Published:Updated:

முகநூலில் தொடங்கிய யுத்தம்!- கைகலப்பு வரை சென்ற தஞ்சை பாபநாச அ.தி.மு.க - அ.ம.மு.க மோதல்

கட்சியை விட்டு சென்றதற்காக அ.ம.மு.க தரப்பு அன்வர் பற்றி முகநூலில் விமர்சனம் செய்து வந்தனர். அன்வர் ஒரு படி மேலே சென்று அ.ம.மு.கவினரைப் பற்றியும் பிரேம்நாத் பைரன் பற்றியும் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிட்டார்.

பாபநாசம்
பாபநாசம்

தஞ்சாவூர் பாபநாசத்தில் அ.ம.முக, அ.தி.மு.க பிரமுகர்களுக்கு இடையே முகநூலில் ஏற்பட்ட மோதல் பின்னர் கைகலப்பு வரை சென்று இருவரும் தாக்கிக்கொண்டுள்ளனர். இதில் அ.ம.மு.க பிரமுகர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேம்நாத் பைரன்
பிரேம்நாத் பைரன்

தஞ்சாவூர் அருகே உள்ளது பாபநாசம். இங்கு அ.ம.மு.கவின் நகரச் செயலாளராக இருப்பவர் பிரேம்நாத் பைரன் என்பவர். அக்கட்சியிலேயே சிறுபான்மை பிரிவில் பொறுப்பில் இருந்தவர் அன்வர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன் அ.ம.மு.கவிலிருந்து விலகி அ.தி.மு.கவில் இணைந்தார். இதனால் பிரேம்நாத் பைரனுக்கும், அன்வருக்கும் இடையே முகநூலில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அன்வர் அ.ம.மு.கவினரை தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி முகநூலில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில் பாபநாசம் ரயில்வே கேட் அருகே பிரேம்நாத் பைரன் அன்வரைச் சந்தித்து ஏன் இப்படி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கின்றனர். பின்னர் இருவருமே ஒருவர் மீது ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து அன்வர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அன்வர்
அன்வர்

இது குறித்து சிலரிடம் பேசினோம், ``கட்சியை விட்டு சென்றதற்காக அ.ம.மு.க தரப்பு அன்வர் பற்றி முகநூலில் விமர்சனம் செய்து வந்தனர். அன்வர் ஒரு படி மேலே சென்று அ.ம.மு.கவினரைப் பற்றியும் பிரேம்நாத் பைரன் பற்றியும் தொடர்ந்து தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி பதிவிட்டு வந்தார். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு காவல்துறையினருக்குக் கொடுத்த அழுத்தத்தால் போலீஸ் பிரேம்நாத் பைரனை மட்டும் கைது செய்துள்ளது. இந்தத் தகவல் அறிந்த அ.ம.மு.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் குழு பிரேம்நாத் பைரனுக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளனர்.

அன்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் போலீஸ் அவரை கைது செய்யவில்லை. அ.தி.மு.க தரப்பில் தினகரனின் கட்சியிலிருந்து பலர் விலகி மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்து வருகின்றனர். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத தினகரன் அணியினர் அடிதடியில் இறங்குவது சரியில்லை’ என்கிறார்கள்.

பாபநாசம்
பாபநாசம்

அ.ம.மு.கவினரோ நேற்று வரை எங்கள் பக்கம் இருந்து புகழ்ந்து விட்டு இன்று அங்கே சென்று சேர்ந்து கொண்டு எங்களைப் பற்றியும் கட்சியைப் பற்றியும் பேசுவது எந்த விதத்தில் நியாயம் என்கின்றனர். இரு தரப்பும் மோதிக்கொண்ட இந்தச் சம்பவம் பாபநாசம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றனர். பிரேம்நாத் பைரன் மீது கொலை முயற்சி, அத்துமீறி வீட்டில் நுழைவது, சிறு காயம் ஏற்படும் வகையில் தாக்கியது ஆகிய மூன்று வழக்குகள் பதியப்பட்டது. அன்வர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு பதியப்பட்டுள்ளது.