின் அதிகாரபூர்வ கணக்கில் பயன்படுத்தப்படும் அதே படம், பயோ என காப்பியடித்து உண்மையான ஐ.டி-யைப் போலவே இந்த போலி ஐ.டி-யை உருவாக்கியுள்ளனர். தொடக்கத்தில் சீமானின் கொள்கைகள், விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடனான அவரது உறவு குறித்து கிண்டலடித்துப் பதிவிட்டவர்கள், திடீரென ரூட் மாறி கீழ்த்தரமான விமர்சனங்களைச் செய்ய ஆரம்பித்தனர்.

சீமான்
சீமான்

சீமானுக்கும் நடிகை விஜயலட்சுமிக்கும் இடையேயான பிரச்னையை மையப்படுத்தி பதிவுகளும் செய்யப்பட்டன. இதை நாம் தமிழர் கட்சியினர் கண்டித்து ரிப்போர்ட் அடித்துப் பார்த்தும், சம்பந்தப்பட்ட ஐ.டி நீக்கப்படவில்லை. சீமானின் புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தவே ஐபேக் சார்பில் இந்தப் போலி கணக்கு உருவாக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் சீனியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்போது, நாம் தமிழர் கட்சியினரும் பதிலுக்கு இறங்கி அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

ஸ்டாலின், உதயநிதி, தி.க.தலைவர் ஆசிரியர் வீரமணி, திருமாவளவன், சுப.வீரபாண்டியன், தர்மபுரி தி.மு.க எம்.பி. செந்தில், வைகோ, மு.க.அழகிரி, பிரசாந்த் கிஷோர் பெயர்களில் திடீரென போலி ஐ.டி.கள் உருவாகி ட்விட்டரையே கதிலங்க வைக்கிறது. அறிவாலயத்தின் பெயர்களில்கூட போலி அக்கவுண்ட் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலரால் தொடங்கப்பட்டுள்ள இந்த போலி ஐ.டி.க்கள், சீமானின் போலி ஐ.டி-க்கு பதிலடியாக உருவாக்கப்பட்டுள்ளன. தங்கள் பதிவுகளில் தி.மு.க-வின் கொள்கைகள், கூட்டணி விவகாரங்களைக் கிழித்தெடுக்கிறார்கள்.

அறிவாலயம்
அறிவாலயம்

இவர்கள் இருவருக்கும் இடையேயான மோதலை ரசிக்கவே ஒரு கூட்டம் ட்விட்டரில் தவமிருக்கிறது. அவ்வப்போது பதிவுகள் எல்லை மீறியும் போகின்றன. எது உண்மையான அக்கவுண்ட், எது போலி என்பது பலருக்கும் புரிவதில்லை. இந்த போலி அக்கவுண்ட்களை உண்மையென நம்பி, தி.மு.க உடன்பிறப்புகளே ரீ ட்வீட் செய்வது தான் வேடிக்கை.

2021 சட்டமன்றத் தேர்தல்... ஊடக வழி பிரசாரங்கள்... எந்தக் கட்சிக்கு சாதகம்? #2021TNElection

ஐபேக் தரப்பில் பேசினோம். “ஒரு தலைவர் பெயரில் போலி கணக்கு உருவாக்குவது எங்கள் வேலையல்ல. நாம் தமிழர் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஒருவர்தான், சீமானின் பெயரில் போலி கணக்கு தொடங்கியுள்ளார். இதனை சீமானின் போலி கணக்கு விபரத்திலேயே குறிப்பிட்டுள்ளார். தி.மு.க-வின் கொள்கைகள், வாக்குறுதிகள், தலைவர்களின் செயல்திட்டங்களை சமூக வலைதளங்கள் மூலமாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம். இந்த குழாயடி சண்டைக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்றனர்.

இடும்பாவனம் கார்த்திக்
இடும்பாவனம் கார்த்திக்

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக்கிடம் பேச, ''இந்த போலிக் கணக்குகளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. காமாலைக் காரனுக்கு எதைப் பார்த்தாலும் மஞ்சளாகத் தெரிவது போல, தி.மு.க-வை யார் விமர்சித்தாலும் எங்களின் மீதுதான் பழியைப் போடுகின்றனர். இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது'' என அடியோடு மறுக்கிறார் அவர்.

எப்பேர்ப்பட்ட தலைவரின் பராசுர பேச்சுகளையும் ஒரேயொரு கேலி மீம் காலி செய்துவிடும். அதைத்தான் இன்றைய போலி அக்கவுண்ட்கள் செய்கின்றன. போலி அக்கவுண்ட்களில் செய்யப்படும் பதிவுகள், தலைவர்களின் உண்மையான பதிவுகளாக பார்ப்பவர்களைத் திசைதிருப்பும். இதைச் சரி செய்வதற்குள் நிலைமை கைமீறி போயிருக்கும். ஏற்கெனவே சமூக வலைதளங்களில் நிலவும் தி.மு.க-வுக்கு எதிரான இந்து எதிர்ப்பு அலையை சமாளிக்க முடியாமல் அக்கட்சியின் ஐ.டி விங்கே திணறுகிறது. இப்போது தேவையில்லாத பிரச்னையை ஐபேக் உருவாக்கிவிட்டதாக தி.மு.க-வினரே புலம்புகிறார்கள். கிளி பிடிக்க போய் அது குரங்காக மாறியிருக்கிறது. இந்நிலையில், தி.மு.க தலைவர்கள் பெயரில் போலி கணக்குகள் உருவாக்கப்பட்டது குறித்து போலீஸில் புகாரளிக்கவும் தி.மு.க -வினர் தயாராகிவருகின்றனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மாறாமல் இருந்தால் சரி.

அடுத்த கட்டுரைக்கு