Published:Updated:

`அத்தனைக்கும் காரணம் கீதாஜீவன்!'- எடப்பாடியை சந்தித்த தூத்துக்குடி தி.மு.க ஒ.செ.

முதல்வருடன் என்.கே. பெருமாள்!
முதல்வருடன் என்.கே. பெருமாள்!

விளாத்திகுளம் தொகுதியைப் பொறுத்தவரையில் தி.மு.க-வில் இருந்தால் எப்போதும் முன்னேற முடியாது என்ற நிலைப்பாட்டுக்கு வந்த பல சீனியர்கள் அ.தி.மு.க-வில் இணைய முடிவு செய்துள்ளதால் தி.மு.க-வின் பலம் குறைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் தற்போதுவரை நடந்த தேர்தல்களில் அ.தி.மு.க ஒன்பது முறை வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க-வின் செல்வாக்கு மிகுந்த தொகுதி என்பதால் இங்கு தி.மு.க-வின் செல்வாக்கு குறைவுதான். `கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. சீனியர்களுக்கு மரியாதை இல்லை’ எனக்கூறி வந்த விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தி.மு.க-வின் பொறுப்பாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட என்.கே.பெருமாள் தலைமையில் தி.மு.க-வினர் அ.தி.மு.க-வில் இணைந்துள்ளதால் தி.மு.க மேலும் வலு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

கட்சியினருடன் என்.கே.பெருமாள்
கட்சியினருடன் என்.கே.பெருமாள்

என்.கே.பெருமாள் நேற்று வரையில் தி.மு.க-வில் இருந்திருந்தாலும், தீவிர எம்.ஜி.ஆர் விசுவாசி. கடந்த 2001 – 2006 வரை இதே தொகுதியின் அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்தவர். அத்துடன் அ.தி.மு.க வடக்கு மாவட்டச் செயலாளராகவும் இருந்தார். இதே தொகுதியின் தற்போதைய அ.தி.மு.க எம்.எல்.ஏவான சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏவான மார்கண்டேயன் ஆகிய இருவரும் இவரிடம் அரசியல் கற்றவர்கள்.

இரண்டாவது முறை எம்.எல்.ஏ சீட் எதிர்பார்த்து கிடைக்காததால் அ.தி.மு.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்தார். தி.மு.க-வில் மாவட்ட அவைத் தலைவர் பதவி வகித்து வந்தவருக்கு, கடந்த சில நாள்களுக்கு முன்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டதால் அதிருப்தியில் அ.தி.மு.க-வில் இணைய முடிவெடுத்ததாக பேசப்பட்டது. இதுகுறித்து தி.மு.க வட்டாரத்தில் பேசினோம், ``தூத்துக்குடி மாவட்டத்தில் வடக்கு மாவட்ட தி.மு.க-வுக்கு உட்பட்ட விளாத்திகுளம் பகுதியில் தி.மு.க-வுக்கு பலம் இல்லை என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் சந்திப்பு
அமைச்சர் கடம்பூர் ராஜுவுடன் சந்திப்பு

மக்களவைத் தேர்தலுடன், இத்தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளராக தற்போதைய எம்.எல்.ஏ சின்னப்பனும், அ.ம.மு.க வேட்பாளராக ஜோதிமணியும், அ.தி.மு.க-வில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக முன்னாள் எம்.எல்.ஏ மார்கண்டேயன் ஆகிய மூன்று பேர் களமிறங்கியதால் அ.தி.மு.க-வின் வாக்குகள் மூன்றாகச் சிதறின.

தி.மு.க-வுக்கு மிகச் சாதகமான இந்த நிலையிலும், தி.மு.கவால் இத்தொகுதியில் வெற்றி பெற முடியவில்லை என்றால் தி.மு.க-வின் பலம் இங்கு எப்படி உள்ளது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மாவட்டப் பொறுப்பாளரான கீதாஜீவன் கட்சியில் கொடுத்த பணத்தை வெளியில் எடுக்கவில்லை என்று காரணம் கூறப்பட்டது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில், கனிமொழிக்கு விளாத்திகுளம் தொகுதியில 70,039 வாக்குகள் கிடைச்சுது. இதே வாக்குகள் ஜெயகுமாருக்கும் கிடைச்சிருந்தா, தி.மு.க ஜெயிச்சிருக்கும். போன தேர்தலில் தி.மு.க வேட்பாளர் பீமராஜ் பெற்ற 54,778 வாக்குகளைவிட இந்த முறை 13,736 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார் ஜெயகுமார். அ.தி.மு.க வாக்குகளின் மூன்று பிரிவு, கனிமொழிக்கு விழும் வாக்குகள் எப்படியும் நமக்கும் விழுந்திடும் என்ற நினைப்புதான் தோல்விக்குக் காரணம்.

அதேபோன்று இந்தத் தொகுதியிலுள்ள தி.மு.க சீனியர் நிர்வாகிகளை மாவட்டப் பொறுப்பாளரான கீதாஜீவன் கண்டுகொள்வதில்லை. தலைமைக்கு பலமுறை சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. அவரது தொகுதிக்கு மட்டும்தான் முக்கியத்துவம் தருகிறார். மற்ற இடங்களில் அவரது நடவடிக்கைகள் சிறப்பாக இல்லை. அவரது பொறுப்பில் உள்ள தொகுதிகளில் விளாத்திகுளம்தான் தி.மு.க பலம் குறைந்த தொகுதி. இங்குள்ள சீனியர்களை அரவணைத்துச் சென்றிருக்க வேண்டும். அப்போதுதான் கட்சி வளரும். ஆனால், கீதாஜீவன் தோல்விக்குப் பொறுபேற்காமல், சீனியர்களை மதிக்காமல் நிர்வாகிகளை மாற்றினால் கட்சி எப்படி பலம் பெறும்?

என்.கே.பெருமாள்
என்.கே.பெருமாள்

அவைத் தலைவராக இருந்த என்.கே.பெருமாளை மேற்கு ஒன்றிய பொறுப்பாளராக நியமித்தார்கள். மாவட்ட பதவியை எடுத்துக்கொண்டு ஒன்றிய பதவியைக் கொடுத்தார்கள். கட்சியில் இது அதிகாரம் உள்ள பதவியாகஅ இருந்தாலும், கீதாஜீவனுக்கு கீழ் பணியாற்ற அவர் விரும்பவில்லை. இந்த நிலையில்தான் பெருமாள், `நம்மல்லாம் எம்.ஜி.ஆர் காலத்து ஆளுங்க. மரியாதை இல்லாத இந்தக் கட்சியில் இருந்து என்ன பயன்? என் உயிர் பிரிஞ்சாக்கூட என் மேல அ.தி.மு.க கொடிதான் விழணும்' என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டார்.

பெருமாளிடம் அரசியல் படிச்ச எம்.எல்.ஏ சின்னப்பன், இதை அமைச்சர் காதுகளில் கொண்டு சேர்க்க.., அமைச்சர் ரகசியமாக நேரிலேயே பெருமாள் அண்ணாச்சியை சந்திச்சு கட்சியில இணையச் சொல்லி அழைப்பு விடுத்தார். பெருமாள் மட்டுமல்லாம அவருடன் அதிருப்தியில் இருக்கும் தி.மு.க-வினரும் இணையுற முடிவுல இருக்காங்க" என்றார்.

இது தொடர்பாக கீதா ஜீவனிடம் பேசினோம், ``என்.கே.பெருமாளுக்கு உரிய பொறுப்பு வழங்கப்படவில்லை என்பதிலோ, சீனியர்களுக்கு கட்சியில் மரியாதை இல்லை என்பதிலோ உண்மை இல்லை. அவருக்கு ஒன்றியப் பதவி வழங்கியது உண்மைதான். ஆனால், அவர் வகி்த்த அவைத் தலைவர் பதவி பறிக்கப்படவில்லை. இந்தப் பதவி கூடுதலாக தான் வழங்கப்பட்டது. அவைத் தலைவராக இருக்கும்போது அவரை அ.தி.மு.க-வினர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ஒன்றிய பொறுப்பு கொடுத்ததும் அமைச்சர்கள் சந்திக்கிறார்கள். பலம் குறைவான இடத்தில் பொறுப்பு கொடுத்ததுக்கு காரணம் அங்கு பலத்தைப் பெறுவதற்குதான்" என்றார்.

துணை முதல்வருடன் என்.கே பெருமாள்!
துணை முதல்வருடன் என்.கே பெருமாள்!

இந்த நிலையில் நேற்று என்.கே.பெருமாள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அ.தி.மு.க-வில் இணைந்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வத்தையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். ஏற்கெனவே பலம் குறைந்த தொகுதியில் தி.மு.க-வின் சீனியர் நிர்வாகிகள் கட்சி மாறுவது, அக்கட்சிக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக என்.கே.பெருமாளிடம் பேசினோம், ``நான் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகன். அ.தி.மு.க-விலிருந்து ஒரு கட்டத்தில் தி.மு.க-வுக்குச் சென்றேன். இப்போது எனக்கு அ.தி.மு.க-வில் இணைவதுதான் சரி எனப்பட்டது. வேறு காரணங்கள் எதுவும் இல்லை" என்பதோடு முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு