Published:Updated:

விவசாயிகள் போராட்டம்... ஜந்தர் மந்தரில் அனுமதி இல்லை! - டெல்லியை இணைக்கும் சாலைகளை முடக்க திட்டம்

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது.

மத்திய அரசால் அமல்படுத்தப்படவிருக்கும் புதிய விவசாய சீர்திருத்த மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் பல்வேறு விவசாய அமைப்பினர் தங்களின் கண்டனக் குரல்களை முன்னிறுத்திவருகின்றனர்.

இது குறித்த அறிவிப்பு வெளியான தொடக்க நாளிலிருந்தே பஞ்சாப் மாநிலத்தில் ஒருபுறம் விவசாயிகள் பல்வேறுவிதமான கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். மறுபுறம், பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் சிலர் விவாசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இந்தச் செயல்கள் பஞ்சாப் மாநிலத்தின் பா.ஜ.க நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

இந்தநிலையில் போராட்டத்தின் ஒரு பகுதியாக பஞ்சாப் தொடங்கி டெல்லி வரை பேரணியாகச் சென்று போராட்டத்தை நிகழ்த்த அகில இந்திய விவசாயிகள் அமைப்பு முடிவு செய்து ஹரியானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்து வர்ணக்கொடிகளுடனும், டிராக்டர், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மூலமும் பேரணியாகக் கிளம்பி, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் முன்னேறிவருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்கள்: அடக்குமுறைக்கு அஞ்சாத விவசாயிகள் போராட்டம்- இறங்கி வருமா மோடி அரசு?

கடந்த வியாழனன்று, ஹரியானா மாநிலத்தின் எல்லையில் பேரணியாகச் சென்ற விவசாயிகளை மறித்து போலீஸார் தடியடி நடத்தினர். அதைத் தொடர்ந்து, விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் போராட்டத்தை தொடர அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.

இதற்கு பதிலளிக்கும்விதமாக, உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், ``போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை மாநில எல்லையின் நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளவதால் போக்குவரத்து பாதிக்கப்படும். அதனால் போராட்டத்தை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள டெல்லி புராரி பகுதியிலுள்ள நிரங்கரி சமகம் மைதானம் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று விவசாயிகள் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு வேண்டுகோள் விடுத்தார்.

போராட்டம்
போராட்டம்

ஆனால், போராடக் குழுவினர் இதற்கு மறுப்பு தெரிவித்து டெல்லி எல்லைக்கு வெளியே தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய கிசான் அமைப்பின் முக்கிய நிர்வாகியான ஜோகீந்தர் சிங், ``மாநில எல்லைகளில் போராட்டங்களை நிகழ்த்துவதால் ஏற்படும் இடைஞ்சல்கள் குறித்து எங்களுக்கும் தெரியும். ஆனால், டெல்லி மாநகரில் வழக்கமாகப் போராட்டங்கள் நிகழும் இடமான ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டம் நிகழ்த்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், உள்த்துறை அமைச்சகம் இதற்கு மறுப்பு தெரிவித்து புராரி பகுதியில் இடம் ஒதுக்கியிருக்கிறது. அதனால் எங்கள் அமைப்பினரிடம் முழுமையாக ஆலோசித்த பின்னரே முடிவெடுப்போம். எங்கள் குழுவில் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலர் இதுவரை மாநில எல்லையை வந்தடையாததால் தாமதமாகும் என்று தெரிகிறது” என்றார்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

விவசாயிகளின் இந்தப் போராட்டம் குறித்து விவாதிக்க கடந்த வெள்ளிகிழமையன்று டெல்லி விரைந்த பஞ்சாப் அமைச்சரவைச் சேர்ந்த சுர்ஜித் குமார் ஜியானி, மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சந்திப்புக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சுர்ஜித் குமார் ஜியானி, ``இந்தியா எனும் ஜனநாயக நாட்டில் மக்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த முழு உரிமை உண்டு. அதனால் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளின் பாதுகாப்புக்காகவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்துகொள்ளும்விதமாகவும் புராரி பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. விரைவில், இந்தப் போராட்டத்துக்கு அரசாங்கத்திடமிருந்து நல்ல வகையில் பதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

எல்லையில் போலீஸாரின் தாக்குதல்களை மீறி உள்ளே நுழைந்த போராட்டக்காரர்களுள் ஒரு சில குழுவினர் ஏற்கெனவே புராரி பகுதியை அடைந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகிவருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முட்டிமோதும் விவசாயிகள், ஒடுக்கும் அரசு... டெல்லி போராட்டத்தில் என்ன நடக்கிறது? #DelhiChalo

இதற்கிடையே, ராம்லீலா மைதானத்துக்கு பதிலாக, நிரங்கரி மைதானத்தை ஒதுக்கியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள், டெல்லியின் எல்லையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர், தலைநகரான டெல்லியுடன் குருகிராம், காஜியாபாத் மற்றும் ஃபரிதாபாத் ஆகியவற்றை இணைக்கும் மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளை மறியல் மூலம் முடக்கத் திட்டமிட்டுள்ளனர். நேற்று வரை, சிங்கு எல்லை மற்றும் திக்ரி எல்லைகள் மட்டுமே விவசாயிகளால் தடுக்கப்பட்டது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு